உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 25-28, 34-36
அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”
மேலும் இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகெங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.
ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும், மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை :
திருவருகைக் காலம் முதலாம் ஞாயிறு.
“தலை நிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீட்பு நெருங்கி வந்துவிட்டது”
நண்பர்கள் இருவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டார்கள். அதில் ஒரு நண்பர் மிகவும் சோகமாகவும் இன்னொரு நண்பர் மகிழ்ச்சியாகவும் இருந்தார்.
மகிழ்ச்சியாக இருந்த நண்பர் மிகவும் சோகமாக இருந்த நண்பரிடம், “நண்பா! ஏன் இவ்வளவு சோகமாக இருக்கின்றாய்?, உனக்கு ஏதாவது பிரச்சனையாக? என்ன பிரச்சனையானாலும் பரவாயில்லை, அதை என்னிடத்தில் சொல், நான் அதனை நிவர்த்தி செய்ய என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என்றார். மிகவும் சோகமாக இருந்த நண்பரோ, “அது ஒன்றுமில்லை. கடந்த மாதம் என்னுடைய தாத்தா இறந்து போய்விட்டார். அவர் இறக்கும்போது எனக்காக இருபது லட்சம் ரூபாய் சொத்து சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கின்றார்” என்றார். “உன்னுடைய தாத்தா இறந்த செய்தி வருத்தத்திற்கு உரியதாக இருந்தாலும், அவர் உனக்காக இருபது லட்ச ரூபாய் சொத்து சேர்த்து வைத்திருக்கின்றார் அல்லவா, அதை நினைத்து நீ மகிழ்ச்சியாய் இருக்கலாமே” என்றார் அவருடைய நண்பர்.
“பிரச்சனை அதுவல்ல நண்பா, இரண்டு வாரங்களுக்கு முன்பாக என்னுடைய மாமா விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார், அவர் இறக்கின்றபோது என் பெயரில் ஐம்பது இலட்ச ரூபாய் சொத்து சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கின்றார்” என்றார் சோகமாக இருந்த நண்பர். “உன்னுடைய மாமாவின் இறப்பு வருத்தத்தைத் தருவதாக இருந்தாலும், உன் பெயரில் ஐம்பது லட்ச ரூபாய் சொத்து சேர்த்து வைத்திருக்கின்றார் அல்லவா, அதை நினைத்துக்கூட நீ மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லவா, ஏன் இவ்வளவு சோகமாக இருக்கின்றாய்?” என்று கேட்டார் மகிழ்ச்சியாக இருந்த நண்பர்.
“நண்பா பிரச்சனை அதுகூட இல்லை, சென்ற வாரம் என்னுடைய அப்பா நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி இறந்துபோய்விட்டார். அவர் இறக்கின்றபோது என் பெயரில் ஒருகோடி ரூபாய் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கின்றார்” என்றார் அவர். “உன் அப்பாவின் இறப்பு மிகப் பெரிய வருத்தத்தைத் தந்தாலும் அவர் உன் பெயரில் ஒரு கோடி ரூபாய் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கின்றார் அல்லவா, அதை நினைத்து நீ எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்றார் அவருடைய நண்பர்.
“என் நண்பா! இப்போது பிரச்சனை அதுவல்ல, இந்த வாரம் என் பெயரில் சொத்து எழுதி வைத்துவிட்டு இறக்க யாருமே இல்லை. அதை நினைத்துத்தான் நான் கவலையாய் இருக்கின்றேன்” என்றார் சோகமாக இருந்த நண்பர். இதைக் கேட்ட அவருடைய நண்பர், “என்ன மனுஷன் இவன், சந்தோசமாக இருக்க எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றபோது, இறப்பதற்கு யாருமே இல்லை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றானே” என்று தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் சோகமான நண்பனைப் போன்றுதான் நம்மில் பலர் மகிழ்ச்சியாக இருக்க எவ்வளவோ காரியங்கள் இருக்கின்றபோது, இன்னும் பணமில்லையே, பொருளில்லையே, வசதியில்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது. நற்செய்தி வாசகத்தில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்துத்தான் என்னவோ இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாரும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்கின்றார்.
இன்று நாம் திருவருகைக் காலத்தைத் தொடங்கியிருக்கின்றோம். இந்த திருவருகைக் காலத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் யாவும் மெசியாவின் வருகையைக் குறித்தும் அவருடைய வருகைக்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றன. அதனால் நாம் அதைக் குறித்து ‘தலைநிமிர்ந்து நில்லுங்கள், ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வந்துவிட்டது என்ற தலைப்பில் சிந்தித்துப் பார்ப்போம்.
இன்று நாம் படிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, “அந்நாட்களில் நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்…” என்று ஆண்டவராகிய கடவுள் கூறுவதாகக் கூறுகின்றார். இஸ்ரேயல் மக்கள் பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டு, வேற்று நாட்டில் அடிமைகளாய் நம்பிக்கை இழந்து நின்றார்கள். அப்படிப்பட்ட தருணத்தில்தான் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியா வழியாக ‘யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும்” என்னும் நம்பிக்கைச் செய்தியைத் தருகின்றார்.
இறைவாக்கினர் எரேமியா வழியாக ஆண்டவராகிய கடவுள் உரைத்த வாக்கு இயேசு கிறிஸ்துவில் நிறைவு பெறுகின்றது. ஆம், தாவீதின் குலத்திலிருந்து தோன்றிய நீதியின் தளிராகிய இயேசுவால் உலகில் நீதியும் நேர்மையும் நிலைநாட்டப் பட்டது, அது மட்டுமல்லாமல் யூதாவோடு இவ்வுலகமும் விடுதலை பெற்றது, அவருடைய பாதுகாப்பைப் பெற்றது. ஆகையால், நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கக்கூடிய மெசியாவின் வருகையினால் இவ்வுலகில் நீதியும் நேர்மையும் நிலைநாட்டப்படும் என்பது உறுதி.
இப்படி நீதியையும் நேர்மையையும் இவ்வுலகில் நிலைநாட்டி, மக்களுக்கு விடுதலையும் பாதுகாப்பையும் தரக்கூடிய மெசியாவின் வருகைக்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துச் சொல்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, உலகில் ஏற்படும் போர்களும் கலகங்களும் குழப்பங்களும் இயற்கைப் பேரிடர்களும் அச்சத்திற்குரிய காரியங்கள் அல்ல, மாறாக அவையெல்லாம் மானிட மகனது வருகைக்கான முன்னடையாளங்கள் என்கின்றார். எனவே நாம் அவற்றைக் குறித்து அஞ்சி நடுங்காமல், மீட்பு நெருங்கிய வந்துவிட்டதற்கான அறிகுறிகள் என நாம் புரிந்துகொண்டு வாழவேண்டும். இவ்வாறு சொல்லிவிட்டு இயேசு தொடர்ந்து சொல்லக்கூடிய காரியங்கள், நாம் அவருடைய வருகைக்காக எப்படி எல்லாம் ஆயத்தமாக இருக்கவேண்டும், என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை குறித்து தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இயேசு கூறுகின்றார், “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாரும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் சிக்க வைக்காதவாரும் எச்சரிக்கையாய் இருங்கள்”. இன்றைக்கு மனிதர்கள் அனைவரும் இன்றோடு வாழ்க்கை முடிந்துவிடப்போகிறது என்பதுபோல் மனம்போனவாறு, உலகப்போக்கிலான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள் திடிரென்று ஆண்டவருடைய வருகை நிகழும்போது அதற்கேற்ற தண்டனையைப் பெறுவார் என்பது உறுதி. எப்படி நோவாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பாக மக்கள் உண்டு குடித்து மனம்போன போக்கில் வாழ்ந்ததனால் அழிந்தார்களோ அதுபோன்று, கடவுளைத் தேடாமல், அவருக்கு ஏற்புடையதை நாடாமல் நாம் வாழ்கின்றபோது அழிவுறுவோம் என்பது உறுதி. ஆகவே, நாம் மானிட மகனுடைய வருகைக்காக நம்மையே நாம் தயாரிக்கும் விதமாக இவ்வுலக வாழ்க்கையில் மூழ்கிப் போகாமல், அவருக்கு ஏற்புடையவற்றை நாடுவோம்.
உலகப் போக்கிலான வாழ்க்கை வாழாமல், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வேண்டும் என்று சொல்லும் இயேசு, தொடர்ந்து சொல்லக்கூடிய வார்த்தைகள், “எப்பொழுதும் விழித்திருந்து மன்றாடுங்கள்” என்பதாகும். ஆம், நாம் இறைவனை நோக்கி மன்றாடுகின்றபோதும், அவரை நோக்கி ஜெபிக்கின்றபோதும் மட்டுமே நம்மால் இறைவனுக்கு முன்பாக நிற்பதற்கு தகுதியுள்ளவர்களாக முடியும். ஆனால், இன்றைய நவீன கால கட்டடத்தில் ஜெபிப்பதற்கு முக்கியத்துவம் தராமல் நிறையப் பேர் வாழ்வதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கின்றது. இன்று வளர்ந்து வரக்கூடிய தலைமுறை சொல்கின்ற வார்த்தைகள், “நாங்கள் உழைக்கின்றோம், வாழ்க்கையில் முன்னுக்கு வருகின்றோம். இதில் ஜெபிப்பதற்கு என்ன தேவை இருக்கின்றது?, ஜெபிப்பதனால் என்ன பயன்?” என்பதுதான். இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பதற்கே மிகவும் வருத்தமாக இருக்கின்றது. நாம் ஜெபிக்கவேண்டும், அதுவும் விழித்திருந்து ஜெபிக்கவேண்டும். அப்போதுதான் நாம் வாழ்வதற்கான எல்லா ஆற்றலையும் பெற்றுக்கொள்ளமுடியும். எல்லாம் வல்லவராகிய ஆண்டவர் இயேசுவே விழிந்திருந்து இறைவனிடம் ஜெபித்தபோது நாமெல்லாம் எம்மாத்திரம்!. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் விழிந்திருந்து ஜெபிக்கின்ற மக்களாக வாழ முயற்சிப்போம்.
ஸ்காட்லாந்தை சார்ந்த பண்ணையார் ஒருவர் தன்னுடைய தோட்டத்திலும் வீட்டிலும் வேலை பார்க்க இளைஞன் ஒருவனை வேலைக்கு அமர்த்தினார். அந்த இளைஞனும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் செய்துவந்தான். பண்ணையாரும் அவனைக் குறித்து மிகவும் திருப்திபட்டுக்கொண்டுக் கொண்டார்.
எல்லாம் நன்றாகப் போய்கொண்டிருந்த சமயத்தில் திடிரென்று ஒருநாள், அந்த இளைஞன் வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொண்டு வீட்டில் இருந்தான். இதைக் கவனித்த அந்த இளைஞனின் நண்பன் அவனிடம், “என்னப்பா! பண்ணையாரிடம் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டாய், அவர் உனக்கு சம்பளம் குறைவாகத் தருகின்றாரா என்ன?” என்று கேட்டான். அதற்கு அந்த இளைஞன், “அப்படியெல்லாம் இல்லை, சம்பளம் அதிகமாகவே தருகின்றார்” என்றார். “அப்படியானால் அங்கு வேலைப் பளு அதிகமோ?” என்று கேட்டான் அவருடைய நண்பன். “அப்படியொன்றும் இல்லை, எளிதான வேலையாகத் தான் இருக்கின்றது” என்றான் அந்த இளைஞன். “சம்பமும் அதிகமாக இருக்கின்றது, வேலை மிக எளிதாக இருக்கின்றது என்று சொல்கின்றாய், பின் எதற்காக வேலையிலிருந்து நீங்கிவிட்டாய்” என்று கேட்டான் அவனுடைய நண்பன். “வேறொன்றும் இல்லை, அந்த வீட்டில் கூரை இல்லை” என்றான்.
ஸ்காட்லாந்து நாட்டில் ‘ வீட்டில் கூரை இல்லை’ என்ற சொலவடை வீட்டில் ஜெபம் என்பதே இல்லை என்பதைக் குறிக்கும். அந்த இளைஞன் தனது நண்பனிடம், “பண்ணையாரின் வீட்டில் ஜெபம் செய்கின்ற வழக்கமில்லை, அதனால்தான் வேலையிலிருந்து நீங்கிவிட்டேன்” என்று சொல்லாமல் சொன்னான்.
ஆம், ஜெபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீட்டிற்குச் சமம். கூரையில்லாத வீடு எல்லாவிதமான ஆபத்துக்கும் உள்ளாவதுபோல், ஜெபிக்காத மனிதன் எல்லாவிதமான ஆபத்துகளுக்கும் உள்ளாவான் என்பதுதான் உண்மை.
ஆகவே திருவருகைக் காலத்தைத் தொடங்கியிருக்கின்ற இந்த வேளையில், நாம் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுகின்ற, மக்களுக்கு விடுதலையையும் பாதுகாப்பையும் தருகின்ற, மக்களிடத்தில் அன்பைப் பெருகச் செய்கின்ற (இரண்டாம் வாசகம்) மெசியாவின் வருகைக்காக நம்மையே நாம் தயார் செய்ய (விழித்திருந்து) ஜெபிக்கின்ற மக்களாகவும், கடவுளுக்குரிய காரியங்களை நாடுகின்ற மக்களாகவும் மாறுவோம். அதன்வழியாக இறைவன் தருகின்ற முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம். இயேசுவின் பிறப்பு விழாவை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்
Source: New feed