நவம்பர் 18, வரும் ஞாயிறன்று, சிறப்பிக்கப்படும் உலக வறியோர் நாளையொட்டி, அவர்களுடன் இணைந்து, காலை திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 6000 ஏழைகளுடன் அமர்ந்து, மதிய உணவருந்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவுற்ற இரக்கத்தின் யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்த உலக வறியோர் நாள், கடந்த ஆண்டு முதன் முறையாக சிறப்பிக்கப்பட்டது.
புதிய நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீட அவையால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இந்த உலக வறியோர் நாள் நடவடிக்கைகள், வரும் ஞாயிறன்று, உரோம் நகர் புனித பேதுரு பேராலயத்தில் மட்டுமல்ல, உலகின் அனைத்து பங்குதளங்களிலும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிறன்று காலை, 10 மணிக்கு, உரோம் நகர் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியில், ஏறத்தாழ 6000 வறியோரும், அவர்களுடன் பணிபுரியும் தன்னார்வத் தொண்டர்களும் கலந்து கொள்வதுடன், திருப்பலியைத் தொடர்ந்து, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் திருத்தந்தையுடன் இடம்பெறும் மதிய விருந்திலும் கலந்து கொள்வர்.
இதற்கிடையே, உலக வறியோர் நாளை முன்னிட்டு, இத்திங்கள் முதல், இவ்வாரம் முழுவதும், இலவச மருத்துவ முகாமை புனித பேதுரு வளாகத்தில் நிறுவி, மருத்துவ உதவிகளை வறியோருக்கு தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை வழங்கி வருகிறது, திருப்பீடம்.
Source: New feed