அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனிதராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும், நான் ஆண்டவரில் களிகூர்வேன். என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன் (அபக்கூக்கு 3: 17-18)
வாழ்க்கை வரலாறு
அன்னையாம் திரு அவை இன்று தியோபன் வெனார்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள செயின்ட் லூப் என்ற இடத்தில் பிறந்தார். இவர் பீடச் சிறுவராக இருக்கும்போதே மறைசாட்சியாக உயிர்துறக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.
இவர் வளர்ந்து பெரியராகியபோது மறைபரப்பு நாடுகளுக்கு நற்செய்தி அறிக்கைச் செல்வோருக்கான குருமடத்தில் படித்து, 1852 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். பின்னர் இவர் ஹாங்காங்கிற்கு சென்று, அங்கு ஓராண்டுகாலம் தாங்கி மொழியையும் மருத்துவத்தையும் கற்றுக்கொண்டு, வியட்நாமில் உள்ள மேற்கு டோன்கிங் என்ற பகுதிக்குச் சென்று நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார்.
இவர் அறிவித்த நற்செய்தியை கேட்டு, பலரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். சிலர் இறைவனே இவர் உருவில் வந்துவிட்டார் என்று நினைத்து இவரை நல்லவிதமாய் கவனித்துக் கொண்டார்கள். இதனால் இவருக்கு நற்செய்தி அறிவிப்புப் பணி இன்னும் இலகுவானது. இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்க, இவர்மீது ஒருசிலர் பொறமை கொள்ளத் தொடங்கினார்கள். குறிப்பாக இவர் தங்கியிருந்த இடத்திற்கு பக்கத்தில் வசித்துவந்த ஒரு மனிதர் இவர்மீது பொறாமைப்பட்டு, அரசாங்கத்திடம் இவரைக் காட்டிக்கொடுத்தார். அதனால் அரசாங்கம் தன்னுடைய படைவீரர்களை அனுப்பி, இவரை 1861 ஆம் ஆண்டு கைதுசெய்தது. பின்னர் இவர் ஹனோய் என்ற இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கே கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டார்.
இவருடைய வழக்கை விசாரித்த நீதிபதி, இவரை கிறிஸ்துவை மறுதலிக்குமாறு சொன்னார். ஆனால் இவரோ, “கிறிஸ்துவை மறுதலிப்பதை விடவும் சாவதே மேல்” என்று தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இவருடைய நம்பிக்கையைக் கண்டு மிரண்டுபோன நீதிபதி, இவரை மூன்று நாட்கள் சிறையில் அடைத்து சித்ரவதை செய்துவிட்டு, அதன்பிறகு தலைவெட்டிக் கொள்ளுமாறு ஆணையிட்டார். அதன்படி இவர் மூன்று நாட்கள் சிறையில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டு, தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டார்.
கிறிஸ்துவுக்காக உயிர்நீத்த இவருக்கு 1988 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இவரைக் குறித்து ஆயர் ரெடோர்ட் சொல்லும்போது, “தியோபன் சங்கிலியால் கட்டி அடிக்கப்பட்டபோதும், ஒரு வானம்பாடியைப் போல மகிழ்ச்சியாகப் பாடி இறைவனைத் துதித்துக்கொண்டே இருந்தார்” என்று சொல்வார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய தியோபன் வெனார்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. ஆண்டவருக்கு சான்று பகர்ந்து வாழ்வோம்
தூய தியோபன் வெனார்டிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், அவருடைய சாட்சிய வாழ்வுதான். அவர் சிறுவயது முதலே ஆண்டவருக்கு தன்னுடைய இரத்தம் சிந்தி சான்று பகரவேண்டும் என்று விரும்பினார். அவர் விரும்பியதோடு மட்டுமல்லாமல், பெரியவனாக வளர்ந்தபோது அதைச் செய்தும் காட்டினார். நாமும் ஆண்டவர் இயேசுவுக்கு நம்முடைய வாழ்வால், வார்த்தையால் சான்றுபகர்ந்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நான் ஏன் ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து வாழவேண்டும் என்று ஒருசிலர் கேட்கலாம். இயேசு கிறிஸ்து இந்த உலகை விட்டுச் சென்றபோது, அதாவது விண்ணகம் சென்றபோது, தன்னுடைய சீடர்களுக்குக் கொடுத்த மிக முக்கியமான கட்டளை, “நீங்கள் உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்பதுதான். ஆகையால், நற்செய்தி அறிவிப்பதன் வழியாக அல்லது இயேசுவுக்குச் சான்று பகர்வதன் வழியாக, நாம் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றோம்.
இரண்டாவதாக, இயேசு தன்னுடைய உயிரை சிலுவையில் பலியாகத் தந்து, நம்மை மீட்டார். ஆகவே, அப்படிப்பட்டவருக்கு நாம் சான்று பகர்ந்து வாழ்வது நாம் செய்கின்ற கைமாறாகும்.
1950 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் உள்ள ஒரு பிரசித்த பெற்ற ஆலயத்தில் இருந்த திருசிலுவையை பெண்ணொருத்தி முத்தி செய்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் அவரிடம், “அம்மா! இந்த திருச்சிலுவையில் உள்ள இயேசுவின் பாதத்தை முத்தி செய்வதுபோல், நம் நாட்டுத் தலைவர் ஸ்டாலினின் பாதங்களை நீங்கள் முத்தி செய்வீர்களா?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், “இயேசுவைப் போன்று எனக்காக அவர் தன்னுடைய உயிரைத் துறக்கத் துணிந்தார் எனில், அவருடைய பாதங்களை நான் முத்தி செய்யத் தயார்” என்றார். அதற்கு அந்த மனிதரால் எதுவும் பேசமுடியவில்லை.
ஆம், இயேசு ஒருவர்தான் நமக்காகத் தன் இன்னுயிரைத் துறந்தார். ஆகையால், அவருக்கு நாம் சான்று பகர்ந்து வாழ்வதே நம்முடைய கடமையாகும்.
ஆகவே, தூய தியோபன் வெனார்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed