திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை :
“மனிதராகப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை”
அமெரிக்கர்கள் மத்தியில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் ஆபிரகாம் லிங்கனுக்கு என்று ஒரு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஏன் என்பதற்காக சொல்லப்படுகின்ற ஒரு நிகழ்வு.
ஆபிரகாம் லிங்கன், அமெரிக்க அதிபராக இருந்தபோது உள்நாட்டுப் போர் வெடித்தது. அதை அடக்கவும் மக்களைப் பாதுகாக்கவும் பாதுகாப்பு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதில் கையொப்பமிட்டு செயல்படுத்தவும் ஆணையிட்டார். இதை அறிந்த அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஸ்டாண்டன், “இது என்னவிதமான ஆணை?, இதைச் செயல்படுத்தினால் நாட்டுக்கு நல்லதல்லவே. இவ்வளவு மோசமான ஓர் ஆணையை பிறப்பித்திருக்கிறார், ஆபிராகாம் லிங்கனுக்கு என்ன புத்தி பேதலித்துவிட்டதா?” என்று சராமாரியாக விமர்சித்தார்.
இதைக் கேள்விப்பட்ட ஆபிரகாம் லிங்கன் பதறிப் போனார். ‘உண்மையிலே நாம் பிறப்பித்த ஆணை, மக்களுடைய நலனுக்கு விரோதமான ஆணையா?, இது நாட்டிற்கு நல்லது கிடையாதா?’ என்று யோசிக்கத் தொடங்கினார். உடனே பாதுகாப்புத் துறை அமைச்சரான ஸ்டாண்டனைத் தன்னுடைய அறைக்குக் கூப்பிட்டு கலந்துபேசினார். அதன்பின் வெளியே வந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, ‘போர்க்கலையில் என்னைவிடை ஸ்டாண்டனே திறமைசாலி, ஆகையால், இதற்கு முன்பு நான் பிறப்பித்த ஆணையை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். ஸ்டாண்டன் கூறிய ஆணையையே அரச ஆணையாகப் பிறப்பிக்கிறேன்” என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர், “இந்த நாட்டினுடைய அதிபர் இவர். இவரே, தன்னைவிட ஸ்டாண்டன்தான் போர்க்கலையில் திறமைசாலி என்று சொல்கிறாரே. உண்மையில், இப்படிச் சொல்வதற்கு எவ்வளவு தாழ்ச்சியும் மனப்பக்குவமும் இருந்திருக்கவேண்டும்?” என்று அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டார்கள்.
ஆம், ஆபிராகம் லிங்கனிடம் விளங்கிய தாழ்ச்சிதான், அவரை எல்லார் மனதிலும் ஒய்யாரமாக அமரச் செய்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” என்கின்றார். இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்து இவ்வாறு உயர்வாகப் பேசுவதற்காக காரணமென்ன என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்து மிகவும் உயர்வாகப் பேசுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அதில் முதன்மையான காரணம் இருப்பது, அவரிடம் இருந்த தாழ்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருசமயம் எருசலேமிலிருந்த யூதர்களால் அனுப்பப்பட்ட குருக்களும் லேவியர்களும் யோவானிடத்தில் வந்து, நீ யார்?. ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?, ஒருவேளை நீர்தான் மெசியாவா?’ என்று கேட்கின்றபோது, திருமுழுக்கு யோவான், நான் மெசியாவும் அல்ல, எலியாவும் அல்ல, முற்காலத்து இறைவாக்கினரில் ஒருவரும் அல்ல. மாறாக, நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் நடுவே நிற்கிறார். அவர் எனக்குப் பின் வருபவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்பார் (யோவா 1: 19-28). மக்களால் மிக உயர்வாகப் பார்க்கப்பட்ட திருமுழுக்கு யோவான், அவருடைய மிதியடி அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்று சொல்வது, அவருடைய தாழ்ச்சியினால் அன்றி, வேறு எதனாலும் சொல்ல முடியாது.
இயேசு, திருமுழுக்கு யோவானை இவ்வளவு உயர்வாகப் பேசுவதற்கு இன்னொரு காரணம், அவர் மெசியாவின் வருகைக்காக மக்களை நேரிய வழியில் தயாரித்து, உண்மையின் வழியில் நடத்தியதுதான். மற்ற இறைவாக்கினர்கள் மெசியாவின் வருகையை எடுத்துத்தான் சொன்னார்கள், ஆனால் திருமுழுக்கு யோவானோ ஒருபடி மேலே சென்று, இயேசுவைக் கண்டு, அவரை மக்களுக்குச் சுட்டிக்காட்டினார். இது எந்தவொரு இறைவாக்கினருக்கும் கிடைக்காது பேறு. அதனாலும் இயேசு திருமுழுக்கு யோவான் உயர்வாகப் பேசுகின்றார்.
இயேசு திருமுழுக்கு யோவானை இப்படி உயர்வாகப் பேசிவிட்டு, இன்னொரு செய்தியையும் நமக்குச் சொல்கிறார். அதுதான், ‘ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே’ என்பதாகும். இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?. திருமுழுக்கு யோவானுக்கு இயேசுவைக் கண்கூடப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் நமக்கோ ஒவ்வொருநாளும் நற்கருணையின் வழியாக அவரைத் தரிசித்தும் வாய்ப்புக் கிடைக்கின்றது. இப்படி நமக்குக் கிடைத்த வாய்ப்பினைக் கொண்டு, நாம் இறைவழியில் வழியில் நடக்கின்றபோது, விண்ணரசில் பெரியவர்கள் ஆவோம் என்பது உறுதி.
ஆகவே, இயேசுவை மக்களுக்குச் சுட்டிக்காட்டி, மிகவும் தாழ்ச்சியோடு வாழ்ந்த திருமுழுக்கு யோவானைப் போன்று வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed