அக்டோபர் மாதம், பேராயர் ரொமேரோ அவர்கள் புனிதராக உயர்த்தப்பட்டார். புனித ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் திருநாளை, மார்ச் 24, இந்த ஞாயிறன்று நினைவுகூருகிறோம்.
திருப்பலி நிறைவேற்றிய வேளையில், இவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியும், இவரது அடக்கம் நடைபெற்ற நாளன்று, கூடியிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 31 பேர் கொல்லப்பட்டனர் என்ற செய்தியும் நமக்குள் கலப்படமான உணர்வுகளை, சிந்தனைகளை எழுப்புகின்றன. திருப்பலி, அடக்கச் சடங்கு என்ற புனிதமான நிகழ்வுகளில் மக்கள் கொல்லப்படும்போது, கேள்விகள் எழுகின்றன. ஒரு சில வேளைகளில், இக்கேள்விகளுக்கு, தெளிவற்ற, தவறான பதில்களும் தரப்படுகின்றன.
இவ்வாண்டு (2019) சனவரி மாதம், ஒடிசா மாநிலத்தின் பாமுனிகம் (Bamunigam) என்ற ஊரில், திவ்யரஞ்சன் திகால் (Dibyaranjan Digal) என்ற இளையவர், அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். அந்த விழாவுக்கென ஊரிலிருந்து மக்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு வாகனம், விபத்திற்குள்ளாகி, 11 பேர் இறந்தனர். இதை, தீயதோர் அடையாளமாகக் கருதிய ஊர் மக்கள், இளம் அருள்பணியாளர் திவ்யரஞ்சன் அவர்கள், தங்கள் ஊரில் திருப்பலி நிறைவேற்றக்கூடாது என்று தடுத்துவிட்டனர். அருள்பணியாளர் திவ்யரஞ்சன் அவர்களின் திருப்பொழிவு விழாவையொட்டி இந்த விபத்தும், மரணங்களும் நிகழ்ந்ததால், அவரே, விபத்துக்குக் காரணம் என்றும், அவர், ஆபத்தைக் கொணரும் ஓர் அடையாளம் எனவும், மக்கள் முத்திரை குத்திவிட்டனர். புனிதமான திருப்பொழிவு நிகழ்வில், ஏன் இவ்வாறு நிகழவேண்டும் என்ற நெருடலான கேள்வி எழுகிறது.
அண்மையில், (மார்ச் 15) நியூசிலாந்து நாட்டின் Christchurch பகுதியில் இருந்த இரு இஸ்லாமியத் தொழுகைக்கூடங்களில், வெள்ளி நண்பகல் தொழுகைக்குக் கூடியிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 50 பேர் கொல்லப்பட்டது குறித்து நமக்குள் கேள்விகள் பல எழுகின்றன.
விபத்து, துப்பாக்கிச் சூடு ஆகியவை மனிதர்களால் உருவாகும் ஆபத்துக்கள் என்றாலும், அவை, திருத்தலங்களில், கோவில்களில், புனிதமான நிகழ்வுகளில் ஏற்படும்போது, பல கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகளின் பின்னணியில், கடவுளை இணைப்பது நம் வழக்கம். பல நேரங்களில், இந்தக் கேள்விகளுக்கு, சில குழப்பமான, அபத்தமான பதில்களும் தர முயல்கிறோம்.
1999ம் ஆண்டு, சனவரி மாதம், ஒடிசாவில், இந்து அடிப்படைவாதக் குழுவினர், கிரகாம் ஸ்டெயின்ஸ் (Graham Stuart Staines) என்ற கிறிஸ்தவப் போதகரையும், அவரது இரு குழந்தைகளையும் உயிரோடு எரித்தனர். அதே ஆண்டு, அக்டோபர் மாதத்தில், ஒடிசாவில் மிகப் பெரிய புயல் வீசியதில், பல்லாயிரம் பேர் இறந்தனர். போதகரைக் கொலை செய்ததால், அந்தப் புயலை இறைவன் அனுப்பினார் என்ற தவறான, மிகக் கீழ்த்தரமான விளக்கம் சொன்னவர்களும் உண்டு. நம் மனித அறிவால் புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகளில், கடவுளைப் புகுத்திவிடுகிறோம். அந்நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோர் பாவிகள் என்று முத்திரை குத்திவிடுகிறோம்.
