
தம் மக்களைத் தேடி வந்து விடுவித்தருளினார்”
இப்படியும் ஓர் அரசர்:
ஸ்காட்லாந்து மக்களுக்குப் பொற்கால ஆட்சியை வழங்கியவர் ஐந்தாம் ஜேம்ஸ். இவரால் மக்களுக்கு எப்படிப் பொற்கால ஆட்சியை வழங்க முடிந்தது? என்ற கேள்வி எழலாம்.
இவர் சில காலத்திற்கு வெளிநாட்டுப் பயணம் போய் வருவதாகச் சொல்லிவிட்டுத் தனது அரச உடையைக் களைந்துவிட்டு, சாதாரண ஒரு விவசாயியைப் போன்று மாறுவேடம் பூண்டுகொண்டு மக்கள் நடுவில் பணியாற்றுவார். அப்போது அவர்கள் தன்னைப் பற்றி – அரசரைப் பற்றி – வளர்ச்சிக்குரிய ஏதாவது சொன்னால், அதைத் தம் கருத்தில் எடுத்துக்கொண்டு, அரண்மனைக்குத் திரும்பி வந்து செயல்படுத்துவார். இதனாலேயே அவரால் மக்களுக்குப் பொற்கால ஆட்சியை வழங்க முடிந்தது.
ஆம், ஸ்காட்லாந்து அரசர் ஐந்தாம் ஜேம்ஸ் இன்று இருக்கின்ற ஒருசில அரசர்களைப் போன்று அல்லது தலைவர்களைப் போன்று அல்லாமல், மக்களைத் தேடி வந்தார். அவர்களிடம் இருக்கின்ற குறை நிறைகளைக் கேட்டு, அவற்றைச் செயல்படுத்தி நல்லதோர் ஆட்சியை வழங்கினார். இன்றைய இறைவார்த்தை, மெசியா தம் மக்களைத் தேடி வந்து விடுவித்தருளினார் என்று வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தனது பிரிவின்முறை வந்தபோது கடவுளின் திருமுன் பணியாற்றச் சென்ற செக்கரியாவின் முன்பாகத் தோன்றிய ஆண்டவரின் தூதர் கபிரியேல் சொன்ன வார்த்தைகளை அவர் நம்பாததால் பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்படிப்பட்டவர் தன் மனைவி எலிசபெத்து ஓர் குழந்தையைப் பெற்றேடுத்ததும், மீண்டுமாகப் பேசும் ஆற்றலைப் பெறுகின்றார். அப்போது அவர் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டவராய், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில், அவர் தம் மக்களைத் தேடி வந்து விடுவித்தருளினார்” என்று பாடுகின்றார்.
செக்கரியா பாடுகின்ற பாடல், கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை உறுதி செய்வதாய் இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இறைவாக்கினர் நாத்தான் வழியாக, “உமக்குப் பிறக்கும் உன் வழித் தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்” என்கிறார்.
ஆம், கடவுள் தாவீதிடம், அவனது அரசை நான் நிலை நாட்டுவேன் என்றார். அதுதான் மெசியாவாம் இயேசுவின் வழியாக நடந்தது. அதனால் கடவுள் தாம் கொடுத்த வாக்குறுதிக்கேற்ப நம்மைத் தேடி வந்து மீட்டது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய செயல். எனவே, நம்மைத் தேடி வந்து மீட்ட ஆண்டவரை நாம் போற்றிப் புகழ்வோம்.
சிந்தனைக்கு:
கடவுள் தம் மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. அதனால் நாம் அவரைப் பற்றிக் கொள்வோம்.
கடவுள் ஒவ்வொன்றையும் அதற்குரிய காலத்தில் செய்து முடிக்கின்றார்.
கடவுள் நம் வாழ்வில் செய்த நன்மைகளுக்காக அவரைப் போற்றிப் புகழ்வோம்.
இறைவாக்கு:
‘உடைந்த உள்ளாத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்’ (திபா 34: 18) என்று தாவீது பாடுவார். கடவுள் நம்மைத் தேடி வந்து, நம் நடுவில் இருக்கின்றார் என்பதை உணர்ந்தவர்களாய் அவருக்கு ஏற்புடையவற்றை நாம் நாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed