
சகலவித ஆனந்தத்தையும் அன்றாடம் அனுபவித்து வாழும் மனிதன், தான் வாழும் காலத்தில் ஆன்மாவையும் கவனித்துக்கொள்ளக் கற்றுத் தரும் புனித நாட்களாக அமைகிறது, கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் தவக்காலம் .
“மனிதனே, நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய். மறவாதே!” என்கிறது கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள். இந்த நாற்பது நாள் தவக்காலம், அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவி செய்தல், கீழ்ப்படிதல் போன்ற நல்ல பழக்கங்களையும் பழகிக்கொள்ள, அனைத்துக் கிறிஸ்துவ மக்களுக்கும் வழிகளை வகுத்துக்கொடுக்கின்றது.
தவக்காலத்தில் நோன்பு இருக்கும் பழக்கம் ஆதித் திருச்சபை மரபிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. கி.பி. 313-ல் தவக்காலம் ஒரு வரைமுறைக்கு வந்ததாக விவிலியம் கூறுகிறது. இந்த நாற்பது என்ற எண், விவலியத்தில் ஆன்மிகப் பொருள் மிகுந்த எண்ணாகக் கருதப்படுகிறது.
நோவா காலத்துப் பெருவெள்ளம் நாற்பது பகலும், நாற்பது இரவும் நீடித்தது. சீனாய் மலையில் பத்துக் கட்டளை பெறும் முன் மோசே நாற்பது பகல், நாற்பது இரவு உண்ணாமல் கடவுளுடன் இருந்தார். ஒரேப் மலையில், கடவுளுடன் நாற்பது பகல், நாற்பது இரவுகள் எலியா நடந்துள்ளார்.
இயேசு கிறிஸ்துகூட, தன் பொதுவாழ்வில் தனது பணியைத் தொடங்கும் முன், பாலைவனத்தில் நாற்பது பகலும், இரவும் நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார். இப்படியான விவிலிய வார்த்தைகள் மற்றும் திருச்சபை மரபுப் பின்னணிகள் நமது நாற்பது நாட்கள் தவக்கால நோன்பைப் பொருள் உள்ளதாக்குகின்றன.
நமது சீரோ மலபார் திருச்சபையில் இந்நோன்பு ஐம்பது நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்நோன்பு பெரிய நோன்பு தொடங்கி தொடர்ந்து வரும் ஐம்பது நாட்கள் ஆகும்.
இந்த நாட்களில் பிறருக்கு நாம் செய்யும் அன்பான செயல்களைச் செய்கிறபோது, வலக்கை செய்வதை, இடக்கை அறியாவண்ணம் செய்யவேண்டுமென இயேசு கிறிஸ்து வலியுறுத்துகிறார். இந்த தவக்காலத்தில் நமது பாவங்களுக்குப் பரிகாரம் தேடி, அருள் வாழ்வில் சிறந்து, வாழ்வைப் புதுப்பிக்க, சிலுவைப் பாதையும், நற்கருணை முன் அமர்ந்து செய்யும் தியானமும் உதவி புரிகின்றன.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள், இந்த ஐம்பது நாளும் விரதமிருந்து, இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏற்று, அதன்படி நடப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுவரை உண்மையான கிறிஸ்தவர்களாக வாழத் தவறிவிட்டவர்கள், நல்வாழ்வுக்கு மாற, இறை நம்பிக்கையில் ஆட்பட முயல வேண்டும்.
மனித மாண்பை மதித்தல், மனித நேயத்தில் வளர்தல், நீதிக்காக உழைத்தல், ஏழைகளுடன் பகிர்தல், பகைவருடன் ஒப்புரவாகுதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இயேசுவின் சிலுவைப் பாடுகள், இறப்பு, உயிர்ப்புடன் இணைந்து தியானித்து மனந்திரும்ப வேண்டும். இனியாவது நம் இறை நம்பிக்கையைப் புதுப்பித்து உடல், மனம், ஆன்ம நலத்துடன் வாழ முற்பட வேண்டும். மேன்மைமிக்க வாழ்வை வாழப் பழக வேண்டும். வாழ்வுக்கு அர்த்தம் தர வேண்டும்!”
மனிதா நீ மண்ணாகின்றாய்
மண்ணிற்கே திரும்புவாய் நீ
மனந்நொந்து விழிநீர் சிந்தி -பாவப்
பரிகாரம் செய்து கொள்வாய் நீ
கனிகொடாதுயர்ந்து நிற்கும் -தீய
மரமெல்லாம் வெட்டி வீழ்த்தி
கனல் தீயில் எரியச் செய்ய-எல்லாம்
நிறம் மாறிச் சாம்பலாய் போகும்
இறைமகன் வருகிறார் ௨லகில்-தானியக்
களமெல்லாம் தூய்மையாக்கிடவே
நெல்மணிகள் சேகரிக்கின்றார்-கெட்ட
பதரெல்லாம் சுட்டெரிக்கின்றார்
மனிதா நீ மண்ணாகின்றாய்
மண்ணிற்கே திரும்புவாய் நீ
மனந்நொந்து விழிநீர் சிந்தி -பாவப்
பரிகாரம் செய்து கொள்வாய் நீ
Source: New feed