அர்ச்சியசிஷ்டவர்கள் பூசையைப் பற்றிப் பேசும்போது தவிர வேறு ஒருபோதும் மிகுந்த வாய்ச்சாலகத்தோடு பேசியதில்லை. இந்த உத்தம பக்திக்குரிய காரியத்தைப் பற்றிப் போதுமான அளவுக்கு எடுத்துரைக்க அவர்களால் முடிந்ததேயில்லை, ஏனெனில், அர்ச். பொனவெந்தூர் கூறுவது போல, பூசையின் அதிசயங்கள் வான மண்டலங்களின் நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கும், உலகின் கடற்கரை களிலுள்ள மணற்துகள்களின் எண்ணிக்கைக்கும் சமமானவையாக இருக்கின்றன. இந்த தெய்வீகப் பலியில் பங்குபெறுபவர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களும், ஆசீர்வாதங்களும், நன்மைகளும் மனித கற்பனைக்கும் எட்டாதவை. திவ்விய பலிபூசையே உலகின் மிகப் பெரும் அதிசயமாக இருக்கிறது. பூமியின் மீது அதற்கு சமமான எதுவும் இல்லை, மோட்சத்திலும் அதைவிடப் பெரியது எதுவுமில்லை. அதற்கு அடுத்த மிகப் பெரும் அதிசயம் திவ்விய பலி பூசைக்கு கத்தோலிக்கர்கள் காட்டும் அசட்டைத்தனமும், அதைப் பற்றிய அவர்களது அறியாமையும் ஆகும். இவ்வளவு அதிகமான கத்தோலிக்கர்கள் பூசைக்குப் போகாமல் இருப்பது எப்படி சாத்தியமாகிறது?
மாபெரும் கல்வாரிப் பலி அவர்களுடைய வீடுகளுக்கு மிக அருகில், ஏறக்குறைய அவர்களுடைய வாசல்களுக்கு அருகிலேயே ஒப்புக்கொடுக்கப்படுகிறது. ஆனால் அதில் பங்கு பெற இயலாத அளவுக்கு அவர்கள் அளவுக்கு மீறிய சோம்பலுக்கு அடிமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்! கல்வாரிப் பலியா?! ஆம், ஏனெனில் திவ்விய பலிபூசை நிஜமாகவும், உண்மையாகவும் திருச்சிலுவையின்மீது சேசுநாதர் அடைந்த மரணமாகவே இருக்கிறது. தங்கள் பொறுப்பில் இருப்பவர்களின் மனங்களையும், இருதயங்களையும் பூசையின் அதிசயங்களைக் கொண்டு நிரப்பி விடுவது தாய்மார்கள், ஞான உபதேசிமார், ஆசிரியர்கள் போன்றவர்களின் கடமையாக இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏன் இதைச் செய்வதில்லை? பரிசுத்த திரிதெந்தின் பொதுச்சங்கம் இதைக் குருக்களுக்குக் கடமையாக்குகிறது. அனுதினப் பூசை காண்பதில் அலட்சியமாயிருக்கிற கத்தோலிக்கர்கள், பீடத்தின் மீது கடவுள் வந்து பிறப்பதையும், அவர் கல்வாரியில் சிலுவையின் மீது மரித்தது போல, பீடத்தின் மீதும் மரிப்பதையும் உண்மையில் விசுவசிக்கவில்லையா என்று ப்ரொட்டெஸ்டாண்ட் சபையினர் அவர்களிடம் கேட்கக்கூடும்.
