சவால்களை எதிர்கொள்ளாத மற்றும் பயங்கள் நிறைந்த வாழ்வு வாழ்பவர், கிறிஸ்தவர் அல்ல என்று, ஆயிரக்கணக்கான இத்தாலிய மறைமாவட்ட விசுவாசிகளிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் இத்தாலியின் Ugento-Santa Maria di Leuca, Molfetta-Ruvo-Giovinazzo-Terlizzi ஆகிய இரு மறைமாவட்டங்களைச் சார்ந்த ஏறத்தாழ 6,500 விசுவாசிகளை, இச்சனிக்கிழமை நண்பகலில் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நாம் அமைதியாக உறங்கிக்கொண்டு இருப்பதற்கல்ல, மாறாக, துணிச்சல்மிக்க கனவுகள் காண்பதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறினார்.
மனித வாழ்வு, பாதுகாப்பான துறைமுகங்களில் முடங்கிவிடக் கூடாது, மாறாக, அது எப்போதும் விரிந்த கடலாக அமைய வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, படகுகள் நிறுத்தப்படும் இடங்களை மேற்பார்வையிடுகின்றவர்கள் அல்லது அவற்றுக்குப் பாதுகாவலர்களாக வாழவேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்றார்.
கலங்கரை விளக்காக, நம்பிக்கையும், திறமையும் நிறைந்த கடல் பயணிகளாக, ஆண்டவரின் வார்த்தையில், வாழ்க்கை வலைகளை வீசி, அவரின் வழிகளைப் பின்செல்ல வேண்டும் என்றும், இத்தாலிய விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அருள்பணியாளர் Tonino Bello அவர்களையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சோம்பேறிகளாக்கும் வசதிகளிலிருந்தும், ஆன்மாவை நோயாளியாக்கும் உலகப்போக்கினின்றும், ஆழ்துயரத்திற்கு உட்படுத்தும் சுயஅனுதாபத்திலிருந்தும் விடுபட்டு, நற்செய்தியின் அழைப்பை ஏற்போம் என்றும் கூறினார்.
திருவருகைக் காலத்தைத் தொடங்கும் நாம், ஆண்டவர் நம் வாழ்வில் நுழைவதற்கு அனுமதிப்போம், அப்போது, உண்மையான புதினங்கள் நம் வாழ்வை வந்தடையும் எனவும், திருவருகைக் காலத்தை வாழ்வது, ஆண்டவரின் நற்தூண்டுதல்களை ஏற்பதாகும் எனவும், இக்காலம், நம்பிக்கை மற்றும் ஆறுதலின் காலம் என்றும், திருத்தந்தை கூறினார்.
Source: New feed