தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசிக்கப்பட்ட வாசகத்தை மையப்படுத்தி தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
“தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்தமுடியாது” (1 யோவான் 4,20) என்ற இறைச் சொற்களை சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கண்ணால் காண்போரை அன்புகூர இயலாதவர்கள், கற்பனை உலகில் அன்புகூர்வது போன்ற கனவில் வாழ்கின்றனர் என்று எடுத்துரைத்தார்.
நம் அயலவருக்காக, அவர் நமது எதிரியாகவே இருந்தாலும், அவருக்காக செபிப்பது, நாம் உண்மையில் அன்புள்ளவர்கள் என்பதன் முதல் அடையாளம் என்பதை தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
அதே வண்ணம், அடுத்தவர் மீது பொறாமைக் கொள்ளாமல், அவருக்கு தீங்கு நினையாமல் வாழ்வது, உண்மை அன்புள்ளவர்கள் வெளிப்படுத்தும் இரண்டாம் அடையாளம் என்றும், அடுத்தவரைக் குறித்து புறணி பேசாமல் இருத்தல் மூன்றாவது அடையாளம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று திருப்பலியில் வழங்கிய மறையுரையை அடிப்படையாகக் கொண்டு, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
“இவ்வுலகு சார்ந்த எண்ணங்களை, நம்பிக்கை சார்ந்த எண்ணங்கள் வெல்கிறது: என் அருகில் இருக்கும் சகோதரர், சகோதரிகளிடம் கடவுள் இருக்கிறார் என்பதே அந்த நம்பிக்கை” என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
Source: New feed