பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30
அக்காலத்தில் இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை :
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”
சிறுநகர் ஒன்றில் அன்பரசன் என்றொரு இளைஞன் இருந்தான். அவன் ஒவ்வொருநாளும் மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிவரும்போது, நேராக வீட்டுக்குள் நுழையாமல், வீட்டுக்கு முன்னால் இருக்கும் வேப்பமரத்திற்கு முன்பாகச் சென்று, தம் கையை உயர்த்தி, ஒரு பாவனை செய்துவிட்டுத்தான் உள்ளே நுழைவான். அவன் என்ன செய்கிறான் என்று தெரிந்துகொள்ள, எதிர்வீட்டிலிருந்த செல்வத்திற்கு மிகவும் ஆர்வம். ஒருநாள் தன்னுடைய ஆர்வத்தை அடக்க முடியாமல் அன்பரசனிடமே கேட்டுவிட்டான்.
“தினமும் இந்த வேப்பமரத்திற்கு முன்பாக வந்து, ஏதோ செய்கிறீர்களே, அது என்ன?”. இதைக் கேள்வியைக் கேட்டதும் அன்பரசன் மெல்லச் சிரித்தான். பின்னர் அவன் செல்வத்திடம், “இது என்னுடைய சுமைதாங்கி மரம். கவலை மரம் என்றுகூடச் சொல்லலாம்” என்றான். “சுமைதாங்கி மரமா? ஒன்றும் புரியவில்லையே!” என்று இழுத்தான் செல்வம்.
“ஆமாம், காலையில் அலுவலகத்திற்குப் போனதிலிருந்து வீட்டு திரும்பும்வரை ஆயிரத்தெட்டுப் பிரச்சனைகள் வரும், கவலைகள் வரும். அவற்றையெல்லாம் வீட்டுக்குக் கொண்டுவர எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், சாயங்காலம் வீடு திரும்பியதும் அவற்றை அந்த மரத்தில் மாட்டிவிடுவேன். இதனால், வீட்டார்க்கு என்னுடைய அலுவலகப் பிரச்சனைகளால் எந்தவொரு பாதிப்பும் கிடையாது” என்று மிகவும் அறிவார்ந்த விதமாகப் பேசினான் அன்பரசன். “நீ சொல்கின்ற இந்த யோசனை மிகவும் நன்றாக இருக்கின்றதே, நானும் இதை இனிமேல் கடைபிடிக்கிறேன்” என்று சொல்லி அவ்விடத்திலிருந்து அகன்றான் செல்வம்.
தன் கவலைகளையெல்லாம் இறக்கிவைக்க அன்பரசனுக்கு எப்படி ஒரு ‘சுமைதாங்கி மரம் கிடைத்ததோ, அது போன்று நமக்கு ஒரு சுமைதாங்கி (மரம்) இருக்கிறார். அவர்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இயேசு எப்படி ஒரு சுமைதாங்கியாக இருக்கின்றார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்கள் பெரிய சட்டாம்பிகள். அவர்கள் மக்களிடம், இதைக் கடைபிடிக்கவேண்டும், அவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்று சுமைகளுக்கு மேல் சுமைகளை இறக்கிவைத்தார்கள். இதையெல்லாம் மக்களுக்குச் சொன்ன அவர்கள் கடைபிடிக்கவில்லை என்பது வேறு விஷயம் (மத் 23:4, திப 15:10). ஏற்கனவே உரோமையர்களிடம் அடிமைகளாக இருந்து பட்ட கஷ்டங்கள் ஒருபுறம் என்றால், சட்டத்தின்பேரில் இவர்கள் கொடுத்த சித்ரவதைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அந்தளவுக்கு மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயேசு கிறிஸ்து, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்” என்கின்றார்.
இயேசு கூறும் இவ்வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்ப்போம். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுமை, ஒவ்வொரு கஷ்டம் இருக்கலாம். அவற்றையெல்லாம் இயேசு கிறிஸ்து இறக்கிவிடுவேன் என்றோ, முற்றிலுமாகப் போக்கிவிடுவேன் என்றோ சொல்லவில்லை. மாறாக, இளைப்பாறுதல் தருவேன் என்று சொல்கின்றார். இயேசு தருகின்ற இளைபாறுதல், இந்த உலகத்தில் யாரும் தராத ஒன்று. எப்படி என்றால், பலர் தங்களிடத்தில் கஷ்டம் என்று வந்து, தங்களுடைய கஷ்டங்களை எல்லாம் எடுத்துச் சொன்னால், அவற்றை அவர்கள் இன்னும் பலருக்கும் பரப்பி, பிரச்சனையைப் பெரிதாக்குவார்களே ஒழிய, அந்தப் பிரச்சனை தீர வழியோ, ஆறுதலான வார்த்தைகளோ, இளைப்பாறுதலோ தருவதில்லை. மாறாக, ஆண்டவர் இயேசு தருகிறார். அதனால்தான் அவர் என்னிடத்தில் வாருங்கள் என்கின்றார். இயேசுவிடம் வருகின்றவருக்கு உண்மையான இளைப்பாறுதல் எப்போதும் உண்டு.
அடுத்ததாக, இயேசுவின் வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மை யாதெனில், அவரிடமிருந்து கற்றுக்கொள்கின்றபோது நமக்கு உண்மையான இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதாகும். இயேசு, தான் பட்ட பாடுகளையும் அவமானங்களையும் நினைத்து வருந்திக் கொண்டிருக்கவில்லை. மாறாக, ஓர் இறைவாக்கினருக்கு ஏச்சும் பேச்சும் சாதாரணம் என்பதுபோல் எடுத்துக்கொண்டார், துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொண்டார். ஆகவே, இயேசுவை போன்று துன்பங்களையும் அவமாங்களையும் தாங்கிக்கொள்கின்றபோது நமக்கு இயேசு தரும் இளைப்பாறுதல் கிடைக்கும் என்பது உறுதி. ஏனென்றால் அவருடைய சுமை எளிதானது. மேலும் இயேசு தருகின்ற இந்த இளைப்பாறுதல் ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் கிடையாது (மத் 10:5-6) எல்லாருக்கும் உண்டு. எனவே, எல்லாருக்கும் அவர் தருகின்ற இளைபாற்றியை நாமும் பெற்றுக்கொள்வது நல்லது.
ஆகவே, உண்மையான இளைப்பாறுதலைப் பெற இயேசுவிடம் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed