தாவீதின் மகனான யோசேப்புக்கு மண ஒப்பந்தமான மரியாவிடமிருந்து இயேசு பிறப்பார்.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.
மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அவர் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.
இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை :
“அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்”
அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் பணியாற்றி வந்த ஓர் இளங்குரு, ஒரு ஞாயிற்றுத் திருப்பலியின்போது கையில் ஒரு பழைய, துருப்பிடித்த பறவைக் கூண்டைக் கொண்டுவந்தார். மக்களெல்லாம் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
மறையுரை ஆற்றவேண்டிய நேரம் வந்தபோது, குருவானவர் அந்த பறவைக் கூண்டை கையில் பிடித்துக்கொண்டு, “அன்பார்ந்தவர்களே! இதோ என்னுடைய கையில் இருக்கிறதே பறவைக்கூண்டு, இந்தக் கூண்டை நேற்று நான் கடைத்தெருவுக்குச் சென்றுபோது, சிறுவன் ஒருவன் இதனுள் ஐந்தாறு பறவைகளை வைத்துக்கொண்டு, அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டு வந்தான். எனக்கு கூண்டினுள் இருந்த பறவைகளைப் பார்க்க பாவமாக இருந்தது.
உடனே நான் அந்த சிறுவனை நிறுத்தி, “தம்பி! இந்த பறவைகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டேன். அவனோ, “இவற்றை வைத்துக்கொண்டு விளையாடப் போகிறேன். இவைதான் என்னுடைய விளையாட்டுப் பொருட்களே, இவற்றை நான் குச்சியைக் கொண்டு அடி அடியென அடிப்பேன். பின்னர் இவையெல்லாம் மயங்கி விழுந்ததும், என்னுடைய வீட்டில் இருக்கின்ற பூனைக்கு இரையாகப் போட்டுவிடுவேன்” என்றான். சிறுவன் சொன்னது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே நான் அவனிடம், “தம்பி! இந்தப் பறவைகளையெல்லாம் எனக்கு விலைக்குத் தருவாயா?” என்று கேட்டேன். அவனோ, “ஐயோ சார்! இவையெல்லாம் சல்லிக்காசுக்குக்கூடத் தேறாது. இவற்றையெல்லாம் விலைக்குக் கேட்கிறீர்களே?” என்றான்.
நானோ அவனிடம், “பரவாயில்லை தம்பி! இந்தா இந்த ஐநூறு ரூபாயை வைத்துகொண்டு, இந்த பறவைகளையும் கூண்டையும் என்னிடத்தில் கொடுத்துவிடு” என்றேன். அவன் மறுபேச்சு பேசாமல், தன்னுடைய கையில் இருந்த கூண்டையும் அதனுள் இருந்த பறவைகளையும் என்னிடம் கொடுத்தான். நானோ கூண்டைத் திறந்து பறவைகளையெல்லாம் பறக்கவிட்டு, கூண்டை மட்டும் கொண்டுவந்திருக்கிறேன்” என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு சிறுதுநேர இடைவெளிக்கு பிறகு குருவானவர் மீண்டும் பேசத் தொடங்கினார். “அன்பார்ந்தவர்களே! இந்தக் கூண்டையும் இதனுள் இருந்த பறவைகளையும் பற்றி சொல்லக் காரணம், ஒருநாள் சாத்தான் இயேசுவிடம், “நான் இந்த உலகில் உள்ள மக்களை எல்லாம் பிடித்து, என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன்” என்றான். அதற்கு இயேசு, “ஏன் என் மக்களை பிடித்து வைத்திருக்கிறாய்? சொல்” என்று கேட்டார். சாத்தானோ, “அதுவா… அவர்களுக்குள் சண்டை மூட்டிவிடப் போகிறேன். அதன்மூலம் அவர்கள் அடித்துக்கொண்டு சாவார்கள். அப்படியாக அவர்களை நான் நரகத்தில் தள்ளுவேன்” என்றான். இதைக் கேட்ட இயேசு, “அவர்களை அப்படியெல்லாம் செய்துவிடாதே, அவர்களுக்காக நான் என்னுடைய உயிரை வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால், அவர்களை ஒன்றும் செய்யாதே” என்றார். இதன்பிறகு இயேசு தன்னுடைய உயிரைத் தந்து நம்மை எல்லாம் மீட்டுக் கொண்டார். நாமே முற்றிலுமாக மீட்கப்பட்டவர்கள் ஆனோம்”.
குருவானவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பங்குமக்களெல்லாம் இயேசுவின் அன்பினை உணர்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.
ஆம், நம் ஆண்டவர் இயேசு, பாவத்தில் விழுந்து கிடந்த நம்மை மீட்பதற்காக தன்னுடைய உயிரையே தந்தார் என்பது எவ்வளவு உயர்வான செயல்.
நற்செய்தி வாசகத்தில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சியைக் குறித்துப் படிக்கின்றோம். மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றது. யூதர்களைப் பொறுத்தளவில் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டது என்றால் , அது திருமணம் நடைபெற்றதற்கு இணையாகக் கருதப்படும். இப்படிப்பட்ட தருணத்தில், அவர்கள் இருவரும் கூடி வாழ்வதற்கு முன்பாகவே மரியா கருவுற்றிக்கும் செய்தியைக் கேள்விப்பட்ட யோசேப்பு, அவரைத் மறைவாக விலக்கிவிடத் தீர்மானிக்கின்றார். அப்போதுதான் வானதூதர் அவருக்குக் கனவில் தோன்றி, எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, “மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்கின்றார்.
‘இயேசு’ என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. ‘மீட்பர்’, ‘உதவி’ என்பவைதான் அந்த இரண்டு அர்த்தங்கள் ஆகும். வானதூதர் கபிரியேல் சொல்வதுபோன்று இயேசு, இந்த உலகத்தின் பாவங்களைக் போக்கக்கூடியவராகவும் அதற்காக தன்னுடைய உயிரையும் தரக்கூடியவராகவும் இருக்கின்றார். அடுத்ததாக, ஆபத்தில் இருப்பவர்கள், தன்னை நோக்கி கூக்குரலிடும் போது உதவிசெய்ய விரைபவராகவும் இருக்கின்றார். நாம், ஆபத்தான வேளையில் இருக்கும்போது வேறு எந்த ஜெபத்தையும் சொல்லத் தேவையில்லை, ‘இயேசு’ என்ற ஒரு வார்த்தையை சொன்னால் போதும் அதுவே மிகப் பெரிய ஜெபமாக இருக்கும்.
ஆகவே, நம்மைத் தேடி மீட்க வந்திருக்கின்ற இயேசுவிடம் நம்மை முழுமையாய் ஒப்படைப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed