திருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் நாட்டு மக்கள் மீது தன் அருகாமையை வெளிப்படுத்தும் விதமாக, அந்நாட்டு மாணவர்களுக்கு வழங்கியுள்ள கல்வி உதவித்தொகைக்கு, அந்நாட்டு மக்கள் நன்றி தெரிவித்தனர் என்று, லெபனான் திருப்பீடத் தூதர் பேராயர் Joseph Spiteri அவர்கள் அறிவித்தார்.

திருத்தந்தை லெபனானுக்கு அனுப்பிய உதவித்தொகை குறித்து, வத்திக்கான் செய்தித்துறைக்கு, தொலைப்பேசி வழியாகப் பேட்டியளித்த பேராயர் Spiteri அவர்கள், தங்களின் நாடு கடினமான சூழலை எதிர்கொள்ளும் இவ்வேளையில், திருத்தந்தை வெளிப்படுத்தியுள்ள தோழமையுணர்வு குறித்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர் என்று கூறினார்.

தனக்கு முந்தைய திருத்தந்தையர் போலவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், லெபனான் நாடு மீது எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்றும், லெபனானில் இளைஞர்களுக்கு கல்வி வழங்குதல் அடிப்படைத் தேவை என்றும் கூறினார், பேராயர் Spiteri.

லெபனான் நாடு கொண்டிருக்கும் சிறந்த கல்வி அமைப்பு, மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்கும் தூண்டுதலாக உள்ளது என்றும், அந்நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும், சமுதாய நெருக்கடிகளால் கல்வி அமைப்பு மிகவும் துன்புறுகின்றது என்றும், பேராயர் Spiteri அவர்கள் கூறினார்.

லெபனானின் உயர்தர கல்வி அமைப்பைப் பேணிக்காப்பது அந்நாட்டின் மற்றும் இளைஞர்களின் வருங்காலத்திற்கு மிக முக்கியம் என்பதை வலியுறுத்திய பேராயர் Spiteri அவர்கள், பல இளைஞர்கள் படித்து வாழ்வில் முன்னேற விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.

ஏறத்தாழ 68 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட லெபனானில், 60 விழுக்காட்டினர் முஸ்லிம்கள், 34 விழுக்காட்டினர் கிறிஸ்தவர், யூதர் மற்றும் Druze மதத்தவர்கள். இவர்கள் தவிர, மற்ற மதத்தவரும் உள்ளனர்