நற்செய்தி வாசகம்.
இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31
அக்காலத்தில் இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன.
இயேசு அவர்களை நோக்கி, “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை :
“யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்”
ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்பவன் ஒருவன் இருந்தான். ஒருநாள் இரவு அவன் நகரத்தில் படம் பார்த்துவிட்டு, கிராமத்து ஒற்றையடிப் பாதையில் நடந்துவரும்போது, வயல்வெளியில் ஒருபுறம் தீப்பிடித்து எரிய ஆரம்பிப்பதைப் பார்த்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கிராமத்துக்குள் சென்று ஆட்களைக் கூப்பிட்டு வருவதற்குள் நேரமாகிவிடும். வயல்கள் எரிந்து சாம்பலாகிவிடும். நாமாகவே இதை அனைப்பதுதான் நல்லது என்று அருகிலிருந்த கிணற்றிலிருந்து வேகவேகமாய் தண்ணீர் இறைத்து, பரவிக்கொண்டிருந்த தீயை அணைத்துவிட்டான்.
அதற்குள் விசயம் ஊருக்குள் தெரிந்து, ஊரில் இருந்த அனைவரும் வந்துவிட்டனர். அவனுக்கு ஒரே பாராட்டு மழை. அத்தனை வயல்களையும் காப்பாற்றியதால், எல்லார் வீட்டிலும் உபசாரம். திடிரென்று வந்த புகழில் அவனுக்குத் தலைகால் புரியவில்லை. இதனால் வேலைக்குப் போவதை நிறுத்தினான். ஊருக்குள்ளே ஜம்பமடித்துக் கொண்டு திரிந்தான். ஊர் மக்களும் ‘நம் வயல்களைக் காப்பாற்றியன்’ என்று அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
இரண்டு மூன்று மாதங்கள் கடந்தன. ஊர் மக்களின் உதவி குறைந்துகொண்டே வந்தது. அவன் பழைய கதையை ஞாபகப்படுத்தியும் யாரும் அவனைக் கேட்பாரில்லை. அந்தக் கூலித் தொழிலாளியின் நிலை மிகவும் பரிதாபமாகிவிட்டது. ஒருநாள் ஊர்காரன் ஒருவனிடம், “உங்கள் வயல்களை எல்லாம் காப்பாற்றினேனே, அதற்குள் மறந்துவிட்டீர்களா?” என்றான். அதற்கு ஊர்க்காரன், “நீ காப்பாற்றிய வயல்களெல்லாம் அறுவடை முடிஞ்சு போயே போச்சு. இன்னும் அதே பழைய கதையைப் பேசிக்கொண்டிருக்கலாமா?” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டான். அந்த கூலித் தொழிலாளிக்கோ பெருத்த அவமானமாப் போய்விட்டது.
நாம் செய்யும் நற்காரியங்கள் வழியாக விளம்பரம் தேடக்கூடாது. அப்படி விளம்பரம் தேடினால், அது நீண்ட நாளைக்கு நீடிக்காது என்ற உண்மையை உரக்கச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, பார்வையற்ற இருவரைக் குணப்படுத்துகின்றார். அவர் அவர்களைக் குணப்படுத்திவிட்டு சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்பதாகும். இயேசு கூறிய இந்த வார்த்தைகளுக்கு முற்றிலும் எதிராக அந்தப் பார்வையற்றவர்கள் செயல்பட்டது வேறு கதையாக இருந்தாலும், இயேசுவின் அவ்வார்த்தைகள் சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
நற்செய்தியில் இயேசு சொன்ன, “யாரும் இதை அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” என்ற வார்த்தைகளை, நாம் இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம். ஒன்று, இயேசு பேர், புகழுக்கு ஆசைப்படாதவர் என்ற விதத்திலும் இரண்டு, ஒருவேளை பார்வையற்றவர்கள் தன்னைக் குறித்து மக்களிடம் சொல்ல, அது மக்களுக்கு மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிடும் என்ற விதத்திலும் நாம் புரிந்துகொள்ளலாம்.
இந்த இரண்டு கருத்துகளையும் நாம் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம். இன்றைக்கு ஒருசிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு உதவிகள் செய்துவிட்டு, அதைப் ஐந்து லட்சத்துக்கும் மேல் விளம்பரம் செய்து, அதன்வழியாக ஆதாயம் தேடிக்கொள்வார். இயேசு அப்படி ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக அவர் செய்த ஒவ்வொரு அருமடையாளத்தின்போதும், ‘இதை யாரிடத்திலும் சொல்லவேண்டாம்’ என்று சொல்வதாக நற்செய்தி நூல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஓரிடத்தில் மட்டும் விதிவிலக்காக, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உன்மீது இரக்கங்கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்பார் (மாற் 5:19). காரணம் அது புறவினத்துப் பகுதி, குணம் பெற்ற அவர், மெசியாவைக் குறித்து அறிவிக்கவேண்டும் என்றே அப்படிச் சொல்வார். மற்ற எந்த இடங்களில் இயேசு, அருமடையாளத்தைச் செய்துவிட்டு, அதன்வழியாக விளம்பரம் தேடவில்லை. ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் ஒவ்வொருவருமே எந்தவொரு விளம்பரம் இல்லாமல் நற்காரியங்கள் செய்வதே சிறந்தது.
Source: New feed