நமது எண்ணங்களைத் தூய்மைப்படுத்தும் வண்ணம், இன்றைய நற்செய்தி ஒருசில சவால்களை நம்முன் வைக்கிறது. – லூக்கா நற்செய்தி 13: 1-9
அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.
என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இச்செய்தியை ஏன் இயேசுவிடம் கூறினர் என்பதை சிந்திக்கும்போது, சில தெளிவுகள் கிடைக்கின்றன. கோவிலில், அல்லது, ஒரு திருத்தலத்தில், பலி செலுத்திக் கொண்டிருந்தவர்களை, பிலாத்து ஏன் கொன்றான் என்ற கேள்விக்கு, அரசியல் பதில்கள் பல இருக்கலாம். ஆனால், அந்தப் பதில்களைத் தேடி, இயேசுவிடம் வரத் தேவையில்லை. இச்செய்தியை இயேசுவிடம் சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம், இந்நிகழ்வில், கடவுள் எங்கே இருக்கிறார் என்ற விளக்கம் பெறுவதற்காகத்தான்.
கடவுளைத் தொடர்புபடுத்தி, அவர்கள் உள்ளத்தில் எழுந்த கேள்விகளை, நாம் இவ்வாறு நினைத்துப் பார்க்கலாம். கோவிலில், பலி நேரத்தில், இந்தக் கொலை நடந்திருக்கிறதே. கோவில், பலி இவையெல்லாம் அந்த கலிலேயரைக் காப்பாற்ற முடியவில்லையா? கோவிலில், பலி நேரத்தில், பிலாத்து கொலை செய்திருக்கிறானே, அவனைக் கடவுள் ஒன்றும் செய்ய மாட்டாரா?
ஒரு சில விவிலியப் பதிப்புகளில் பிலாத்து செய்தது, இன்னும் பயங்கரமாய் கூறப்பட்டுள்ளது. “பிலாத்து அவர்களைக் கொன்று, அவர்கள் இரத்தத்தை அந்தப் பலியின் இரத்தத்தோடு கலந்தான்” என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இது சாதாரண கொலை அல்ல. இஸ்ராயேல் மக்களிடையே தெய்வ நிந்தனை என்று தடை செய்யப்பட்டிருந்த மனிதப் பலியை, பிலாத்து, நடத்தினான். இறைவனின் சந்நிதியை, இஸ்ராயலரின் வாழ்வு நெறிகளை, மோசே தந்த சட்ட நெறிகளைக் களங்கப்படுத்தும் ஒரு பெரும் குற்றத்தை, பிலாத்து செய்திருக்கிறானே, அவனைக் கடவுள் ஒன்றும் செய்யமாட்டாரா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதேடியே, இச்செய்தி இயேசுவிடம் சொல்லப்பட்டது.
பிலாத்து கொன்றான் என்ற செய்தியின் பின்புலத்தில் பொதிந்திருந்த இக்கேள்விகளுக்கு இயேசு நேரடியாக விடை தந்ததுபோல் தெரியவில்லை. சொல்லப்பட்ட செய்திக்கு, நடந்த நிகழ்வுக்கு இயேசு விளக்கம் சொல்லவில்லை. மாறாக, அந்நிகழ்வினால் பாதிக்கப்பட்டோரைக் குறித்து, அவசரத் தீர்ப்புக்களை வழங்கவேண்டாம் என்று எச்சரிப்பதே, இயேசுவின் முக்கிய நோக்கமாய் இருந்தது. அவர்கள் சொன்ன செய்தியையும், வேறொரு செய்தியையும் இணைத்து, இன்றைய நற்செய்தியில், இயேசு கூறும் விளக்கத்திலிருந்து, பாடங்கள் கற்றுக்கொள்வது நல்லது.
