
I 1யோசுவா 5: 9, 10-12
II 2கொரிந்தியர் 5: 17-21
III லூக்கா 15: 1-3, 11-32)
பேரன்புகொண்ட ஆண்டவரிடம் திரும்பி வருவோம்
நிகழ்வு
ஓர் அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்புப் படித்துவந்த அன்பு என்ற மாணவனுக்கு அறிவியலில் அதிக ஆர்வம் இருந்தது. எந்தளவுக்கு என்றால், ஆசிரியர்களே வியக்கும் அளவுக்கு அவன் அறிவாற்றல் கொண்டிருந்தான். ஆனால், கணக்குப் பாடம் மட்டும் அவனுக்கு பெரிய தகராறாக இருந்தது. அதனால் அவன் கணக்குப்பாட வகுப்பு வந்தாலே வகுப்பைவிட்டு வெளியே கிளம்பிவிடுவான். இது பல நாட்களாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.
ஒருநாள் அவனோடு படித்து வந்த அவனுடைய வகுப்புத் தோழர்கள், அவனைத் தனியாகக் கூப்பிட்டு, “டேய் அன்பு! நீ நினைப்பதுபோல் கணக்குப் பாடம் ஒன்றும் அவ்வளவு கடினமில்லை… அதைவிடவும் கணக்கு ஆசிரியர் எல்லார்மீதும் மிகவும் பிரியமாக இருந்து, கணக்குப் பாடத்தைக் கற்றுத்தருகிறார்… அதனால் தயவுசெய்து நீ அவருடைய வகுப்புக்கு வா” என்றார்கள். அவனோ அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என நினைத்துக்கொண்டு மேலும் ஓரிரு வாரங்கள் கணக்குப்பாட வகுப்பிற்குப் போகாமல் இருந்தான். ஒருநாள் அவன் தன்னுடைய வகுப்புத் தோழர்கள் சொன்னது உன்மைதானா? என சோதித்தறிய விரும்பி, கணக்குப் பாட வகுப்பில் கலந்துகொண்டான்.
அன்றைக்குக் கணக்கு ஆசிரியர் எல்லார்மீதும் மிகவும் பிரியமாக இருந்தார். அது மட்டுமல்லாமல், அவர் கற்றுத்தந்த பாடமும் அவனுக்கு எளிதாகப் புரிந்தது. அப்போதுதான் அவன் தன்னுடைய நண்பர்கள் சொன்னது உண்மையென உணர்ந்தான். உடனே ஆசிரியரிடம் சென்று, தான் செய்த தவற்றை எடுத்துச் சொல்லி வருந்தினான். அதற்கு பிறகு கணக்கு ஆசிரியர் அன்புவின்மீது தனிக்கவனம் செலுத்தி, அவனுக்கு கணக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார். அவனும் பொறுப்பை உணர்ந்து படித்து, அந்தாண்டு மாநிலத்திலே முதலாவனாய் ஜெயித்தான்.
எப்படி அன்பு தன்னுடைய தவற்றை உணர்ந்து, கணக்கு ஆசிரியரிடம் வந்து, பாடம் கற்று மாநிலத்திலேயே முதல் மாணவனை ஜெயித்தானோ அதுபோன்று நாம் நம்முடைய பலவீனங்களை உணர்ந்து, திருந்தி, ஆண்டவரிடம் சரணடைந்தால் அவரது பேரன்புக்கு உரியவர்களாவோம் என்பது உறுதி. தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று, நாம் படிக்கக் கேட்ட நற்செய்தி வாசகம், பேரன்பு கொண்ட ஆண்டவரிடம் திரும்பி வருவோம் என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
ஊதாரி மகனும் பேரன்பு கொண்ட ஆண்டவரும்
நற்செய்தி வாசகத்தில் இயேசு, ஊதாரி மைந்தன் உவமையை எடுத்துச் சொல்கின்றார். இதனை ஊதாரி மைந்தன் உவமை என்று சொல்வதைவிடவும், பேரன்புகொண்ட தந்தையின் உவமை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இவ்வுவமை முழுவதும் தந்தைக் கடவுளின் பேரன்பு வியாபித்திருக்கின்றது. நற்செய்திக்குள் ஒரு நற்செய்தி என அழைக்கப்படும் லூக்கா நற்செய்தி 15 ஆம் அதிகாரத்தில் இடம்பெறும் இந்த ஊதாரி மைந்தன் உவமை பிரிந்து போதல், தவற்றை உணர்ந்து திரும்பி வருதல், மகிழ்ச்சி உண்டாகுதல் என்று மூன்று நிலைகளாக வருக்கின்றது. இம்மூன்று நிலைகளிலும் தந்தைக் கடவுளின் அன்பு எப்படியெல்லாம் வெளிப்படுகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
தந்தையை விட்டுப் பிரிந்து செல்லும் மகன்
தந்தையின் அன்பைப் புரிந்துகொள்ளாத அவருடைய இளைய மகன் அவரிடம் வந்து, சொத்தில் தனக்குரிய பங்கைப் பிரித்துத் தருமாறு கேட்கின்றான். யூத வழக்கப்படி தந்தை உயிரோடு இருக்கும்போது சொத்தைப் பிரித்துத் தருவது முறைகிடையாது. ஆனால், இந்தத் தந்தையோ சொத்தைப் பிரித்துத் தருகின்றார். அதுவும் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கை மூத்தவனுக்கும் ஒரு பங்கை இளையவனுக்கும் கொடுக்கவேண்டிய வழக்கம் இருந்தபோதும் (இச 21:17) சொத்தில் பாதியை இளைய மகனுக்குப் பிரித்துத் தருகின்றார். இவ்வாறு தந்தை, மகன் தன்னை இறந்தவர் போன்று கருதினாலும் அவனோடு அவருக்கிருந்த உறவை முறித்துக்கொண்டு போனாலும் அவன் நன்றாக இருக்கவேண்டும் என்பதறாக சொத்தில் பாதியைப் பிரித்துத் தருகின்றார். அதன்மூலம் தான் பேரன்புகொண்ட தந்தை நிரூபித்துக் காட்டுகின்றார்.
தந்தையை விட்டுப் பிரிந்த இளைய மகன் தொலைதூரத்திற்குச் சென்று, தன் நண்பர்களுடன் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து பணத்தை எல்லாம் தொலைக்கிறான். இங்கு தொலைதூரம் என்பது தந்தையின் இதயத்திற்கும் அவனுடைய இதயத்திற்கும் உள்ள இடைவெளியாகும்.
தன்னுடைய தவற்றை உணர்ந்து, திருந்தி வரும் மகன்
தன்னுடைய கையில் இருந்த பணமும் தன்னோடு இருந்த நண்பர்களும் (!) போன பின்பு, பிழைப்பதற்கே வழியில்லாத நிலைக்கு வந்த மகன் தன்னுடைய தவற்றை உணர்கின்றான். பின்னர் ‘தன் தந்தையின் கூலியாட்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, தான் இங்கு பட்டினி கிடப்பதா? உடனே தந்தையுடன் சென்று மன்னிப்புக் கேட்டு, அவருடைய கூலியாட்களுள் ஒருவனாகச் சேர்த்துக்கொள்ளச் சொல்வேன்’ என்று உறுதியேற்று தந்தையை நோக்கிச் செல்கின்றான்.
இங்கு இளைய மகன் தன்னுடயை குற்றத்திற்காக மனம் வருந்தியதோடு மட்டுமல்லாமல், தந்தையோடு ஒப்புரவாக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கின்றான். அதன்மூலம் அவன் உண்மையான மனமாற்றத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றான் (திப 11:18, 20:21).
மகன் திரும்பி – திருந்தி – வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த தந்தை
தன் தவற்றை உணர்ந்து, திருந்திய இளையமகன், தந்தையிடம் சென்று மன்னிப்புக் கேட்கவேண்டும், ஒரு கூலியாளாகவாவது தன்னை ஏற்றுக்கொள்ளும் என்று கேட்கவேண்டும் என்ற எண்ணத்தோடு செல்கின்றான். ஆனால், அவன் தொலைவில் வரும்போதே அவனைக் கண்ட தந்தை ஓடிவந்து, அவன்மீது பரிவுகொண்டு, அவனைக் கட்டித் தழுவி முத்தமிடுகின்றார். அது மட்டுமல்லாமல் அவன் என்னென்னவெல்லாம் சொல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தானோ அவற்றைச் சொல்வதற்குள், தந்தை தன் பணியாளர்களை அழைத்து, முதல்தரமான ஆடையை உடுத்தச் சொல்லி கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவிக்கச் சொல்கின்றார். மோதிரம் என்பது தந்தை அவனைத் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டார் என்பதைக் குறிக்கின்றது (தொநூ 41:42). இதைத் தொடர்ந்து தந்தை தன் மகன் தன்னிடம் திரும்பி வந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் பெரிய விருந்தொன்று படைக்கின்றார்.
இயேசு இந்த உவமைமூலம், கடவுளின் பேரன்பினையும் பாவிகளாகிய நாம் மனந்திரும்பி அவரிடம் வருகின்றபோது, அவர் அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்ற உண்மையையும் எடுத்துச் சொல்கின்றார். ஆகையால், இளைய மகனைப் போன்று தந்தைக் கடவுளின் பேரன்பை உணர்ந்தவர்களாய் அவரிடம் திரும்பி வருவோம்.
சிந்தனை
‘மனமாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்’ என்பார் இயேசு (லூக் 15:7) ஆகையால், பாவிகளாகிய நம்முடைய மனமாற்றத்தினால் விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed