20ம் நூற்றாண்டில் (1919-1987) வாழ்ந்த, இத்தாலிய வேதியியலாளரும், எழுத்தாளருமான ப்ரீமோ மிக்கேலே லேவி (Primo Michele Levi) அவர்கள், 1944ம் ஆண்டு, ஆஷ்விட்ஸ் (Auschwitz) வதைமுகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு, 11 மாதங்கள் கொடுமைகளுக்கு உள்ளானபின், 1945ம் ஆண்டு, சனவரி மாதம், இரஷ்யப் படையினரால் விடுவிக்கப்பட்டு, மீண்டும் இத்தாலிக்குத் திரும்பினார். வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட 650 இத்தாலிய யூதர்களில், 20 பேர் மட்டுமே உயிருடன் வெளியேறினர். பிறந்த ஊரான தூரின் நகருக்குத் திரும்பி வந்த லேவி அவர்கள், ‘The Periodic Table’ அதாவது, ‘வேதியியல் கூறுகளின் அட்டவணை’ என்ற தலைப்பில், தன் வாழ்வை 21 சிறுகதைகளாக எழுதியுள்ளார்.
வேதியியலில் பயன்படுத்தப்படும் ‘வடித்தெடுத்தல்’ அல்லது ‘துளித்தெடுத்தல்’ முறையையும் (Distillation process), வாழ்வையும் ஒப்பிட்டு, அவர் கூறும் கருத்துக்கள், நம்மை, இன்றைய ஞாயிறு சிந்தனைகளுக்கு அழைத்துச் செல்கின்றன.
“வடித்தெடுத்தல் அழகானது. ஏனெனில், அனைத்திற்கும் மேலாக, அது, மெதுவாக, அமைதியாக நடைபெறுகிறது. அது நடைபெறும் வேளையில், வேறு பல விடயங்களைச் சிந்திக்க நேரம் தருகிறது. இரண்டாவதாக, அதில், உருமாற்றம் நிகழ்கிறது. திரவ நிலையிலிருந்து, கண்ணால் காணமுடியாத ஆவி நிலைக்குச் சென்று, மீண்டும் திரவ நிலைக்குத் திரும்புகிறது. இந்த இரட்டைப் பயணம், மீண்டும், மீண்டும் நிகழ்வதால், அந்தத் திரவம் மேலும், மேலும், தூய்மையடைகிறது.”
‘வடித்தெடுத்தல் முறை’யில் காணப்படும் கூறுகள், வேதியியலைத் தாண்டி, வாழ்வைக் குறித்து, வேறுபல எண்ணங்களை வழங்குகின்றன என்று, லேவி அவர்கள் கூறியுள்ளார். தூரின் நகரில் துவங்கிய தன் வாழ்வு, ஆஷ்விட்ஸ் வதைமுகாமுக்குச் சென்று, மீண்டும் தூரின் நகருக்குத் திரும்பிவந்ததை, ‘வடித்தெடுத்தல் முறை’யுடன் ஒப்பிட்டுள்ள லேவி அவர்கள், வேதனையான இந்தப் பயணம், தான் என்ற அகந்தையையும், பகட்டையும் தன் வாழ்விலிருந்து நீக்கியதோடு, வாழ்வைக் குறித்து தெளிவான பார்வையை தனக்கு வழங்கியது என்று கூறியுள்ளார்.
‘வடித்தெடுத்தல் முறை’, மெதுவாக, அமைதியாக நடைபெறுவது, அங்கு, சில உருமாற்றங்கள், கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்வது, மீண்டும், மீண்டும் நடைபெறும் இந்த மாற்றங்களின் இறுதியில், தூய்மை உருவாவது, என்ற எண்ணங்கள், இந்த ஞாயிறன்று நாம் சிந்திக்கும் ஆபிரகாமின் வாழ்வு, மற்றும், இயேசுவின் தோற்றமாற்றம் நிகழ்வு, ஆகியவற்றைக் குறித்து சில தெளிவுகளைத் தருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு சந்தித்த சோதனைகளைப்பற்றியும், இரண்டாம் ஞாயிறு, இயேசு தோற்ற மாற்றம் பெற்ற நிகழ்வையும், சிந்திக்க நற்செய்தி நம்மை அழைக்கின்றது. சோதனைகள், மனித வாழ்வின் இன்றியமையாத ஓர் அனுபவம் என்பதுபோல், தோற்ற மாற்றம் உட்பட, மாற்றங்கள், மனித வாழ்வின் மையமான ஓர் அனுபவம். தவக்காலத்தில் நாம் அடிக்கடி சிந்திக்கும் ஓர் எண்ணம் – மாற்றம்… குறிப்பாக, மனமாற்றம்.
மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாகவேண்டும்? என்ற கேள்விக்கு, இன்றைய முதல் வாசகத்தின் அறிமுக வரிகள் ஓரளவு பதில் தருகின்றன. ஆண்டவருக்கும் ஆபிராமுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு சந்திப்பு, இவ்வாறு அறிமுகமாகிறது. அந்நாள்களில், ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார்” என்றார். (தொடக்க நூல் 15: 5)
ஆண்டவர், ஆபிராமை வெளியே அழைத்து வந்தார் என்பது மட்டும் கூறப்பட்டுள்ளதே தவிர, எங்கிருந்து அழைத்து வந்தார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இந்த இறைவாக்கியத்திற்கு முன், ஆபிராம் தன் கூடாரத்தில் தங்கியிருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. எனவே, இந்த அறிமுக வரிகளை ஆன்மீகக் கண்ணோட்டத்தில் சிந்திக்கும்போது, ஆண்டவர், ஆபிராமை, கூடாரத்திலிருந்து வெளியே அழைத்துவந்தார் என்று எண்ணிப்பார்ப்பதைவிட, ஆபிராமை ‘தான்’ என்ற குறுகிய நிலையிலிருந்து வெளியே அழைத்துவந்து, “வானத்தை நிமிர்ந்து பார்க்க” கட்டளையிட்டார் என்று எண்ணிப்பார்க்கலாம். ஆண்டவரைச் சந்திக்கவும், அதனால் உருவாகும் மாற்றங்களுக்கு வழிவகுக்கவும், ‘தான்’ என்ற நிலையிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். இது, நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடம்.
‘தான்’ என்ற நிலையிலிருந்து வெளியேச் செல்வது, கடினமான ஒரு பயணம். ஆபிராமுக்கு இந்த அழைப்பு தொடர்ந்து வழங்கப்பட்டது. தொடக்க நூலின் 12ம் பிரிவின் ஆரம்பத்தில் ஆபிராம் நமக்கு அறிமுகமாகிறார். அவர் அறிமுகமாகும் முதல் இறைவாக்கியமே, சவால் நிறைந்த ஓர் அழைப்பாக ஒலிக்கிறது.
தொடக்க நூல் 12: 1,4
ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்” என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்… ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.
ஆபிராம், தனக்குப் பழக்கமான இடம், உறவு அனைத்தையும் விட்டு, புதியதொரு வாழ்வைத் துவக்க அழைக்கப்படுகிறார். மாற்றங்களை அதிகம் விரும்பாத 75 வயதில், இது உண்மையிலேயே கடினமானதொரு சவால். ‘ஆபிராம்’ என்ற பெயருடன் துவங்கி, ‘ஆபிரகாம்’ என்ற பெயருக்கு மாற்றமடைந்தவரின் (தொ.நூ.17:5) வாழ்வில், இறைவன் வழங்கிய சவால்கள் அனைத்தும், தான் என்ற நிலையை, மீண்டும், மீண்டும் தாண்டி, ‘வெளியேச் செல்ல’ அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கள் என்பதை உணர்கிறோம். ‘ஆபிராம்’, ‘ஆபிரகாமாக’ மாறியது, வெறும் பெயரளவு மாற்றம் அல்ல, ஒரு முழுமையான மனித மாற்றம். மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தவக்காலத்தில், ‘தான்’ என்ற சிறையிலிருந்து வெளியேறும் முயற்சிகளை மேற்கொள்கிறோமா என்று ஆய்வு செய்வது நல்லது.
இன்றைய நற்செய்தியில், இயேசுவின் தோற்றமாற்றம் பற்றிய நிகழ்வைச் சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வில், இரு அம்சங்களை, சிறிது ஆழமாக அலசிப் பார்க்கலாம்.
ஒன்று, “அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது” (லூக்கா 9:29)என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுள்ளார். செபம், ஒருவரது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி நாம் பலமுறை சிந்தித்திருக்கிறோம்.
பலவேளைகளில், நாம் மேற்கொள்ளும் செபம் எந்த ஒரு மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்று நாம் மனம் தளர்ந்துபோகிறோம். காசைப் போட்டால் நாம் விரும்பும் பொருள்களைப் பெறும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் இயந்திரத்தைப் போல, செபத்தை நாம் உருவகிப்பதால் இந்தப் பிரச்சனை எழுகிறது. கேட்டதைக் கொடுக்கும் இயந்திரம் அல்ல, செபம்!
உறங்கிக் கொண்டிருந்த அந்த இளையவரின் அறை ஒளி வெள்ளத்தில் நிறைந்தது. கண் விழித்த அவர் முன் கடவுள் நின்றார். “மகனே, உனக்கு ஒரு குறிப்பட்ட பணியைத் தருகிறேன். உன் வீட்டுக்கு முன் உள்ள பாறையை முழு வல்லமையோடு நீ தள்ளவேண்டும்” என்று கடவுள் சொல்லிவிட்டு மறைந்தார்.
அடுத்த நாள் காலை, அந்த இளையவர், வீட்டுக்கு முன் இருந்த பாறையை, தன் முழு வல்லமையோடு தள்ளினார். அது கொஞ்சமும் அசையவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப் பின், அடுத்த நாள் தொடரலாம் என்று விட்டுவிட்டார். அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று, ஒரு மாதம், இந்த முயற்சியைத் தொடர்ந்தார், அந்த இளையவர். பாறை இருந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.
“கடவுளே, ஒரு பயனுமற்ற இந்தப் பணியை ஏன் எனக்குக் கொடுத்தீர்?” என்று இளைஞர் முறையிட்டார். “மகனே, உன் கரங்கள், உன் தோள், உன் கால்கள், உன் உடல் முழுவதையும் ஒரு முறை பார். உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்” என்றார், கடவுள். இளையவர், தன்னையே ஒரு முறை பார்த்துக்கொண்டார். அவர் உடல் முழுவதும், ஒவ்வோர் அங்கமும் வலுவடைந்து, முறுக்கேறி, ஏறக்குறைய அந்த பாறையைப் போல் உறுதியாக இருந்தது.
“பாறையைத் தள்ளுவதுதான் உனக்குக் கொடுக்கப்பட்ட பணி. அதை அசைக்கவோ, இடம் பெயர்க்கவோ நான் சொல்லவில்லை. பாறையை இடம் பெயர்ப்பதை விட, அந்தப் பாறையைப் போல் நீ மாறவேண்டும் என்பதற்காகவே நான் உனக்கு இந்தப் பணியைக் கொடுத்தேன்” என்றார் கடவுள்.
‘தள்ளுதல்’ என்று பொருள்படும் ‘PUSH’ என்ற ஆங்கில சொல்லுக்கு, நான்கு எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொன்றையும், ஒரு சொல்லின் முதல் எழுத்தாக எண்ணிப் பார்க்கும்போது, PUSH என்ற சொல்லை, Pray Until Something Happens என்ற நான்கு சொற்களாக விரிவாக்கலாம். அதாவது, ஏதாவதொன்று நடக்கும் வரை செபம் செய். ‘ஏதாவதொன்று’ என்று கூறும்போது, அது, நாம் ‘எதிர்பாராததொன்றாக’வும் இருக்கலாம்.
நாம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக செபிக்கத் துவங்குகிறோம். நாம் எதிர்பார்த்த கருத்து, நாம் எதிர்பார்த்த வடிவில் நம்மை வந்து சேராதபோது, செபத்தின் மீது நம் நம்பிக்கை குறைகிறது. தர்மம், செபம், நோன்பு என்ற மூன்று தூண்கள் மீது எழுப்பப்படும் தவக்காலத்தில், செபத்தையும், அது நமக்குள் உருவாக்கும் மாற்றங்களையும் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களில் தெளிவு பெற, இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.
