திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25
யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.
அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார்.
மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள். தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது.
அவர் தூபம் காட்டுகிற வேளையில், மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.
வானதூதர் அவரை நோக்கி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்தமாட்டார்; தாய் வயிற்றிலிருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்” என்றார்.
செக்கரியா வானதூதரிடம், “இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே” என்றார்.
அதற்கு வானதூதர் அவரிடம், “நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது” என்றார்.
மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே இருந்தார். அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.
அதற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார்.
“மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை :
“அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது”
தென் அமெரிக்காவில் உள்ளது சிலி என்ற குட்டி நாடு. இங்கே சான் ஜோஸ் என்ற தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது.
2010 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 5 ஆம் நாள், இந்த தங்கச் சுரங்கத்தில் திடிரென்று நிலச்சரிவு ஏற்பட, இதனுள் வேலை பார்த்துக்கொண்டிருந்த 39 பேரும் பூமிக்குள் அமிழ்ந்துபோனார்கள். செய்தியறிந்து நாடே கவலையில் ஆழ்ந்தது. சுரங்கத்துக்குள் அமிழ்ந்துபோனவர்களை மீட்டெடுப்பதற்கான மீட்புபணி உடனே முடிக்கிவிடப்பட்டது. அமெரிக்காவைச் சார்ந்த கிரேக் ஹால் என்பவருடைய தலைமையில் மீட்புப் பணி நடைபெற்றது. இதற்கிடையில் மக்கள் யாவரும் சிலி நாட்டின் பாதுகாவலியான மரியாவிடத்திலும் நற்கருணை ஆண்டவரிடத்திலும் தொடர்ந்து மன்றாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். சுரங்கத்திற்குள் போனவர்களுடைய குடும்ப உறுப்பினர்களோ முழந்தாள் படியிட்டு வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஒருவாரம் போனது, இரண்டு வாரம் போனது. சுரங்கத்திற்குள் சென்ற யாரைப்பற்றியும் எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தங்களுடைய பணிகளைச் செய்துகொண்டே இருந்தனர். இப்படிப்பட்ட சமயத்தில் ஒருநாள், சுரங்கத்திற்கு உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலைக் கேட்டதும் மீட்புக் குழுவினருக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. ‘சுரங்கத்திற்குள் இருப்பவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். எனவே, அவர்களை எப்படியும் காப்பாற்றிவிடலாம்’ என்று எண்ணத்தில், குரல் கேட்ட திசையை நோக்கி உணவையும் தண்ணீரையும் அனுப்பி வைத்தனர். கூடவே புதிய ஏற்பாடு அடங்கிய Mp3 player ஐயும் அனுப்பி வைத்து, தொடர்ந்து மீட்புப் பணியில் மிகத் தீவிரமாக இறங்கினார்கள்.
அக்டோபர் 13 ஆம் நாள், அதாவது சுரங்கத்தினுள் நிலச் சரிவு ஏற்பட்ட 69 ஆம் நாளில், அதற்குள் அமிழ்ந்துபோன 39 பேரும் காப்பாற்றப்பட்டு பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் காப்பாற்றச் செய்தியை அறிந்து நாடே மகிழ்ந்தது. இதைத் தொடர்ந்து நாட்டு மக்கள் யாவரும், சுரங்கத் தொழிலாளர்களை மீட்புக்கொண்டு வருவதற்கு அருள்பாலித்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் அன்னை மரியாவுக்கும் நன்றி செலுத்தத் தொடங்கினார்கள்.
சிலியில் நடந்த நிகழ்வு நமக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான், நம்பிக்கையோடு நாம் இறைவனிடத்தில் மன்றாடினால், அவர் நம்முடைய மன்றாட்டை நிச்சயம் கேட்டருள்வார் என்பதாகும்.
நற்செய்தி வாசகத்தில். வானதூதர் கபிரியேல் செக்கரியாவிற்குக் காட்சியளிப்பதையும் அதைத் தொடர்ந்து நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளையும் குறித்துப் படிக்கின்றோம். அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்ற குரு, ஆண்டவரின் திருமுன் ஊழியம் செய்துவந்தார். இவருடைய மனைவியான எலிசபெத்துக்கு நீண்ட நாட்களாகவே குழந்தையில்லை. இவரும் இவருடைய மனைவியும் தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று நீண்ட நாட்கள் ஜெபித்திருக்கக் கூடும். இப்படிப்பட்ட சூழலில்தான், செக்கரியா ஆண்டவருக்குத் தூபம் காட்டுகிறபோது, வானதூதர் கபிரியேல் அவருக்கு முன்பாகத் தோன்றி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது” என்கின்றார்.
வானதூதர் சொன்னதைக் கேட்டு செக்கரியா, இத்தனை நாளும் நாம் வேண்டிவந்த மன்றாட்டு கேட்கப்பட்டுவிட்டது என்று சந்தோசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் சந்தோசப்படாமல், “இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே” என்று சந்தேகம் கொள்கின்றார். வயதானவர்கள் குழந்தை பெற்றெடுத்த நிகழ்வு விவிலியத்தில் இருந்தபோதும் (தொநூ 18:9-5) செக்கரியா ஆண்டவருடைய வார்த்தைகளை நம்பாமல், அவர்மீது சந்தேகம் கொள்வது நமக்கு வியப்பாக இருக்கின்றது. செக்கரியா இப்படி சந்தேகம் கொள்வதால் ஆண்டவரின் தூதர், அவருடைய நாவை சில காலத்திற்குக் கட்டிப் போடுகின்றார்.
லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வு நமக்கு இரண்டு முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. ஒன்று. இறைவனிடத்தில் நாம் நம்பிக்கையோடு எடுத்து வைக்கின்ற ஜெபம், மன்றாட்டு ஒருபோதும் வீண்போகாது என்பதாகும். இறைவன் நம்முடைய மன்றாட்டுக்குப் பதிலளிக்க சற்று காலம் தாழ்த்தலாம். ஆனால், கட்டாயம் நம்முடைய மன்றாட்டிற்கு செவிசாய்ப்பார். எப்படி செக்கரியா, எலிசபெத் தம்பியரின் மன்றாட்டைக் கேட்டாரோ, அதுபோன்று நம்முடைய மன்றாட்டையும் கேட்பார்.
இந்த நிகழ்வு நமக்குச் சொல்கின்ற இரண்டாவது செய்தி, இறைவனுடைய வார்த்தைகளை நாம் உறுதியாக நம்பவேண்டும் என்பதாகும். இன்றைக்கு இருக்கின்ற அரசியல் தலைவர்களைப் போன்றோ, மற்ற தலைவர்களைப் போன்றோ இறைவன் வாக்கு மாறுகிறவர் கிடையாது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அப்படிப்பட்டவருடைய வார்த்தைகளை முழுமையாக நம்புவதுதான் நம்முடைய வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடியதாக இருக்கும்.
ஆகவே, இறைவனிடத்தில் நம்பிக்கையோடு நம்முடைய மன்றாட்டுகளை எடுத்துவைப்போம், இறுதிவரைக்கும் அவரிடத்தில் நம்பிக்கையோடு இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed