மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும்.
ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை :
எச்சரிக்கையாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள்.
இது ஒரு கற்பனைக் கதை. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த பேராலயம் ஒன்றில் ஆண்டவர் இயேசு ஒருநாள் திடிரென்று மக்களுக்கு முன்பாகத் தோன்றினார். அவரைப் பார்த்தவுடன் எல்லோரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். பின்னர் அவரை ஒருசில மணித்துளிகள் தங்களுக்குப் போதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இயேசுவும் பீடத்திற்கு முன்பாகச் சென்று போதிக்கத் தொடங்கினார். மக்கள் அனைவரும் மிகக் கவனமுடன் கேட்டனர்.
அதன்பிறகு மக்கள் தங்களிடம் இருந்த காணிக்கைப் பொருட்களை அவரிடம் கொண்டுபோய் கொடுத்தனர். அவர் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஒருநாள் இரவு மட்டும் அந்த பேராலயத்தில் தங்கிக்கொள்ள அவர்களிடம் அனுமதிகேட்டு, அந்த நாள் இரவு முழுவதும் அந்த பேராலயத்தில் தங்கினார்.
அடுத்த நாள் காலை வேளையில் மக்கள் அனைவரும், இரவு முழுவதும் பேராலயத்தில் தங்கிய இயேசு என்ன ஆனார் என்று பார்ப்பதற்காக விரைந்து வந்தனர். ஆனால் இயேசு அங்கு இல்லை. மாறாக பேராலயம் முழுவதும் “எச்சரிக்கை, எச்சரிக்கை” என்ற வார்த்தை சிறியதும், பெரியதுமாக பல வண்ணங்களில் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்து மக்கள் வியப்படைந்து நின்றனர். கோவில் சுவர், ஜன்னல், பீடம், மேசை என்று எல்லா இடங்களிலும் “எச்சரிக்கை” என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்ததால், கோவிலே அலங்கோலமாக இருக்கிறது என்று சொல்லி அதனை மக்கள் அழிக்க நினைத்தனர். இருந்தாலும் இயேசு அவ்வார்த்தைகளை எழுதியிருக்கிறார் என்பதால் அவர்கள் அதனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டனர்.
அதன்பிறகு “எச்சரிக்கை” என்ற வார்த்தையின் வழியாக ஆண்டவர் இயேசு சொல்ல வருவது என்ன என்று சிந்திக்கத் தொடங்கினர். ஒவ்வொருவருடைய வாழ்வையும் மறுபரிசிலினை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இயேசு இப்படி எழுதிச்சென்றிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு இறைமக்கள் அனைவரும் விவிலியத்தை எச்சரிக்கையோடு வாசிக்கத் தொடங்கினர்; அருட்சாதனக் கொண்டாட்டங்களில் எச்சரிக்கையோடு கலந்துகொள்ளத் தொடங்கினர்; ஆலய ஜெபங்களையும் எச்சரிக்கையோடு செய்யத் தொடங்கினர்; ஒருவர் மற்றவரிடம் பழகும்போதுகூட எச்சரிக்கையோடும், அன்போடும் பழகினர்.
இப்படி எல்லாவற்றையும் அங்கிருந்தவர்கள் எச்சரிக்கையோடு செய்ததால் அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் முன்புபோல் வாழவில்லை, மாறாக இறைவனுக்கு உகந்த மக்களாக அவர்கள் வாழத் தொடங்கினார்கள். ஒருசில நாட்களிலே அந்த பேராலயத்தில் இருந்த முக்கிய பிரமுகர்கள் “எச்சரிக்கை” என்ற அந்த வார்த்தையை ஆலயத்தின் முகப்பில் எழுதி வைத்தால் எல்லாருக்கும் பயன்படுமே என்று கருதி அவ்வாறு செய்தனர். இதனால் ஒருசில மாதங்களிலே அந்நகரில் வாழ்ந்த மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் பிறந்தது.
ஆண்டவரின் இயேசுவின் வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால் நாம் அதற்கேற்ப எச்சரிக்கையோடு வாழவேண்டும் என்பதை இந்த கதை நமக்கு எடுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, ஆண்டவரின் நாள் எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்பதால் எச்சரிக்கையாய் இருங்கள் என்று மக்களுக்கு அறைகூவல் விடுக்கின்றார். உலக முடிவு, இறுதித்தீர்ப்பு, மானிடமகனது வருகையை பற்றி தொடர்ந்து பேசும் இயேசு கிறிஸ்து அதற்காக நாம் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாகும், விழிப்பாகவும் இருக்கவேண்டும் என்கிறார்.
நோவாவின் காலத்தில் மக்கள் அனைவரும் உண்டார்கள், குடித்தார்கள். கடவுளை மறந்து தங்களுடைய மனம்போன போக்கில் வாழத் தொடங்கினார்கள். இதனால் வெள்ளப்பெருக்கு வந்தபோது எல்லாருமே அழிந்துபோனார்கள். நாம் அப்படி கடவுளின் கோபத்திற்கும், சீற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கவேண்டும் என்பதற்குத் தான் இயேசு இப்படிப்பட்ட ஓர் எச்சரிக்கைய நமக்குத் தருகின்றார்.
மானிட மகனது வருகைக்காக அல்லது ஆண்டவரின் நாளுக்காக நாம் எப்படி நம்மையே தயாரிப்பது என்பதுதான் நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. நற்செய்தியில் இயேசு கூறுகிறார், “ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்று. எனவே ஆண்டவரின் வருகைக்காக நம்மையே நாம் தயாரிப்பதற்கு செய்யவேண்டிய முதன்மையான காரியம் ‘விழித்திருந்து ஜெபிப்பதாகும்’. ஜெபம்தான் நம்மை எல்லா அழிவிலிருந்தும் மீட்டெடுக்கும்.
அடுத்ததாக நாம் செய்யவேண்டிய காரியம். உலகத்தனமாக வாழ்க்கை வாழ்வதை விட்டுவிட்டு, இறைவனுக்கு முதன்மையான இடம்கொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டும். இப்படிச் செய்வதால் நாம் இறைவனுக்கு முன்னால் தகுதியுள்ளவர்களாக இருப்போம்.
எனவே அனுதினமும் விழித்திருந்து ஜெபிப்போம். இறைவனுக்கு முன்னுரிமை தந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
Source: New feed