நமது திருத்தலங்கள், ஆழமான, அதே வேளையில், எளிமையான நம்பிக்கையை நம்மில் உருவாக்கும் இடங்கள் என்றும், இவை குறித்து குழந்தைப் பருவம் முதல் நாம் பயின்று வருகிறோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு கருத்தரங்கின் உறுப்பினர்களிடம் கூறினார்.
கத்தோலிக்கத் திருத்தலங்களின் பொறுப்பாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கென, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை, நவம்பர் 27, இச்செவ்வாய் முதல், 29 இவ்வியாழன் முடிய, வத்திக்கானில் ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட 600க்கும் அதிகமான பங்கேற்பாளர்களை, நவம்பர் 29, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
திருத்தலங்களின் வசதிகளைப் பெருக்குவதைவிட, கடினமான பயணத்தை மேற்கொண்டு அங்கு வந்து சேரும் திருப்பயணிகளை வரவேற்பது மிகவும் முக்கியம் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
கத்தோலிக்கத் திருஅவையில் உருவாக்கப்பட்டுள்ள பெரும்பாலான திருத்தலங்கள் அன்னை மரியாவின் திருத்தலங்கள் என்பதை, தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அன்னையைத் தேடி வரும் குழந்தைகள் போல, திருப்பயணிகளை உணரவைப்பது முக்கியம் என்று எடுத்துரைத்தார்.
அனைத்திற்கும் மேலாக, திருத்தலங்கள், செபத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள மையங்கள் என்பதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபிப்பதற்குரிய சூழலை உருவாக்குவது, திருத்தலங்களின் பொறுப்பாளர்கள் மேற்கொள்ளவேண்டிய முதன்மையான கடமை என்று வலியுறுத்திக் கூறினார்.
பெரும்பாலான திருத்தலங்களை நாடிவரும் மக்கள் தங்கள் உள்ளத்தின் பாரங்களையெல்லாம் இறக்கி வைக்க அங்கு வருவதால், ஒப்புரவு அருளடையாளத்தை அவர்கள் பெறுவதற்குரிய வசதிகள் எப்போதும் அவர்களுக்கு கிடைக்கும்படி செய்வதும் ஒரு முக்கிய கடமை என்று திருத்தந்தை தன் உரையில் கூறினார்.
ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கும் அருள்பணியாளர்கள், நீதிபதிகளாக செயல்படாமல், இரக்கம் மிகுந்த பணியாளர்களாக செயல்படுவது, திருத்தல அனுபவத்தை இன்னும் ஆழப்படுத்தும் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
திருத்தலத்தின் பொறுப்பாளர்கள் அனைவரையும் அன்னை மரியா வழிநடத்தவும், அவர்கள் ஆற்றும் மிக பொறுப்பான பணிகள், நல்ல பலன்களை அளிக்கவும், தன் ஆசீரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு திருத்தலத்திலும் தனக்காக செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கத்தோலிக்கத் திருத்தலங்களின் பொறுப்பாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கென, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பன்னாட்டுக் கருத்தரங்கு, முதன்முறையாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: New feed