உலகின் பல நாடுகளில் தங்கள் நம்பிக்கைக்காக துன்பங்கள் அடையும் கிறிஸ்தவர்களுடன் நம் ஒன்றிப்பைக் காட்டும் வகையில், கத்தோலிக்கத் திருஅவையின் பல ஆலயங்களும், பொதுக் கட்டடங்களும் சிவப்பு வண்ணத்தில் ஒளிர்கின்றன என்று, அயர்லாந்து பேராயர் ஈமோன் மார்ட்டின் அவர்கள் கூறினார்.
துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, ‘சிவப்பு புதன் 2018’ என்ற ஹாஷ்டாக் குறியீட்டுடன், அயர்லாந்து தலத்திருஅவை, நவம்பர் 28, இப்புதனன்று, பல ஆலயங்களையும், பொது கட்டடங்களையும், சிவப்பு வண்ணத்தால் ஒளிர்வித்த வேளையில், பேராயர் மார்ட்டின் அவர்கள், புனித மாலக்கி ஆலயத்தில் வழங்கிய மறையுரையில், இவ்வாறு கூறினார்.
சீனா, இந்தியா, சவுதி அரேபியா, ஏமன், எரித்திரியா ஆகிய நாடுகள் உட்பட, 38 நாடுகளில், கிறிஸ்தவர்கள், பெருமளவு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதை, பேராயர் மார்ட்டின் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
அயர்லாந்து நாட்டிலும், 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் பல அருள்பணியாளர்களும், துறவியரும், பொது இடங்களில் கொடுமைகளுக்கு உள்ளானதை, தன் மறையுரையில் எடுத்துரைத்த பேராயர் மார்ட்டின் அவர்கள், இத்தகைய துன்பங்களால் புடமிட்டப்பட்டுள்ள அயர்லாந்து, தற்போது, ஏனைய நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்க அழைக்கப்படுகிறது என்று கூறினார்.
இரத்தம் சிந்தி ‘சிவப்பு மறைசாட்சியம்’ வழங்குவோரைப் போல, தங்கள் மத உரிமைகளை பல வழிகளில் இழந்து ‘வெள்ளை மறைசாட்சியம்’ வழங்குவோரையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய எண்ணத்தை, பேராயர் மார்ட்டின் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
Source: New feed