
உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையை எட்டு ஆண்டுகள் மிகச் சிறப்புடன் வழிநடத்திச் சென்ற, அன்பும், பாசமும், பண்பும், அறிவும், ஆன்மிகமும் நிறைந்த, 95 வயது நிரம்பிய நம் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் டிசம்பர் 31, இச்சனிக்கிழமை உரோம் நேரம் காலை 9.34 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.04 மணிக்கு இறைபதம் எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கின்றோம்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2005ஆம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவையின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதே ஆண்டு மார்ச் 24ம் தேதி தனது தலைமைப் பணியைத் தொடங்கினார். இவர் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, திருப்பீடத்தில் இவர் தலைமையேற்று நடத்திய, கர்தினால்கள் அவை முடிந்து எல்லாரும் களைந்துசெல்லவிருந்தவேளை, அனைவரையும் அமரச்செய்து அந்த தலைமைப் பணி ஓய்வு அதிர்ச்சிச் செய்தியை அறிவித்தார். தனது உடல்நலத்தைக் காரணம் காட்டி, தனது தலைமைப்பணியை நிறைவு செய்வதாக அவர் அறிவித்தார். எவரும் எதிர்பார்த்திராத இச்செய்தி கேட்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. ஏனெனில் திருஅவை வரலாற்றில் 700க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப்பின் அதாவது 1294ஆம் ஆண்டில் பணி ஓய்வை அறிவித்த திருத்தந்தை புனித ஐந்தாம் செலஸ்தினுக்குப்பின் முதன்முறையாக தலைமைப் பணி ஓய்வை அறிவித்தவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களே. பதவி வெறிபிடித்த இன்றைய உலகில், திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்களின் தாழ்மையையும், துணிச்சலையும், மத வேறுபாடின்றி அனைவரும் வியந்து பாராட்டினர். ஏனெனில், திருத்தந்தையாக இருப்பவர், இறப்புவரை அப்பணியில் இருக்கலாம் என்ற நிலை உள்ளது. திருஅவை வரலாற்றில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற திருத்தந்தையாக நீண்டகாலம் வாழ்ந்தவர், மற்றும், முன்னாள் திருத்தந்தை என முதன்முதலில் அழைக்கப்பட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி, புனித சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தெற்கு ஜெர்மனியின் Marktl என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இறையியல் வல்லுனர் என, உலக அளவில் புகழ்பெற்ற, திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதியடைய இறைவேண்டல் செய்வோம். நம் வாழ்வில் கிறிஸ்து இயேசுவை மையமாகக்கொண்டு வாழ வேண்டுமென்ற அவரின் போதனைகளைப் பின்பற்ற முயற்சிப்போம்.
Source: New feed