![](https://www.addaikalanayaki.com/wp-content/uploads/2019/03/hghggh.jpg)
I இணைச்சட்டம் 26: 4-10
II உரோமையர் 10: 8-13
III லூக்கா 4: 1-13
இயேசுவின் வழியில் சோதனைகளை வெல்வோம்!
நிகழ்வு
புதிதாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த ஓர் உயரதிகாரிக்கு, அரசியலில் பெரும்புள்ளியாக இருந்த ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில், “நீங்கள் மட்டும் பெரியமனது வைத்து இந்த பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால், உங்களுக்குப் பெருந்தொகை சன்மானமாகக் கிடைக்கும்” என்று எழுதப்பட்டிருந்தது. உயரதிகாரி ஒரு கணம் யோசித்தார். தன்னுடைய செயலரைக் கூப்பிட்டு, “இது குறித்து என்ன செய்வது?” என்று கேட்டார். அதற்கு அவருடைய செயலர், “ஒரு சிறு கையெழுத்துதானே ஐயா!… போட்டுவிடுங்கள்… நீங்கள் கையெழுத்து போடுவது யாருக்குத் தெரியப்போகிறது?…” என்றார்.
“யாருக்குத் தெரியப்போகிறது என்று சொல்லாதே… உனக்கும் எனக்கும் மேலே உள்ள ஆண்டவனுக்கும் தெரியும்… அதனால் இந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போடமாட்டேன்” என்று சொல்லி, அதனை அந்தப் பெரும்புள்ளிக்கே திருப்பி அனுப்பிவிட்டார் அந்த உயர் அதிகாரி.
‘சிறு தவறுதானே, யாருக்கு என்ன தெரியப்போகிறது’ என்று சோதனையில் விழுந்துவிடாமல், அந்த சோதனையை வெற்றிக்கொண்ட உயரதிகாரிபோல், நம்முடைய வாழ்க்கையில் வரும் சோதனைகளில் விழுந்துவிடாமல், வெற்றிகொள்ள வேண்டும் என்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு நமக்கு அழைப்புத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இயேசு ஏன் சோதிக்கப்படவேண்டும்?
நற்செய்தியில், இயேசு அலகையினால் சோதிக்கப்பட்டதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு இறைமகன், தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆள். அப்படியிருந்தும் அவர் எதற்காக அலகையினால் சோதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழலாம். இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, நம்மைப் போன்று அவரும் சோதனைக்குத் தப்பவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்காக. இரண்டு, நாம் சோதனையை எதிர்கொள்கின்றபோது, அதிலிருந்து எப்படி வெளிவரவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக (எபி 2: 17,18). இவ்விரு காரணங்களுக்காக அவர் சோதிக்கப்பட்டார். ஆனால், அவர் சோதிக்கப்பட்டாலும் சோதனையை வெற்றிகொண்டார் (மாற் 1: 13). நாம் நமக்கு வருகின்ற சோதனைகளை எப்படி வெற்றிகொள்வது? அதற்கு இயேசு எப்படி நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றார் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
கொடைகளை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதற்காக வரும் சோதனை
இயேசுவுக்கு வந்த முதல் சோதனை, அவருடைய வல்லமையை அவருடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்தும்படி வந்தது. இயேசு நாற்பது நாட்கள் நோன்பிருந்ததால், பசியுற்றார். இப்படியொரு தருணத்திற்காகக் காத்திருந்த அலகை, அவரை அவருடைய வல்லமையைப் பயன்படுத்தி, கற்களை அப்பமாக்கி உண்ணும்படி சொல்கின்றது. இயேசு அவ்வாறு செய்யாமல், “மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கிறார்” என்ற இறைவார்த்தையை (இச 8:3) எடுத்துச் சொல்லி சோதனையை முறியடிக்கின்றார்.
இயேசு தன்னுடைய பணிவாழ்வில் வந்த எல்லாத் தருணங்களிலும் தனது வல்லமையை தந்தைக் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்பப் பயன்படுத்தினாரே ஒழிய, தன்னுடைய விருப்பத்திற்குப் பயன்படுத்தவில்லை (யோவா 8:29). இன்றைய நற்செய்தியிலும் அவர் அலகையால் சோதிக்கப்பட்டபோது, தன்னுடைய வல்லமைப் பயன்படுத்தி கற்களை அப்பமாக மாற்றி உண்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், இறைவார்த்தை இனிமையானது (திபா 119:103) அதுவே வாழ்வளிக்கும் உணவு என்று அலகையை வெற்றி கொள்கின்றார். நமக்கும் இதுபோன்ற அதாவது பொதுநன்மைக்குக் (1கொரி 12:7) கொடுக்கப்பட்ட கொடைகளை சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கான சோதனைகள் வரலாம். அதனை இயேசுவைப் போன்று இறைவார்த்தையின் துணைகொண்டு வெற்றிகொள்வதே சிறப்பானது.
குறுக்குவழியில் முன்னேறுவதற்கான சோதனை
இயேசுவுக்கு வந்த இரண்டாவது சோதனை, குறுக்கு வழியில் – பாடுகள் இன்றி – மாட்சி அடைவதற்கான சோதனையாக இருந்தது. அலகை இயேசுவிடம், “நீர் என்னை வணங்கினால் உலக அரசுகள் அனைத்தும் உம்முடையதாகும்” என்கின்றது. உலக அரசுகள் அனைத்தையும் பெற சாத்தானை வணங்கினால் போதும் என்பது குறுக்கு வழி, இயேசு அலகை சொன்னதைக் கேட்டு, குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காமல் பாடுகள் நிறைந்த வழியைத் தேர்ந்து சோதனையை முறியடிக்கின்றார் (யோவா 12: 23-33)
இங்கு ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். தந்தைக் கடவுள் அவருடைய அன்பு மகனாகிய இயேசுவுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்திருந்தார் (திபா 2: 7-8). ஆனால், அந்த அதிகாரத்தை, இயேசு தன்னுடைய பாடுகளின் வழியாக அடையவேண்டும் என்பது இறைத்திருவுளம். இது ஒன்றும் தெரியாத (!) அலகை இயேசுவிடம் குறுக்கு வழியை முன்மொழிகின்றது. இயேசுவோ, “உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்குப் பணிந்து நட” என்ற இறைவர்த்தையைச் சொல்லி, அலகையின் சோதனையை முறியடிக்கின்றார். நம்முடைய வாழ்விலும் குறுக்கு வழியில் முன்னேறுவதற்கான சோதனைகள் வரலாம். அவற்றையெல்லாம் இயேசுவைப் போன்று முறியடித்து, வெற்றிகொள்வது நல்லது.
விரும்பு வெறுப்புக்கு ஏற்றாற்போல் கடவுளை வளைகின்ற சோதனை
இயேசுவுக்கு வந்த மூன்றாவது சோதனை, தன்னுடைய விருப்பு வெறுப்பிற்கு ஏற்றாற்போல் கடவுளை வளைக்கின்ற சோதனையாகும். அலகை இயேசுவிடம், “உம் கால் கல்லில் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வர்” என்று சொல்லி எருசலேம் திருக்கோவிலின் உச்சியிலிருந்து குதித்தச் சொல்கிறது. இயேசு இறைவார்த்தையில் இப்படி இருக்கின்றது என்பதாலோ, அலகை சொல்கிறது என்பதலா மேலிருந்து கீழே குதிக்கவில்லை. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இயேசு தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இறைவார்த்தையைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை, மாறாக, “உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்” (இச 6:16) என்று சொல்லி அலகையின் சோதனையை முறியடிக்கின்றார்.
இதற்கு முற்றிலும் மாறாக இஸ்ரயேல் மக்கள் மாசாவில் தண்ணீர்வேண்டும் என்று கடவுளைச் சோதித்தார்கள்; அவரைத் தங்களுடைய விருப்பதற்கு இழுத்தார்கள் (விப 17: 1-7). கடவுளுக்குத் தெரியும் தன் மக்களுக்கு எப்போது என்ன கொடுக்கவேண்டும் என்று, அது புரிந்துகொள்ளாமல் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகவும் மோசேக்கு எதிராகவும் செயல்பட்டது வியப்பாக இருக்கின்றது.
பல நேரங்களில் நாமும்கூட இஸ்ரயேல் மக்களைப் போன்று கடவுளை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப வளைக்கும் தவறைச் செய்கின்றோம், அதனால் சோதனையில் விழுகின்றோம். நாம் அவர்களைப் போன்று அல்லாமல், இயேசுவைப் போன்று இறைத்திருவுளத்திற்குப் பணிந்து, சோதனையை வெற்றிகொள்வது நல்லது.
சிந்தனை
‘நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும்’ (யாக் 1:2) என்பார் தூய யாக்கோபு. நம்முடைய வாழ்க்கையில் நாம் சோதிக்கப்படும்போது, சோதனைகளில் விழுந்துவிடாமல், இயேசுவைப் போன்று இறைவார்த்தையின் துணைகொண்டு, இறுதிவரை மனவுறுதியோடு இருந்து வெற்றிகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed