லவீனங்கள் மற்றும் மரணத்தினின்று நம்மை உயிர்பெற்றெழச் செய்யும் தூய ஆவியாருக்கு வாழ்வில் இடம் ஒதுக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார்.
வத்திக்கானில், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், ஏப்ரல் 30, இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில், ‘ஒருவர் எப்படி மறுபடியும் பிறக்க முடியும்?’ என, நிக்கதேம் அவர்கள், இயேசுவிடம் கேட்ட கேள்வியை (யோவா.3:7) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் தூய ஆவியாரின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.
இந்நாளைய திருப்பலியின் நற்செய்திப் பகுதியிலிருந்து (யோவா.3:7-15) தன் மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, கடவுளின் வல்லமையால் மட்டுமே நம் பாவநிலையிலிருந்து, மறுபிறப்பு அடைய இயலும், இதற்காகவே, நம் ஆண்டவர் தூய ஆவியாரை நமக்கு அனுப்பினார் என்று உரைத்தார்.
நிக்கதேம் அவர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி போன்று நாமும் கேட்கின்றோம், இக்கேள்விக்கு, இயேசு மேலிருந்து மறுபடியும் பிறக்க முடியும் என்பது பற்றிப் பேசுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, ஆண்டவரின் உயிர்ப்புக்கும், மறுபடியும் பிறப்பதற்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றிக் கூறினார்.
ஆண்டவரின் உயிர்ப்பு பற்றிய செய்தி, தூய ஆவியாரின் கொடை என்றும், உண்மையில், உயிர்த்த இயேசு, தம் திருத்தூதர்களுக்கு முதன்முறையாகத் தோன்றியவேளையில், தூய ஆவியாரைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் கூறினார், தூய ஆவியார் இன்றி நம்மால் எதையும் செய்ய இயலாது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
Source: New feed