வக்காலத்தின் சிகரத்தை நெருங்கிவந்துள்ளோம். அடுத்த ஞாயிறு, குருத்தோலை ஞாயிறு. அதைத் தொடர்வது, புனித வாரம். அதற்கு அடுத்த ஞாயிறு, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா. இந்தச் சிகர நிகழ்வுகளுக்கு ஓர் அழகிய அறிமுகமாக, இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.
சென்ற ஞாயிறை, ‘மகிழும் ஞாயிறு’ என்று கொண்டாடினோம். உண்மையான மகிழ்வு, மன்னிப்பிலும், ஏற்றுக்கொள்வதிலும் அடங்கியுள்ளது என்பதைக் கூற, ‘காணாமல் போன மகன்’ உவமை நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டது. திரும்பி வந்த மகனை, எந்தக் கேள்வியுமின்றி, நிபந்தனையுமின்றி, தடையுமின்றி ஏற்று, அரவணைத்தத் தந்தையை, இயேசு, அவ்வுவமையில் அறிமுகம் செய்துவைத்தார்.
தான் சித்திரித்த அந்தத் தந்தையிடம் விளங்கிய அன்பை, இயேசு, தன் வாழ்வில் வெளிப்படுத்திய ஓர் அற்புத நிகழ்வை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். (யோவான் 8:1-11), தீர்ப்பு வழங்குவதற்காக தன்னிடம் இழுத்துவரப்பட்ட ஒரு பெண்ணுக்கு, தீர்ப்புக்குப் பதில், மன்னிப்பு வழங்கி அனுப்பிவைத்த இயேசுவை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம். இந்நிகழ்வை, ஆழ்ந்து சிந்தித்தால், வாழ்வுக்குத் தேவையான பல பாடங்களை, குறிப்பாக, உறவுகள் குறித்த பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள், நம் அன்றாட வாழ்வு எவ்விதம் ஆரம்பமாகவேண்டும் என்பதைச் சொல்லித்தருகிறது. “இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார்” (யோவான் 8:1-2) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இரவெல்லாம் ஒலிவ மலையில் கழித்த இயேசு, பொழுது விடிந்ததும்,கோவிலுக்குத் திரும்பினார். எதற்காக? இரவு முழுவதும் செபத்தில் தான் சந்தித்த தந்தையை மக்களுக்கு அறிமுகம் செய்ய, அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.
அந்த அமைதியானச் சூழலில், புயல் ஒன்று இயேசுவை நெருங்கியது. மறை நூல் அறிஞர், பரிசேயர் வடிவில் வந்த புயல் அது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்தது, அந்த கும்பல். பொழுது விடிந்ததும், ஒரு வழக்கை ஆரம்பிக்க இவர்கள் வந்திருந்தனர் என்றால், இரவு முழவதும் அவர்கள் சதித் திட்டத்தில் நேரத்தை வீணடித்திருக்க வேண்டும் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும், அடக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனையாக மாறிவிட்டது. அவர்களது சதிக்குப் பயன்படுத்திய பகடைக்காய், ஒரு பெண்.
உடலளவில் அந்தப் பெண்ணைப் பயன்படுத்திவிட்டு ஓர் ஆண் ஓடிப்போயிருக்க வேண்டும். அவன் அங்கு இழுத்துவரப்பட்டதாக நற்செய்தி சொல்லவில்லை. பரிசேயரும், மறைநூல் அறிஞரும், தங்கள் ஆணவ விளையாட்டில், அந்தப் பெண்ணை மட்டும் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த இழுத்து வந்தனர். இது சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து.
மற்றொரு மனிதரை, சுயநலனுக்காகப் பயன்படுத்துவதைவிட பெரிய பாவம் உலகில் இல்லை. ஆழமாய் அலசிப்பார்த்தால், பாவங்கள் என்று நாம் பட்டியலிடும் பல செயல்களில், இறுதியில், இந்த உண்மை ஒன்றே, பின்னணியில் இருக்கும். பொருட்களைப் பயன்படுத்துகிறோம், பயன் தீர்ந்ததும், குப்பையில் எறிகிறோம். பொருட்களைப் பயன்படுத்துவதில்கூட நாம் கவனமாக இருக்கவேண்டும்; தேவைக்கதிகமாய் பொருட்களைச் சேர்ப்பதும், பயன்படுத்துவதும், அதன் விளைவாக, சுற்றுச்சூழலைச் சீரழிப்பதும், அண்மைக் காலங்களில், பாவங்கள் என்று பேசப்பட்டு வருவதை நாம் அறிவோம். இவ்வளவு ‘முன்னேற்றம்’ அடைந்துள்ள நாம், மற்ற மனிதர்களை, பொருட்களைவிட, மிருகங்களைவிட கீழ்த்தரமாக பயன்படுத்தி வருகிறோம் என்பதுதான் நம் சமுதாயம் இன்று இழைத்துவரும் பாவம். இந்தப்பாவம் அன்று இயேசுவுக்கு முன் அரங்கேறியது.
விபச்சாரத்தில் ஒரு பெண்ணை, கையும் மெய்யுமாகப் பிடித்துவந்ததாகக் கூறுகின்றனர், பரிசேயரும், மறைநூல் அறிஞரும். இவர்கள் ஏன் இயேசுவிடம் வர வேண்டும்? இவர்களுக்குத்தான் சட்டங்களெல்லாம் தலைகீழாய்த் தெரியுமே! அந்தப் பெண்ணைத் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டே… பின் எதற்கு இந்த நாடகம்? இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அதற்கு, இது ஒரு வாய்ப்பு. மற்றபடி, அந்த பெண்ணோ, சட்டங்களோ அவர்களுக்கு முக்கியமில்லை.