இலத்தீன் அமெரிக்க கண்டத்திலிருந்து வந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கண்டத்திற்கு உரிய, மரியன்னை பக்தி, வறியோர் மீது கவனம், மக்களிடையே திகழும் இறையியல் என்ற சிறப்பு அம்சங்களை தன்வயப்படுத்தியுள்ளார் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஆயர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் Marc Ouellet அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலமைப் பணியைக் குறித்து, வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் தலைவராகவும் பணியாற்றிவரும் கர்தினால் Ouellet அவர்கள், கடந்த ஆண்டு, ‘பெண்களும் இலத்தீன் அமெரிக்க சமுதாயமும்’ என்பது, இத்திருப்பீட அவையின் ஆண்டு கருத்தாக தெரிவு செய்யப்படுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முக்கிய காரணம் என்று எடுத்துரைத்தார்.
இலத்தீன் அமெரிக்க கண்டம், இவ்வுலகிற்கு நம்பிக்கை தரக்கூடிய ஊற்றாக உள்ளது என்பதை தன் பேட்டியில் குறிப்பிட்ட கர்தினால் Ouellet அவர்கள், இந்தக் கண்டத்திலிருந்து, தலைமைப் பொறுப்பிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கண்டத்திற்கே உரிய கலாச்சாரத்தையும், தான் சார்ந்துள்ள இயேசு சபையின் நிறுவனர், புனித இஞ்ஞாசியாரின் தனி வரத்தையும் தன் பணியில் வெளிப்படுத்துகிறார் என்று கூறினார்.
அன்னை மரியாவின் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுள்ள தனி பக்தி, அவரது மறையுரைகள், மடல்கள், அனைத்திலும் வெளியாவதோடு, ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்தையும் அன்னை மரியாவின் பாதுகாப்பில் அவர் ஒப்படைப்பதை தெளிவாகக் காணமுடிகிறது என்று, கர்தினால் Ouellet அவர்கள், எடுத்துரைத்தார்.
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர், புலம் பெயர்ந்தோர், வறியோர், அனைவர் மீதும் திருத்தந்தை காட்டும் தனி அக்கறை குறித்து, இப்பேட்டியில் கேள்வி எழுந்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த இரக்கத்தின் யூபிலி ஆண்டைக் குறித்தும், அன்னியரை வரவேற்பது, ஐரோப்பாவை வாழ வைக்கும் என்று அவர் வெளியிட்டுள்ள கருத்தையும் கர்தினால் Ouellet அவர்கள், பதிலாக வழங்கினார்.
Source: New feed