
I விடுதலைப் பயணம் 3: 1-8, 13-15
II 1 கொரிந்தியர் 10: 1-6, 10-12
III லூக்கா 13: 1-9
மனமாற்றம் காலத்தின் கட்டாயம்!
நிகழ்வு
அது ஒரு விவசாயக் குடும்பம். அக்குடும்பத்தில், ஓர் அதிகாலை வேளையில், தோட்ட வேலையில் இருந்த அப்பாவுக்கு, மகனின் தீய பழக்கவழக்கங்கள் குறித்துத் தெரியவந்தது. உடனடியாகத் தன் மகனைக் கூப்பிட்டு, அவற்றைத் தவித்துவிடச் சொன்னார். அவனோ “இந்த வயதில் இப்படி இருப்பது சகஜம்… வயதானால் பழக்கவழக்கங்கள் தன்னால் விலகிவிடும்” என்றான். அதற்குத் தந்தை அவனிடம், தோட்டத்தில் இருந்த ஒரு சின்னஞ்சிறிய செடியைக் காட்டிப் பிடுங்கச் சொன்னார். பையன் பிடுங்கினான். அதன்பின்பு சற்றே வளர்ந்த செடியைக் காட்டிப் பிடுங்கச் சொன்னார். அவன் சிரமப்பட்டுப் பிடுங்கினான். பின்பு நன்கு வளர்ந்த முட்செடிகளைக் காட்டினார். அவனோ பிடுங்க முடியாமல் திணறினான்.
அப்பொழுது தந்தை அவனைப் பார்த்துச் சொன்னார், “பழக்கவழக்கங்களும் இப்படித்தான், வளர்ந்து விட்டால் மாற்ற முடியாது… சிறிதாய் இருக்கையில் அகற்றுவதே நல்லது” என்றார். மகனும் அறிவுத்தெளிவு பெற்றவனாய், தன்னிடமிருந்த தீய பழக்கவழக்கங்களை விட்டொழித்து, மனம்திருந்தி வாழத் தொடங்கினான்.
தீய வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் உடனடியாகத் தன்னுடைய தவற்றை உணர்ந்து, மனமாறவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. தவக்காலம் மனமாற்றத்தின் காலம். தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுகிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் படிக்கக் கேட்ட நற்செய்தி வாசகம், ‘மனமாற்றம் காலத்தின் கட்டாயம்’ என்றதொரு சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கேள்விக்குக் கேள்வியாலேயே விடையளித்த இயேசு
இயேசு எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, சிலர் இயேசுவிடம் வந்து, பலிசெலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவிக்கின்றனர். அவர்கள் இயேசுவிடம் இச்செய்தியை அறிவித்ததற்குக் காரணம், அதற்கு அவரின் பதிலென்ன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான். “பலிசெலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றானே! அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறீர்?” என்பது போன்றுதான் அவர்கள் இயேசுவிடம் கேட்டிருக்கவேண்டும். அவர்கள் கேட்ட கேள்விக்கு (!) இயேசு நேரடியாகப் பதில் சொல்லாமல், “இக்கலிலேயருக்கு இவ்வாறு நேர்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரைவிடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?” என்றொரு கேள்வியைத் திருப்பிகேட்டு அவர்களுக்கு விடையளிக்கின்றார்.
கேள்வி கேட்பவரிடமே கேள்வியைக் கேட்டு பதிலளிப்பது யூத இரபிக்களிடம் இருந்த ஒரு வழக்கம். இப்படித்தான் ஒருவன் ஒரு யூத இரபியிடம் வந்து, “ஐயா! நான் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கான பதிலை நேரடியாகச் சொல்லாமல், திரும்ப என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டு விடையளிக்கின்றீர்களே? அது ஏன்?” என்று கேட்டான். உடனே அந்த யூத இரபி, “ஏன், நான் அப்படிக் கேள்வி கேட்கக்கூடாதா?” என்றாராம். யூத இரபிக்களிடம் இருந்த இவ்வழக்கத்தை இயேசுவும் கடைப்பிடித்து தன்னிடம் கேள்வி கேட்டவரிடம், பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டு பதிலளிக்கின்றார்.
இயேசு தன்னிடம் செய்தியை சொன்னவரிடம் அல்லது கேள்வி கேட்டவரிடம், நேரடியாகப் பதில் சொல்லாமல், கேள்விகேட்டுப் பதில் சொன்னதற்குக் காரணம், கலிலேயரைக் கொன்ற பிலாத்து சாதாரணமாவன் கிடையாது, அவன் உரோமை ஆளுநன். அவன் கலிலேயரைக் கொன்றது தவறு என்று சொன்னால், உரோமையரை வெறுத்து வந்த யூதர்களின் பகைமையை இயேசு சம்பாதிக்கவேண்டி வரும். அதே நேரத்தில் பிலாத்து கலிலேயரைக் கொன்றது தவறு என்று சொன்னால், உரோமையர்களின் பகையைச் சம்பாதிக்க வேண்டி வரும் என்பதால், “மனமாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்” என்று சொல்லி பிரச்சினையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க அவர்களை அழைக்கின்றார்.
யாரும் யாரையும் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், மனமாறுவது நல்லது
பிலாத்து பலிசெலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைக் கொன்றுவிட்டான் என்றதும் மக்கள் அவர்களைப் பாவிகள் என்று முத்திரை குத்தியிருக்கக்கூடும். இதை நன்குணர்ந்த இயேசு அவர்களிடம், “இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும்விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல. மனம்மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்” என்கின்றார். இதைத் தொடர்ந்து இயேசு சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேர் இறந்ததைக் குறித்துச் சொல்கிறார். அதைச் சொல்லிவிட்டு முன்பு சொன்ன அதே வார்த்தைகளைச் சொல்லி, அவர்களை எச்சரிக்கின்றார்.
யாராவது தீராத நோயில் விழுந்தாலோ அல்லது விபத்துக்குள்ளானாலோ அல்லது இன்ன பிற காரணங்களால் இறந்துபோனாலோ உடனே நாம் ‘இவன் பாவி, அதனால்தான் இவனுக்கு/இவளுக்கு இப்படி நேர்ந்திருக்கின்றது’ என்று வாய்க்கு வந்த மாதிரி பேசத் தொடங்கிவிடுவோம். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களும் இப்படித்தான் இப்படித்தான் இருந்தார்கள் (யோவா 9:2). இதனை உணர்ந்துதான் இயேசு, அவருக்கு அப்படி நேர்ந்துவிட்டது, இவருக்கு இப்படி இப்படி நேர்ந்துவிட்டது, அதனால் அவர்கள் அனைவரும் பாவிகள் என்று சொல்லிக்கொண்டிருக்காமல், மனம்மாறாவிட்டால் அனைவரும் அப்படியே அழிவீர்கள் என்கின்றார். ஆதலால், யாரும் யாரையும் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், மனமாறுவது நல்லது.
நாம் மனம்மாறுவதற்குப் பொறுமையோடு காத்திருக்கும் கடவுள்
‘மனம்மாறாவிடில் அழிவீர்கள்’ என்று சொன்ன இயேசு, ஒவ்வொருவரும் மனமாறவேண்டும் என்பதற்காகக் கடவுள் பொறுமையோடு காத்திருக்கின்றார் என்பதையும் ஓர் உவமை வழியாக எடுத்துச் சொல்கின்றார். இயேசு சொல்லும் உவமையில் மூன்று ஆண்டுகளாகியும் கனிகொடுக்காத அத்திமரத்தை வெட்டிவிடுமாறு தோட்டத்தின் உரிமையாளர் தொழிலாளரிடம் சொல்லும்போது, தொழிலாளர், “இன்னும் ஓராண்டு விட்டு வைப்போம், அடுத்தாண்டு கனிகொடுத்தால் சரி, இல்லையென்றால் வெட்டிவிடலாம்” என்கின்றார். யூதர்கள் புதிதாக நட்ட மரத்திலிருந்து முதல் மூன்று ஆண்டுகளுக்கு விளையும் கனிகளைப் பறிப்பதில்லை, நான்காமாண்டு விளையும் கனிகளை கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுப்பார்கள். அதபிறகு கிடைப்பவற்றையே அவர்கள் பறித்துக்கொள்வார்கள் (லேவி 19: 23-25)
இயேசு சொல்லும் உவமையில் வருகின்ற மனிதரோ ஏழு ஆண்டுகள் (முதல் மூன்று ஆண்டுகள் + கடவுளுக்கு ஓராண்டு + அதன்பிறகு மூன்று ஆண்டுகள்) காத்திருப்பதாக வாசிக்கின்றோம். அப்படியும் அத்திமரம் கனி கொடுக்காமல் இருந்ததால்தான் அதை வெட்டிவிடத் தீர்மானிக்கின்றார். ஏழாண்டுகள் என்பது அதிகமான காலம், அவ்வளவு காலம் தோட்ட உரிமையாளர் பொறுமையாக இருப்பது போன்று, ஆண்டவரும் நாம் மனம் மாறவேண்டும் (1பேதுரு 3:9) என்பதற்காகப் பொறுமையாக இருக்கின்றார் என்கிறார் இயேசு.
இப்பகுதியை எருசலேமின் அழிவோடும் ஒப்பிடலாம். அங்கிருந்தவர்கள் மனம்மாற வேண்டும் என்று இயேசு மூன்று ஆண்டுகள் போதித்தார். அதன்பிறகு தன்னுடைய சீடர்கள் வழியாக நாற்பது ஆண்டுகள் அம்மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் செய்தார். அப்படியிருந்தும் அங்கிருந்தவர்கள் மனம்மாறாதால் அவர்கள் கி.பி 70 ஆம் ஆண்டு உரோமையர்களால் அழிந்து போனார்கள். மக்கள் மனம்மாறுவதற்கு கடவுள் எவ்வளவோ பொறுமையாக இருந்தும், அவர்கள் மனமாறாமல் இருந்ததை என்னவென்று சொல்வது?
சிந்தனை
நாம் அழிந்துபோகவேண்டும் என்பதல்ல, மனம்மாறி வாழ வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம். ஆகவே, குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மனம் மாறி இறைவனுக்கு உகந்த வழியில் நடக்க முயற்சிப்போம், தீர்ப்பிடாது வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed