
குன்று நோக்கி……
இடி முழக்கமாய் இன்று எதிரொலிக்கும், அதிரச் செய்யும் இறைவாக்கு “மனிதனே, நீ மண்ணாக இருக்கிறாய்” என்பது.
செப வணிகர்கள் தங்கள் செப வியாபாரத்தில் பெரிதும் முதலீடு செய்யும் இறைவார்த்தை : “உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”. (யோவான் 16:20) ஆனால் இன்றைய வழிபாட்டின் அழைப்பு : “பாவிகளே உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள் இருமனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள். உங்கள் நிலையை அறிந்து துயருற்றுப் புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்புப் புலம்பலாகவும், மகிழ்ச்சி ஆழ்துயரமாகவும் மாறட்டும்”. (யாக்கோபு 4:8,9).
ஐரோப்பாவில் பெரும் பணக்காரன் ஒருவன் தன் பணச் செருக்கால், நலமற்ற அரசியல் செல்வாக்கால் இழைத்த தீமைகள், செய்த அட்டூழியங்கள் கணக்கில் அடங்கா. திமிரான செயல்பாடுகள் அவனைத் தீயவன் என ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக்கின. காலப் போக்கில் அவன் வாழ்வில் ஒரு மாறுதல். திருந்தி வாழ விரும்பினான். திருத்தந்தையை நாடி ரோமை சென்றான். அப்போது திருத்தந்தை 6ஆம் பத்திநாதர் அவனை வரவேற்றார். கட்டி அணைத்து ஆறுதல் சொன்னார். அவன் பாவ அறிக்கை செய்த போது என்ன பரிகாரத் தண்டனை கொடுப்பது என்று தெரியாமல் திணறினார். உடல் நலிவு, உள்ளச் சோர்வு, அலுவல் தொல்லை என்று எந்தக் கடினத்துவத்துக்கும் தடையாய் இருந்தது. நெடுநேரம் யோசித்து முடிவில் ஒரு மோதிரத்தை அவனிடம் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னார். அதில் “நீ சாவாய் என்பதை மறவாதே” என்று பொருள்பட “மேமந்தோ மோரி” என்ற இரு இலத்தீன் வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. அதனை ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும்போதும் விழித்தெழும் போதும் மூன்றுமுறை படிக்க வேண்டும் என்பதே திருத்தந்தை கொடுத்த பரிகாரம். தொடக்கத்தில் இது எளிதாகத் தோன்றினாலும் விரைவில் வாழ்வின் நிலையாமை பற்றிய உணர்வு அவனை ஆட்கொள்ள கடைசியில் செய்யத் தயங்கிய பரிகாரத்தையெல்லாம் செய்து நல்லவனாக இறந்தானாம்.
திருநீற்றுத் திருநாள் இன்று தாய்த்திருச்சபை அந்தத் திருத்தந்தையைப் போல நமக்கெல்லாம் மோதிரத்தைத் தருவதில்லை. பதிலாகச் சாம்பலைத் தருகிறது. எந்தக் கருத்தைப் புலப்படுத்தத் திருத்தந்தை மோதிரத்தைத் தந்தாரோ, அதே கருத்தை இன்னும் ஆழமாக வலியுறுத்தச் சாம்பலை நெற்றியில் பூசி உணர்த்துகிறது “நீ மண்ணாக இருக்கிறாய். மீண்டும் மண்ணுக்குத் திரும்புவாய்”.
இந்தத் திருநீறுதான் எத்துணை அர்த்தமுள்ளது!
இதோ நான் பூசியிருக்கிறேனே சாம்பல். இதுதான் நம் கடைசிக் கதி! இறுதியில் நாமெல்லாம் மண்ணாகப் போகிறவர்கள் தாம். பின் இதற்கு இந்த அர்த்தமற்ற டாம்பீகம்? வாழ்வின் பொருள் உணர்ந்து வாழ்வோம் – இப்படி ஓர் அர்த்தம்.
சாம்பல் அணிந்த நெற்றி பார்ப்பவரையெல்லாம் தெய்வத்தை நினைக்கச் சொல்கிறது – இப்படி ஓர் அர்த்தம்.
காலையும் மாலையும் கடவுள் இவன்/ள் என்னுடையவன்/ள் கான்கிற பொருளில் நம் நெற்றியில் போடும் கையெழுத்து – இப்படி ஓர் அர்த்தம்
.
குருத்தோலை ஞாயிறன்று நாம் பிடித்த அதே மந்திரித்த ஒலைகளை சுட்டெரித்து அதன் சாம்பலை நெற்றியில் இடுகிறபோது வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். கிறிஸ்தவனுக்கு வாழ்வதும் சாவதும் ஒன்றுதான். கிறிஸ்து மட்டும் போதும் – இப்படியும் ஓர் அர்த்தம்.
அதுசரி, நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொள்வது ஒருநாள்தான். ஆனால் அது ஊட்டும் உணர்வுகள் ஒவ்வொரு கணமும் நம் உள்ளத்தில் நிரம்ப வேண்டாமோ?
திருநீறு – திருச்சபையின் அருள் கருவிகளுள் ஒன்று. சுவை – யான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. மனவருத்தத்துக்கும் மனத் தாழ்ச்சிக்கும், ஒறுத்தலுக்கும், ஒப்புரவுக்கும் உரிய நினைவுப் பொருளாகத் திகழ்வது. அதற்குப் பழைய ஏற்பாட்டில் எத்தனை சான்றுகள்!
– இறை வல்லமையை உணர்த்தும் சாம்பல். (வி.ப. 9:8-9)
– இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் சாம்பல்.(2 சாமு. 13:19)
– தவறினை உணர்ந்து செயல்படத் தூண்டும் சாம்பல். (யோனா 3:6)
– உலகப் பற்றினை ஒழித்திடத் தூண்டும் சாம்பல். (எசாயா 44:20)
– பாவ மன்னிப்புக்கு வழிகாட்டும் சாம்பல். (எரே.6:26)
தவக்காலம் நமது மீட்பின் காலம். நம் ஆன்மாவின் வசந்த காலம். பாவத்தால் நாம் மூவித உறவுகளை முறித்துள்ளோம். இவ்வுறவுகளை மீண்டும் புதுப்பித்து ஆழப்படுத்த, ஏன் முன்னிலும் வலிமையுடையதாக்க மிக எளிய மூன்று வழிகளை நமக்குத் திருச்சபை சுட்டிக் காட்டுகிறது. செபம், தவம், பிறரன்புச் செயல்கள்.
செபத்தால் இறைவனோடும் தவத்தால் (தன்னல மறுப்புச் செயலால்) நம்மோடும் பிறரன்புச் செயல்களால் நம் சகோதரரோடும் உறவைப் புதுப்பிக்க இந்தவக்காலம் நம்மை அழைக்கிறது. அதற்குக் கூட உண்மையான, நேர்மையான முழுமையான மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மனநிலை வேண்டும்.
அடிப்படை மனமாற்றம் என்பது தன்னலத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்துவுடன் இணைந்து இறைத்தந்தைக்காகத் தூய ஆவியானவரில் வாழ்வதாகும்.தூய ஆவியானவரில் வாழ்வதாகும்.
Source: New feed