கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனிதர், எந்நிலையில் வாழ்ந்தாலும் அவர்கள் மதிக்கப்பட்ட வேண்டியவர்கள் என்ற சிந்தனையை, நவம்பர் 23, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“ஆண்களும், பெண்களும் இந்த உலகில் எந்நிலையில் வாழ்வதற்கு அழைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள், தங்களுக்குள் கடவுளின் சாயலைத் தாங்கியுள்ளனர் மற்றும் அவர்கள், கடவுளின் எல்லையற்ற அன்பின் உருவங்களாக உள்ளனர்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் இவ்வெள்ளிக்கிழமை டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
மேலும், “திருஅவையில் சிறார் பாதுகாப்பு” குறித்து, 2019ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறும் கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிர்வாக குழு ஒன்றை உருவாக்கியுள்ளார் என்று, திருப்பீட செய்தி தொடர்பகம் இவ்வெள்ளியன்று அறிவித்துள்ளது.
இக்குழுவில் மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ், சிக்காகோ பேராயர், கர்தினால் Blase J. Cupich, மால்ட்டா பேராயர் Charles Scicluna, கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் சிறார் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் இயேசு சபை அருள்பணி Hans Zollner ஆகியோர் உள்ளனர்.
வருகிற பிப்ரவரியில் நடைபெறும் இக்கூட்டம் பற்றி அறிக்கை வெளியிட்ட, திருப்பீட செய்தி தொடர்பாளர் கிரெக் புர்க்கே அவர்கள், திருஅவையில் சிறார் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது என்பதை, திருத்தந்தை இதன்வழியாக தெளிவாக்கியுள்ளார் எனக் கூறியுள்ளார்.
சில அருள்பணியாளர்களால் பாலியல்முறையில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து திருஅவை தலைவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்று திருத்தந்தை விரும்புகிறார் என்றும், உலக அளவில் சிறாரைப் பாதுகாப்பாக வைக்க வேண்டுமென்பதை உணர்த்துவதற்கு இக்கூட்டம் நடைபெறுகின்றது என்றும், கிரெக் புர்க்கே அவர்கள் கூறியுள்ளார்.
இக்கூட்டம், முக்கியமாக ஆயர்களுக்கென நடத்தப்படுகின்றது எனவும், இந்தப் பெரிய பிரச்சனையை தீர்ப்பதில் ஆயர்களுக்கு அதிகப் பொறுப்பு உள்ளது எனவும், உரிமை மீறப்படும் சிறார் விவகாரத்தில் ஈடுபாடுடைய பொதுநிலையினர், தங்களின் கருத்துக்களை வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொள்வார் என்றும், கீழை கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவைத் தலைவர்கள், திருப்பீட செயலகத் தலைவர்கள், திருப்பீட விசுவாச கோட்பாட்டு பேராயம், கீழை வழிபாட்டுமுறை பேராயம், நற்செய்தி அறிவிப்புப் பேராயம், குருக்கள் பேராயம், துறவியர் பேராயம், பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு திருப்பீட அவை, ஆயர் பேரவைகளின் தலைவர்கள், உலகளாவிய ஆண் மற்றும் பெண் துறவற சபைகள் அவையின் பிரதிநிதிகள் போன்ற பல முக்கிய தலைவர்கள், இதில் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: New feed