தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கின்றோம் (1 யோவா 1:3)
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுகூரும் வில்லிப்ரோத், இங்கிலாந்து நாட்டில் 658 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை தூய ஹில்கிஸ் என்பவர் ஆவார். வில்லிப்ரோத் தன்னுடைய பள்ளிக் கல்வியை ரிபோன் என்ற இடத்தில் கற்று வந்தார்.
அந்த சமயத்தில் இவருக்கு பெரிய பெரிய ஆளுமைகளுடனான அறிமுகம் கிடைத்தது. குறிப்பாக தூய வில்பிரெட், எக்பெர்ட், விக்பெர்ட் போன்றோருடனான அறிமுகம் வில்லிப்ரோத்திற்கு ஆன்மீகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டது. அதனால் இவர் குருவாக மாறி, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார்.
இவருடைய ஆர்வம் இவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ஆம், இவர் குருமடத்தில் சேர்ந்து, குருத்துவ வாழ்விற்கு தன்னையே தயார் செய்து, 688 ஆம் ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். குருப்பட்டத்திற்கு பிறகு இவர் மாணவப் பருவத்தில் நினைத்ததுபோன்று, கிழக்கு ஐரோப்பாப் பகுதிகளில் ஒன்றான நெதர்லாந்தில் உள்ள பிரீஸ்லாந்து பகுதிக்குச் சென்று, நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். இவர் செய்துவந்த நற்செய்திப் பணிக்கு அங்கிருந்த அரசர் பெபின் முழு ஆதரவும் தந்தார். இதனால் இவர் பலரையும் கிறிஸ்துவுக்கு கொண்டுவந்தார்.
ஐந்து ஆண்டுகள் அயராது செய்துவந்த நற்செய்திப் பணி இவரை உட்ரெக்ட் என்ற பகுதியின் ஆயராக உயர்த்தியது. அந்தப் பொறுப்பினை மிகவும் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட வில்லிப்ரோத், முன்பைவிட இன்னும் பலமடங்கு உத்வேகத்துடன் நற்செய்திப் பணியை செய்யத் தொடங்கினார். இப்படி எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், 716 ஆம் ஆண்டு, பிரீஸ்லாந்தின் வடபகுதியை ஆண்டுவந்த ராத்போத் என்ற மன்னன், தென்பகுதியில் படையெடுத்து வந்து, பெபின் அரசரையும் அவரோடு இருந்த பலரையும் கைது செய்தான். மேலும் நற்செய்திப் பணியைச் செய்து பலரையும் ஒடுக்கத் தொடங்கினான். ஆனால், ஆயர் வில்லிப்ரோத்த்தை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் மக்களிடத்தில் அவருக்கு அவ்வளவு ஆதரவு இருந்தது.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு பிரீஸ்லாந்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்துவந்த ராத்போத் 719 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்துபோனான். இதனால் நற்செய்திப் பணியாளர்களுக்கு இருந்த தடைகள் நீங்கின. ஆயர் வில்லிப்ரோத், தன்னோடு மேலும் பல நற்செய்திப் பணியாளர்களைச் சேர்த்துகொண்டு கிழக்கு ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக ஜெர்மனி, ஹாலந்து, டென்மார்க் லுசெம்பெர்க் போன்ற நாடுகளில் ஆண்டவர் இயேசுவினுடைய நற்செய்தியை அறிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளக் காரணமாக இருந்தார்.
இப்படி அயாரது நற்செய்திப் பணி செய்ததால், ஆயர் வில்லிப்ரோத்தின் உடல் நலம் குன்றியது. இதனால் இவர் 739 ஆம் அண்டு தன்னுடைய ஆவியை ஆண்டவரிடத்தில் ஒப்படைத்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய வில்லிப்ரோத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்து பார்த்து நிறைவுசெய்வோம்.
1. நற்செய்தியை அறிவிப்பதில் ஆர்வம் கொண்டிருப்போம்
தூய வில்லிப்ரோத்தின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, நற்செய்தி அறிவிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம்தான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. அவருடைய எண்ணமெல்லாம் எல்லா மக்களும் இயேசுவை அறிந்துகொண்டு, அவருக்கு உகந்த வழியில் நடக்கவேண்டும் என்பதுதான். அதற்காக அவர் அயராது பாடுபட்டார்.
தூய வில்லிப்ரோத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நற்செய்தியை அறிவிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கின்றோமா? அல்லது அறிவிக்கப்படுகின்ற நற்செய்தியை ஆர்வமாய் கேட்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் குருக்களும் இறையடியார்களும் அறிவிக்கின்ற நற்செய்தியை ஆர்வமாய் கேட்பதற்கு மனமில்லாமலே, வழியோர நிலம் போன்றோ அல்லது பாறை நிலம்போன்றோ இருக்கின்றோம்.
ஒரு பங்கில் குருவானவர் ஒருவர் நற்செய்தியை வாசித்துவிட்டு, மறையுரை ஆற்றத் தொடங்கினார். அவர் மறையுரைத் தொடங்கும்போது இவ்வாறு தொடங்கினார், “அன்பார்ந்த மக்களே, இன்றைய நற்செய்தியைப் பற்றிச் சொல்ல ஏராளமாய் இருக்கின்றது. ஆனால், எங்கிருந்து தொடங்குவது என்றுதான் ஒரே யோசனையாக இருக்கின்றது” என்றார். இதை முன்னாலிருந்து கேட்டுக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், “சுவாமி, நீங்கள் மறையுரையை முடிக்கும்போது வழக்கமாக ‘ஆமென்’ என்று சொல்லி சொல்வீர்களே, அதிலிருந்து தொடங்குங்கள்” என்றான்.
சிறுவன் விளையாட்டச் சொன்னாலும், இன்றைக்குப் பலருடடைய எண்ணம், ‘சாமியார் எப்போது பிரசங்கத்தை முடிப்பார்?’ என்பதாகவே இருக்கிறது. இது நாம் இறைவார்த்தைக்கு செவிகொடுக்கமாட்டோம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. இந்நிலை மாறி, நாம் இறைவார்த்தையை ஆர்வமாய் கேட்டு, அதன்படி வாழ்வது எப்போது?.
ஆகவே, தூய வில்லிப்ரோத்த்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவருடைய நற்செய்தியை ஆர்வமுடன் எடுத்துரைப்போம், அறிவிக்கப்படும் நற்செய்திக்கு ஆர்வமுடன் செவிமடுப்போம். அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed