
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர்.
அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார்.
இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.
வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை :
“நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே நிகழட்டும்”
பேராயர் புல்டன் ஷின் ( Fulton J Sheen) பேராயராக உயர்வதற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வு இது.
அவர் பெல்ஜியத்தில் உள்ள, மிகவும் பிரசித்தி பெற்ற லுவேன் பல்கலைக்கழகத்தில் Ph.d படிப்பு படித்து முடித்துவிட்டு, முதல் மாணவனாக தேறியிருந்த தருணம், அவருக்கு அறிமுகமான பலரும் ‘புல்டன் ஷீனுக்கு மறைமாவட்டத்தில் மிக முக்கியமான பொறுப்போ அல்லது பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரியும் வாய்ப்போ கிடைக்கும் என்று பேசிக்கொண்டார். ஆனால், அவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு வெளியே வந்தபோது, மறைமாவட்ட ஆயர் அவரை ஒரு சாதாரண, போக்குவரத்து வசதிகளும் ஏன், அடிப்படை வசதிகளும்கூட இல்லாத ஒரு குக்கிராமத்தில் உதவிப் பங்குத் தந்தையாக நியமித்தார்.
செய்தியைக் கேள்விப்பட்ட புல்டன் ஷீனுடைய நண்பர்கள் மற்றும் அவருக்குத் தெரிந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஒரு பத்திரிகைகூட, “மிகவும் திறமைசாலியான புல்டன் ஷீனை ஒரு குக்குராமத்தில் உதவிப் பங்குத் தந்தையாக நியமித்து, அவருடைய திறமையை வீணடித்துவிட்டார்களே… அவ்வளவு பணத்தைக் கொட்டி அவரைப் படிக்கவைத்ததற்கு, சும்மா இருந்திருக்கலாமே” என்று எழுதியிருந்தது.
இதற்கு புல்டன் ஷீன் இவ்வாறு பதில் எழுதி அனுப்பினார். “என்னை ஒரு குக்குராமத்தில் உதவிப்பங்குத் தந்தையாக நியமித்தததை நினைத்து நான் சிறிதுகூட வருந்தவில்லை. இதை நான் இறைவனுடைய திருவுளமாகவே எடுத்துக்கொள்கிறேன். மேலும் என்னுடைய மறைமாவட்ட ஆயருக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்று, குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட அன்றே நான் வாக்குக் கொடுத்திறேன். அதனை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன். எனக்குக் கொடுக்கப்பட்ட இந்தப் பணியை கட்டாயம் திறம்படச் செய்வேன். அதனால் ஆயர் என்னை இங்கே நியமித்ததைக் குறித்துத் தவறாக எழுதவேண்டாம்”.
இதற்குப் பின்பு அருட்தந்தை புல்டன் ஷீன் தனக்கு நியமிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று, பங்குத்தந்தையோடு இணைந்து பங்குப் பணிகளைத் திறம்படச் செய்தார்; மக்களிடத்தில் ஆன்மீக எழுச்சி உருவாகவும் அரசாங்கத்திடனுடைய உதவிகள் அங்குள்ள மக்களுக்குக் கிடைக்கவும் காரணமாகவும் இருந்தார். இவர் எடுத்த முயற்சியின் காரணமாக மக்களுடைய அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டன. ஒருநாளுக்கு ஒருமுறை மட்டுமே வந்துபோன இரயில், ஒன்பது முறை வந்து போயிது.
இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட புல்டன் ஷீனுடைய ஆயர் அவரைத் தொடர்பு கொண்டு பேசினார், “என் அன்பிற்கினிய புல்டன் ஷீன்! உன்னிடத்தில் ஒருசில வார்த்தைகளைப் பேசவேண்டும்… நீ பட்டப்படிப்பு முடித்து, பல்கலைக்கழகத்தில் முதல் மாணவனாகத் தேறியிருந்த தருணம். அந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் என்னைத் தொடர்புக்கொண்டு, “புல்டன் ஷீன் மிகத் திறமையான ஒரு மாணவர். அவரை இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக அமைத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டார். நான்தான் அவரிடம், “இல்லை இல்லை, அவருக்கென்று வேறொரு பணியை வைத்திருக்கிறேன்” என்று சொல்லி உன்னை இங்கே உதவிப் பங்குப் பணியாளராக நியமித்தேன். உன்னை இங்கு நான் நியமிக்கும்போது, எங்கே நீ எனக்குக் கீழ்ப்படியாமல், பிரச்சனை செய்வாயோ என்று நினைத்தேன். ஆனால், நீ ஆயராகிய எனக்குக் கீழ்ப்படிந்தாய். இங்கே உன்னுடைய பணிகளை மிகச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கின்றாய்… எனக்கு நம்பிக்கையிருக்கிறது, நீ எந்தப் பணியையும் சிறப்பாச் செய்வாய் என்று. உன்னுடைய இந்த கீழ்ப்படியும் குணத்திற்கு நீ மேலும் மேலும் உயர்வாய். இறைவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும்”.
ஆயர் பேசியதைக் கேட்ட புல்டன் ஷீனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் எல்லாம் இறைவனின் திருவுளம் என அதற்குப் பணிந்து நடக்கத் தொடங்கினார். அவர் இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து நடந்ததால் என்னவோ ஆயராக, பேராயராக உயர்த்தினார்.
நற்செய்தி வாசகத்தில் வானதூதர் கபிரியேல், மரியாவுக்கு மங்கள வாக்குச் சொன்னதைக் குறித்துப் படிக்கின்றோம். வானதூதர், மரியாவிடம் வாழ்த்துச் சொன்னதும் அவர் கலங்கிப் போய் இந்த வாழ்த்து எத்தகையயோ எண்ணுகிறார். மரியா அவ்வாறு கலங்கக் கலங்கக் காரணம், தான் ஒரு கன்னி என்பதாலும் கன்னி ஒருவர் கருத்தரித்து குழந்தை பெறமுடியுமா? என்பதாலுமே ஆகும். ஆனால், வானதூதர் அவரிடம் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னதும், “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று சொல்லி இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கத் தொடங்கினார்.
மரியா, செக்கரியாவைப் போன்று, ‘இது நடக்குமாக? என்று இறைவனின் வல்லமையில் சந்தேகப்படவில்லை. மாறாக தனக்கிருந்த குழப்பத்தைத் தான் வானதூதரிடம் கேட்கின்றார். அவர் அவருக்குத் தெளிவுபடுத்தியதும் ஆம் என்று சொல்லி இறைவனின் திருவுளத்திற்குத பணிந்து நடக்கத் தொடங்குகின்றார். அதனால் இறைவனின் தாயாக மாறும் பேறு பெறுகின்றார்.
ஆகவே, நாமும் இறைவனின் மீட்புத் திட்டம் இந்த மண்ணில் நிறைவேற, அவருடைய திருவுளத்திற்குப் பணிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்
Source: New feed