இவ்வாண்டின் கோடைக்காலத்தின் பெரும்பாலான நாட்கள், இத்தாலிக்கு மிக மிதமாகவே இருந்தன. தற்போது அதுவும் நிறைவுற்று, குளிர்காலத்தின் ஆரம்பத்தை தெரிவிக்கும் விதமாக, காலை நேரங்களில் இதமான குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்க, தூய பேதுரு வளாகத்திலேயே திருப்பயணிகளைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த சில வாரங்களாக, பத்துக் கட்டளைகள் குறித்த தொடரை தன் புதன் மறைக்கல்வி உரைகளில் வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், ‘ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு’ என்ற இறைக்கட்டளை குறித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அன்பு சகோதரர் சகோதரிகளே, பத்துக் கட்டளைகள் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, ”இறைவனின் நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு’ என்ற கட்டளை குறித்து நோக்குவோம். விவிலியத்தைப் பொறுத்தவரையில் இந்த ஓய்வு நாள் என்பது, வழக்கமான வேலைகளிலிருந்து தப்பிச் செல்வதோ, அல்லது பொழுதுபோக்கிற்கான மாற்று வழியோ அல்ல, மாறாக, கடவுளைப் பின்பற்றுவதற்கான ஒரு கட்டளையாகும். ஆம். இறைவனும் ஏழாம் நாள், தம் பணிகளிலிருந்து ஓய்வெடுத்து, தம் படைப்பின் நன்மைத்தனம் குறித்து சிந்தித்தார். நம்முடைய ஓய்வும் இதைப் போன்று, மகிழ்ச்சி, பாராட்டு, மற்றும், வாழ்வின் கொடைக்காக நன்றியறிவிப்பிற்கான ஒரு வாய்ப்பாக இருக்கவேண்டும். அது, இறைவனே நமக்கு வழங்கியுள்ள, திருநற்கருணைக் கொண்டாட்டம் எனும் உயரிய நன்றியறிவிப்புச் செயலில், தன் உச்சத்தைக் காண வேண்டும். வாழ்வின் பிரச்சனைகளிலும், சவால்களிலும் தங்கியிருந்து, அதிலிருந்து தப்பிச் செல்ல முயல்வது, என்ற எதிர்மறை எண்ணங்களிலேயே வாழ்வது என்பது எளிதாக இருக்கின்றது. ஆனால், மறுபுறமோ, படைப்பிற்கும் வாழ்வின் நன்மைத்தனத்திற்கும் நன்றியுரைக்க இறைவனால் விடப்படும் அழைப்பை ஏற்பது என்பது, மனச்சான்றின் தேர்வுக்கு விடப்படும் ஒரு நிலையாகி விட்டது. அன்பைப்போல் நன்மைத்தனமும், ஒருபோதும் நம்மீது திணிக்கப்படுவதில்லை. அது சுதந்திரமாக தேர்வுச் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். வார ஓய்வு நாளில் நாம், நம் வாழ்வு குறித்தும், நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் குறித்தும் தியானிக்கிறோம். கடவுளின் பராமரிப்பு அக்கறைக் குறித்து அறிந்தவர்களாக, இறுதியில் அனைத்தும் அருளாகவே இருக்கும் என்பதைத் தெரிந்தவர்களாக, நாமும் இயேசுவைப்போல் இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிப்படுத்தப்படுவோமாக. திருப்பா ஆசிரியர் உரைப்பதுபோல், இறைவனில் மட்டுமே நம் ஆன்மாக்கள் இளைப்பாறும்.
இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : இறைவனின் நாளை தூயதாக காத்தல்
September 5, 2018
One Min Read