கோவிலில் நடந்த இந்த கொலையுடன், சீலோவாமில் கோபுரம் ஒன்று விழுந்ததால் 18 பேர் உயிரிழந்த நிகழ்வை இயேசு இணைத்தார். பிலாத்து செய்த கொலை போன்று, மனிதர்களால் மனிதர்களுக்கு அழிவுகள் ஏற்படும் நிகழ்வுகளிலும், கோபுரத்தின் இடிபாடு போன்று இயற்கை வழியே, அல்லது விபத்துக்கள் வழியே மனிதர்களுக்கு அழிவுகள் ஏற்படும் நிகழ்வுகளிலும், அவை ஏன் நடந்தன என்ற விளக்கங்கள் தருவதை விட, அந்த அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களைக் குறித்து அவசர முடிவுகள், தீர்ப்புகள் வேண்டாம் என்பதைச் சொல்வதிலேயே இயேசு குறியாய் இருந்தார். அழிவுக்கு உள்ளானவர்களைப் பாவிகள் என்று அவசரத் தீர்ப்பிட வேண்டாம். அவர்களை விட நாம் பெரும் பாவிகள். எனவே இந்நிகழ்வுகள் நமக்கு எச்சரிக்கைகளாய் இருக்கட்டும் என்பதையே இயேசு அழுத்தந்திருத்தமாய் சொன்னார். திட்டமிட்டு மனிதர்களால் நடக்கும் தீமைகளாலோ, விபத்துக்களாலோ பாதிக்கப்பட்டவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார்; ஆனால், அந்நிகழ்வுகள் வழியே இறைவன் கொடுக்க விழையும் எச்சரிக்கைகளை நாம் ஏற்றுக் கொள்வது நலம் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார்.
துன்பங்கள் நிகழும்போதெல்லாம், கடவுளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, கேள்விகள் கேட்பதற்குப் பதில், நம்மை அங்கு நிறுத்தி, இத்துன்பம் நிகழ்வதற்கு நாம் எவ்வகையில் காரணமாய் இருந்தோம் என்று ஆய்வு செய்வது நல்லது. இத்துன்பங்களைத் தடுக்க, அல்லது, இத்துன்பங்களிலிருந்து மக்களைக் காக்க கடவுள் என்ன செய்யவேண்டும் என்று அவருக்கு ஆலோசனைகள் வழங்குவதை விட்டுவிட்டு, இத்துன்பத்திலிருந்து மக்களை மீட்க நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்பது பயனளிக்கும்.
2010ம் ஆண்டு ஹெயிட்டி நாட்டிலும், 2015ம் ஆண்டு, நேபாளத்திலும் ஏற்பட்ட நில நடுக்கங்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இயற்கைப் பேரழிவுகளின்போது, நம்முடைய மனங்களில், ‘கடவுள் எங்கே’ என்ற கேள்வி, வெகு இயல்பாக, எளிதாக, எழுந்திருக்கும். கடவுள் எங்கே என்ற கேள்விக்குப் பதில், இந்த நிலநடுக்கத்தில் நாம் எங்கே, மனித சமுதாயம் எங்கே என்ற கேள்விகளையும் எழுப்பலாம்.
நிலநடுக்கமே, இப்போது, இயற்கையின் விபரீதமா, அல்லது, மனிதர்கள், இயற்கையை, அளவுக்கதிகமாய் சீர்குலைத்து வருவதன் எதிரொலியா, என்ற விவாதம் எழுந்துள்ளது. அப்படியே, நிலநடுக்கம், இயற்கையில் எழும் விபரீதம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், ஹெயிட்டி, நேபாளம் போன்ற ஏழை நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கங்களில், பெருமளவில் உயிர்கள் பலியாவதற்கு, அங்கு கட்டப்பட்டிருக்கும் தரக் குறைவான கட்டடங்களே காரணம் என்பது வெளிச்சமாகும்போது, மனசாட்சியுள்ள மனிதர்கள் எங்கே என்ற கேள்வி ஓங்கி ஒலிக்கிறது.
வறிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும்போது, வறியோரின் குடியிருப்புக்களே பெருமளவில் தரைமட்டமாகின்றன என்பதும், அந்த இடிபாடுகளில் சிக்கியிருப்போர் வறியோர் என்ற காரணத்தால், அவர்களை மீட்கும் பணிகளிலும் அக்கறையற்ற தாமதங்கள் உருவாகி, இன்னும் பல நூறு உயிர்கள் பலியாகின்றன என்பதும், நம்மைப்பற்றிய கேள்விகளையே எழுப்புகின்றன. துன்ப நேரங்களில், கடவுளை நோக்கி, நாம் வழக்கமாக, எளிதாக எழுப்பும் கேள்விகளை, நம் மனதை நோக்கியும், சமுதாயத்தை நோக்கியும் எழுப்பி, நம் தேடல்களைத் தொடர்ந்தால், இன்னும் பல தெளிவுகள் கிடைக்கும்.