உண்மையில் இவற்றை அவர்கள் விசுவசிக்கிறார்கள் என்றால், ஏன் அவர்கள் பூசையில் பங்கு பெறுவதில்லை? பூரண இரக்கமும், நன்மைத்தனமும் உள்ளவராகிய சர்வேசுரன் கிறிஸ்தவர்களின் பலிபீடங்களின் மீது வருகிறார் என்பதை வெது வெதுப்பும் அசட்டைத்தனமும் உள்ளவர்களாகிய கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில்லையா என்று தம் காலத்தைச் சேர்ந்த அஞ்ஞானிகளும், புறஜாதியாரும் அவர்களிடம் கேட்டதாக அர்ச். அகுஸ்தீனார் சொல்கிறார். நீங்களோ கிறீஸ்தவர்களே, பொய்த் தேவர்களை நாங்கள் ஆராதிப்பதாக எங்களைக் குற்றஞ்சாட்டுகிறீர்கள், ஆனால் குறைந்த பட்சம் அவர்கள் தெய்வங்கள் என்றாவது நாங்கள் நம்புகிறோம், அவர்களுக்கு சங்கை செய்கிறோம்; ஆனால் நீங்களோ , மெய்யங்கடவுள் என்று நீங்களே அழைக்கிற அவரை நிந்தித்துத் தள்ளுகிறீர்கள் ! எந்த புத்தியுள்ள, ஞான வெளிச்சம் பெற்ற கிறீஸ்தவனும் பூசை என்பது என்ன என்பதை மட்டும் அறிந்திருப்பான் என்றால், பூசை காணாமல் ஒருநாள் கூட கழிந்து போக அனுமதிக்க மாட்டான்! அர்ச். லூயிஸம், திவ்விய பலியூசையும் தமது இராச்சியம் முழுவதிலுமுள்ள எந்த மனிதனையும் விட அதிகக்கடுமையாக உழைத்தவரும், பிரான்ஸை ஆண்ட மன்னர்களிலேயே மிகச் சிறந்தவர்களில் ஒருவரும், மிகுந்த மகிமையுள்ள அரசருமான லூயிஸ், ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று பூசைகள் காண தமக்கு நேரம் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்! இவ்வளவு அதிக பூசைகள் காண்பதன் மூலம் அவர் தம்மையே களைப்பாக்கிக் கொள்வதுடன் தம் நேரத்தையும் வீணடிக்கிறார் என்று அவருடைய அரசவையினரில் சிலர் அவரிடம் கருத்துத் தெரிவித்தபோது, ‘நான் இவ்வுலகத்தின் கடந்து போகிற இன்பங்களுக்குப் பின்னால் ஓடுவதிலோ, அல்லது ஆடம்பரமான விருந்துகளில் என் நண்பர்களோடு உல்லாசமாய் இருப்பதிலோ, அல்லது ஒவ்வொரு நாளும் நாடக அரங்குகளுக்கும், கேளிக்கை விடுதிகளுக்கும் செல்வதிலோ பல மணி நேரத்தை வீணடித்தால், வெறும் இன்பத்திற்காக அளவுக்கு அதிகமான நேரத்தைச் செலவிடுவதாக உங்களில் யாரும் முறையிட மாட்டீர்கள்” என்று அவர் பதிலளித்தார்.
அவரே மேலும் தொடர்ந்து, ”என் நல்ல நண்பர்களே, பூசை காண்பதன் மூலம் நான் எனக்கென்று எண்ணிலடங்காத ஆசீர்வாதங்களை உறுதிப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி, என் இராச்சியத்திற்கும் மிக முக்கியமான நன்மைகளைப் பெற்றுத் தருகிறேன், வேறு எந்த வழியிலும் என் நாட்டிற்கு நான் செய்யக் கூடிய நன்மைகளை விட அதிகமான நன்மைகளை பக்தியோடு பூசைகள் காண்பதன் மூலம் நான் அதற்குப் பெற்றுத் தருகிறேன்!” என்று கூறினார். அர்ச். லூயிஸின் இந்த பதிலை, ஒவ்வொரு நாளும் எவ்வளவோ எளிதாக பூசை காண வாய்ப்புள்ளவர்களும், ஆனால் அப்படிச் செய்யாதவர்களுமாகிய ஆயிரமாயிரம் பக்தியார்வமற்ற, அசட்டைத்தனமுள்ள கிறிஸ்தவர்களிடம் இன்று நாம் கூறலாம். பூசை காண்பதற்காக அவர்கள் ஒரு பெரிய பரித்தியாகத்தைச் செய்ய வேண்டியிருந்தாலும் கூட, தாங்கள் எதிர் பார்த்ததற்கும் மேலான மிகப்பெரும் ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் அவர்கள் பெற்றிருப்பார்கள். ஆனால் உண்மையைச் சொல்வதானால், பலர் எந்தப் பரித்தியாகமும் செய்ய வேண்டிய தேவையே இன்றி பூசைகாண முடியும். அல்லது இதற்காக அவர்கள் ஒரு மிகச் சிறிய பரித்தியாகம் செய்ய வேண்டியிருக்கலாம். அப்படியிருந்தும், இந்த தெய்வீகப் பலியை அலட்சியம் செய்வதாகிய அவர்களுடைய குற்றம் உண்மையிலேயே புரிந்து கொள்ள இயலாததாக இருக்கிறது! இவ்வளவு அதிகமான கத்தோலிக்கர்கள் அனுதினப் பூசை காண்பதை அலட்சியம் செய்வதற்கு, அவர்களுடைய பரிதாபத்திற்குரிய அறியாமை மட்டும்தான் காரணமாக இருக்க முடியும்! அவர்கள் பூசை காணும் ஒரு நாள், ஓராயிரம் நாட்களுக்குத் தகுதியானதாக ஆகிவிடும், அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய வரப்பிரசாதங்களும், நன்மைகளும் அவ்வளவு அற்புதமானவையாக இருக்கும். அவர்களுடைய நேரம் வீணாவதற்குப் பதிலாக, அவர்களுடைய வியாபாரம் அல்லது தொழில் முயற்சி அதிகமாக வளர்ச்சியடையும், செழிப்படையும். வேறு எந்த விதத்திலும் பெற்றுக்கொள்ள முடியாத பெரும் மகிழ்ச்சியின் ஓர் உயர்ந்த நிலையை அவர்கள் சென்றடைவார்கள்!
Source: New feed