இரண்டாவதாக, இயேசு உருமாறியபோது, மோசே, எலியா இருவருடன் பேசிக் கொண்டிருந்தார் என வாசிக்கிறோம். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தனர்? “மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்” (லூக்கா 9:31)என நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஒளிவெள்ளம் சூழ்ந்த உன்னதமான அந்நேரத்தில், பேசுவதற்கு வேறு எந்த விடயமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? இயேசு, தன் மரணத்தை முன்னறிவித்ததால், மனமுடைந்து போயிருந்த சீடரின் கலக்கத்தை நீக்கத்தானே இந்த உருமாற்ற அனுபவம்? இந்நேரத்தில் மீண்டும் அதே மரணம் பற்றி பேச வேண்டுமா? என்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன. நமக்கு ஒரு பாடம் இங்கே உண்டு.
புகழின் உச்சியில், மேகத்தில் மிதந்து வரும்போது, நம்மில் பலருக்கு, சூழ்நிலை மறந்துபோகும். தலைகனம் கூடிவிடும். அந்த கனம் தாங்காமல், நாம் மிதந்துவரும் மேகம் கிழிந்துபோகும், பலவந்தமாக பூமியில் விழவேண்டி வரும். அதற்கு மாறாக, என்னதான் புகழும், பெருமையும், நம்மை உச்சியில் ஏற்றி வைத்தாலும், ஏறிய ஏணியை மறக்கக்கூடாது. எவ்விடத்திலிருந்து ஏறிவந்தோம் என்பதையும் மறக்கக்கூடாது. புகழின் உச்சியில் இருக்கும்போது, பல்லக்கில் பவனி வருவதுபோல் உணர்ந்தாலும், அந்த பல்லக்கைத் தாங்கிவரும் பிறரை, இதுவரை நம்மைத் தாங்கிவந்த மற்றவரை, மறக்காமல் வாழ்வது நல்லது. இந்தப் புகழ் உச்சி, பயணத்தின் முடிவல்ல, நாம் இன்னும் போகவேண்டிய தூரம் உள்ளது என்பதையும் மறக்கக்கூடாது. உருமாறிய இயேசு, உள்ளுணர்த்தும் பாடங்கள் இவைதான். கண்ணைப் பறிக்கும் ஒளியுடன், இயேசு உருமாறிய வேளையிலும், அவரது வாழ்வின் குறிக்கோளை, அவர் மேற்கொள்ள வேண்டிய சிலுவை மரணத்தை மறக்கவில்லை.
இறை அனுபவம் எவ்வளவுதான் அற்புதமானதாக இருந்தாலும், அந்த அனுபவத்திலேயே முழு வாழ்வையும் கழித்துவிட முடியாது என்பதை, இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வின் கடைசிப்பகுதி சொல்கிறது. பேசுவது என்னவென்று அறியாது, “நாம் இங்கேயே தங்கி விடலாம்” (லூக்கா 9:33) என்று சொன்ன பேதுருவின் கூற்றுக்கு, “என் அன்பு மகன் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” (லூக்கா 9:35) என்று இறைவன் பதில் சொன்னார். அவ்விதம் செவிசாய்க்கும்போது, இறைமகன் இயேசு என்ன கூறுவார்? இங்கே தங்கியது போதும். வாருங்கள், மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம் என்று கூறுவார்.
கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கோவில்களிலேயே தங்கிவிட முடியாது. தங்கிவிடக் கூடாது. இறைவனைக் கண்ட, இறைவனைத் தரிசித்த அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் உலகிற்குள் செல்லவேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
“Be the change that you wish to see in the world.” அதாவது, “இவ்வுலகில் நீ காண விழையும் மாற்றமாக, நீ முதலில் மாறு” என்று சொன்னவர், மகாத்மா காந்தி. ஒவ்வொரு மாற்றமும் நமக்குள் இருந்து உருவாக வேண்டும், ஆழ்ந்த அன்பு கொண்டால் அனைத்தும் மாறும், இறையன்பு வெறும் உணர்வாக இல்லாமல், நம் வாழ்வில் செயலாக மாறவேண்டும் என்று, இயேசுவின் தோற்ற மாற்றம் நமக்குச் சொல்லித்தரும் பல பாடங்களை இத்தவக் காலத்தில் நாம் கற்றுக்கொள்ள முயல்வோம்.
Source: New feed