உலகெங்கும், அநியாயங்கள் பல நடந்தும், கடவுள் ஏன் சும்மா இருக்கிறார்? என்பது, கடவுளைப்பற்றி அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. அக்கேள்விக்கு, “அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்” என்ற பழமொழியை பதிலாகச் சொல்கிறோம். இப்பழமொழியின் இரண்டாம் பகுதியில் எனக்கு அதிக உடன்பாடு இல்லை. தெய்வம் நிற்கும்… ஆம்… காத்து நிற்கும். கொல்வதற்கல்ல, வாழவைப்பதற்கு. வாழ வைப்பதற்காக இறைவன் காட்டும் பொறுமையை ஆழமாய் உணர்த்தவே, இன்றைய நற்செய்தியில், அத்தி மர உவமையைச் சொல்கிறார் இயேசு. – லூக்கா நற்செய்தி 13: 6-9
அத்தி மரங்கள், சீக்கிரம் பூத்து, காய்த்து, கனிதரும் வகையைச் சேர்ந்தவை. அவற்றிற்கு அதிக உரம், நீர் தேவையில்லை. அப்படிப்பட்ட மரம், மூன்றாண்டுகள் ஆகியும், பலன் தரவில்லை. தோட்டத்து உரிமையாளர் அதை வெட்டியெறிய உத்தரவிடும்போது, தோட்டத் தொழிலாளி, மேலும் ஓராண்டு பொறுமை காட்டுமாறு வேண்டுகிறார். மற்றோர் ஆண்டு தரப்படுகிறது, கூடுதல் உரமும் இடப்படுகிறது. அதேபோல், நாம் உண்மையான பலன் தருவதற்கு, இறைவன் நின்று, நிதானமாய் செயல்படுவார் என்பதை இவ்வுவமை சொல்லித்தருகிறது.
அநியாயங்கள் செய்வோரைத் தண்டிக்க இறைவன் நேரம் எடுத்துக்கொள்ளட்டும், பொறுமை காட்டட்டும். அவர்கள் திருந்துவார்கள் என்று காத்திருக்கட்டும். ஆனால், காத்திருக்கும் அந்நேரத்தில், நல்லவர்கள், அப்பாவிகள் வதைபடுகிறார்களே. அதற்காகவாவது ‘கடவுள் எதையாவது செய்யலாமே’ என்பது, கடவுளுக்கு நாம் வழங்கும் ஆலோசனை. அவ்விதம் ஆலோசனை வழங்கும்போது, கடவுள், நம்மையும், ‘எதையாவது செய்வதற்கு’ அழைக்கிறார். இதை நாம் இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில், மோசேயிடம் எரியும் முட்புதர் வழியே கடவுள் தந்தசெய்தி அதுதான்: “எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்… அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.” (விடுதலைப் பயணம் 3:7-8) இவ்வாறு கூறும் கடவுள், மோசேயை, அந்த விடுதலைப் பணியை ஏற்கச் சொல்கிறார்.
மோசே தயங்குகிறார். “நான் போய் என்ன செய்ய முடியும். என்னை உயிரோடு குழிதோண்டி புதைத்துவிடுவார்களே” என்று ஒதுங்கிவிட மோசே எண்ணினார். இறைவன் அவருக்கு நம்பிக்கை தந்து, அவரது தயக்கங்களை நீக்கி, அவர் வழியாகக் கொணர்ந்த விடுதலை, வரலாறானது.
துன்ப நிகழ்வுகள், நம்மையோ, நம் உலகையோ தாக்கும்போது, கடவுள் எங்கே, கடவுள் ஏன் இவ்வாறு செய்தார், அல்லது அவர் ஏன் செயல்படவில்லை என்ற கேள்விகளை ஒதுக்கி வைப்போம். துன்ப நிகழ்வுகள், நம் வாழ்வைத் திருத்தி அமைக்க வழங்கப்படும் எச்சரிக்கைகள் என்பதையும், அதேநேரம், நம்மைத் தேடிவரும் அழைப்புக்கள் என்பதையும் உணர முயல்வோம். உலகில் நிகழும் துயரங்களைக் குறைப்பதற்கு, இறைவனோடு இணைந்து உழைக்கும் வரம் வேண்டுவோம்.
Source: New feed