
திருமுழுக்கு யோவானின் பிறப்பு.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, “வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்” என்றார். அவர்கள் அவரிடம், “உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே” என்று சொல்லி, “குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?” என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————
“அவர் பெயர் யோவான்”
நிகழ்வு
தாய், தந்தை அவர்களுடைய சிறுவயது மகன் மூன்றுபேரும் ஒருநாள் ஒரு மலைப்பாங்கான இடத்திற்குச் சுற்றுலா சென்றிருந்தார்கள். அங்கு இவர்கள் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள்.
மாலை வேளையில், மலையில் மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அதைக் காண்பதற்குப் பலரும் வந்திருந்தனர். இவர்களும் அவர்களோடு சேர்ந்து, மலர்க் கண்காட்சியைக் கண்டு இரசித்தார்கள். தற்செயலாக, தாய் தன் மகனைப் பார்த்தபொழுது அவன் தன்னோடு இல்லை என்பது தெரிந்தது. ‘இவ்வளவு பெரிய கூட்டத்தில், அதுவும் புதிய இடத்தில் மகனை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது?’ என்று பதைபதைத்தாள் தாய். பின்னர் அவள் தன்னுடைய கணவரோடு சேர்த்து, மகனைத் தேடத் தொடங்கினாள்.
இப்படி அவள் தன் மகனை அவனுடைய பெயரைச் சொல்லி கூப்பிட்டுக் கொண்டே தேடிக்கொண்டிருக்கும்பொழுது, ‘ஆலிஸ்’ ‘ஆலிஸ்’ என்று சிறுவன் ஒருவன் தன்னை அழைப்பதை அந்தத் தாய் நன்றாகக் கேட்டாள். அவள் அந்தக் குரலை உற்றுக் கேட்டபொழுதுதான் தெரிந்தது, அழைப்பது தன்னுடைய மகன்தான் என்று. உடனே அவள் குரல் வந்த திசையை நோக்கிச் சென்று, தன்னுடைய மகனைக் கண்டுபிடித்து, அவனைக் கட்டித் தழுவி முத்தமிட்டாள்.
பின்னர் தாய் தன் மகனிடம், “வழக்கமாக நீ என்னை ‘அம்மா’ என்றுதானே அழைப்பாய். இன்றைக்கு ஏன் நீ என்னை ‘ஆலிஸ்’ ‘ஆலிஸ்’ என்று என்னுடைய பெயரைச் சொல்லி அழைத்தாய்?” என்றாள். அதற்கு மகன், ‘இங்கு எத்தனையோ ‘அம்மா’க்கள் இருக்கின்றார்கள். அப்படியிருக்கும்பொழுது, ‘அம்மா’ ‘அம்மா’ என்று அழைத்தால், யாரோ ஒரு சிறுவன் தன் தாயை அழைக்கின்றான் என்று சொல்லிக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். மாறாக, உன்னுடைய பெயரைச் சொல்லி அழைத்தால், நீ திரும்பிப் பார்ப்பாய் அல்லவா, அதனால் நான் உன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டேன்” என்றான்.
ஒருவரைப் பெயர் சொல்லி அழைப்பது அல்லது ஒருவருடைய பெயரால் எத்தகைய நன்மை கிடைக்கின்றது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தியில் யோவானுக்குப் பெயர்சூட்டும் நிகழ்வானது நடைபெறுகின்றது. இந்த நிகழ்வின் வழியாக நமக்குச் சொல்லப்படுகின்ற செய்தி என்ன என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
குழந்தைக்கு அதன் தந்தையின் பெயரைச் சூட்ட விழைதல்
ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்தார் (தொநூ 17: 2). அந்த உடன்படிக்கையின் அடையாளமாக அவர் தன் உடலில் விருத்தசேதனம் செய்துகொண்டார். இதை முன்னிட்டு ஒவ்வோர் ஆண் குழந்தைக்கும் எட்டாம் நாள் விருத்தசேதனம் செய்யவேண்டும் (லேவி 17: 1-3) என்ற சட்டம் உருவானது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்பட்ட நாளிலேயே பெயர் சூட்டம் வழக்கமும் ஏற்பட்டது.
இந்நிலையில் தன்னுடைய முதிர்ந்த வயதில் எலிசபெத் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததைக் கேள்விப்பட்டு, அக்குழந்தைக்குப் பெயர்சூட்டும் நிகழ்வில் கலந்துகொள்ள வரும் அவருடைய அக்கம் பக்கத்து வீட்டார், குழந்தைக்கு அதன் தந்தையின் பெயரான செக்கரியாவைச் சூட்ட விழைகின்றனர்; ஆனால், அங்கு நடப்பதோ வேறொன்று. அது என்ன என்று பார்ப்போம்.
குழந்தைக்கு யோவான் எனப் பெயரிடப்படல்
யூதச் சமூகத்தில், ஒரு குழந்தைக்கு அதன் தந்தையின் பெயரைச் சூட்டுகின்ற வழக்கம் இருந்தது. அதனாலேயே செக்கரியா–எலிசபெத் தம்பதியின் அண்டைவிட்டார் அவர்களுக்குப் பிறந்திருந்த குழந்தைக்குச் செக்கரியா எனப் பெயர் சூட்ட விழைகின்றார்; ஆனால், குழந்தையின் தாய் எலிசபெத்தும், அதன் தந்தை செக்கரியாவும் குழந்தைக்கு ‘யோவான்’ என்ற பெயரைச் சூட்டலாம் என்கின்றனர். இதனால் வந்திருந்த மக்கள் அனைவரும், இருவரும் ஒரே பெயரை முன்மொழிந்ததை எண்ணி வியப்புறுகின்றனர்.
யோவான் என்றால் கடவுள் இரக்கமுள்ளவர் (Yahweh is Gracious) என்று பொருள். திருமணமாகிப் பல ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருந்த செக்கரியா–எலிசபெத் தம்பதிமீது ஆண்டவர் இரக்கம்கொண்டார், அதை முன்னிட்டு குழந்தைக்கு, யோவான் என்ற பெயர் சூட்டப்பட்டது என்று கூடச் சொல்லலாம்.
ஆம், செக்கரியா-எலிசபெத் தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்கு யோவான் என்ற பெயரிடப்பட்டதன் மூலம் அதற்கோர் அடையாளம் வழங்கப்பட்டது. கடவுள் நமக்கும் ஒரு பெயரினை வழங்கி, நமக்கு அடையாளத்தையும் மாண்பினையும் தந்திருக்கின்றார். இதை உணர்ந்திருக்கின்றோமா? நம்முடைய பெயருக்கு ஏற்றாற்போல் வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே!’ (எசா 45: 3) என்பார் ஆண்டவர். ஆகையால், நம்மைப் பெயர் சொல்லி அழைத்து, நமக்கோர் அடையாளத்தையும் மாண்பினையும் தரும் ஆண்டவராகிய கடவுளுக்குத் திருமுழுக்கு யோவானைப் போன்று பணிசெய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed