என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 20-28
அக்காலத்தில்
செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். “உமக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு அவரிடம் கேட்டார்.
அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டினார்.
அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். அவர்கள், “எங்களால் இயலும்” என்றார்கள்.
அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங்கொண்டனர்.
இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————–
மறையுரைச் சிந்தனை
மறையுரைச் சிந்தனை (ஜூலை 25)
இன்று திருச்சபையானது தூய யாக்கோபின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சார்ந்த இவர், மீன்பிடித் தொழில் செய்துவந்தவர். இவர் செபதேயுவின் இரண்டு மகன்களில் ஒருவர். இன்னொருவர் நற்செய்தியாளரான தூய யோவான்.
ஒருமுறை இவர் தன்னுடைய சகோதரர் யோவான் மட்டும் சில பணியாளர்களோடு கடலில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஆண்டவர் இயேசு இவரிடம், “என் பின்னே வாருங்கள்” என்று சொன்னதும் அவரும், அவருடைய சகோதரரும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள் (மாற்கு 1:20)).
தூய யாக்கோபு திருத்தூதர்கள் அணியில் மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றார். எந்தளவுக்கு என்றால் இயேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெங்கும் இவரும் கூடவே செல்கிறார். குறிப்பாக ஆண்டவர் இயேசு உருமாற்றம் அடைகின்றபோதும், தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகளைக் குணப்படுத்திய போதும், கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்தபோதும் இவர் உடன் இருக்கிறார்.
ஒருமுறை இவருடைய தாய் சலோமி, ஆண்டவர் இயேசுவிடம் வந்து, அவர் ஆட்சியுரிமையோடு வரும்போது தன்னுடைய இரண்டு மகன்களில் ஒருவனுக்கு வலப்புறமும், இன்னொருவனுக்கு இடப்புறமும் இடமளிக்குமாறு கேட்கும்போது, இயேசு அவரிடம். “நான் குடிக்கபோகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்கிறார். இந்த நிகழ்வு தூய யாக்கோபு ஆண்டவர் இயேசுவுக்காக எப்படிப்பட்ட துன்பங்களைச் சந்திக்க இருக்கிறார் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது (மத் 20:20-28).
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புக்குப் பிறகு, இவர் எருசலேமில் உள்ள யூத மக்களுக்கு நற்செய்தி அறிவித்து வந்தார். அப்போது கி.பி. 43-44 ஆம் ஆண்டு ஏரோது அக்ரிப்பா என்ற மன்னன், யூதர்களையும், அங்கே இருந்த சமயத் தலைவர்களையும் திருப்திப்படுத்த இவரைக் கொலைசெய்தான். இவ்வாறு தூய யாக்கோபு ஆண்டவர் இயேசுவை எல்லா மக்களுக்கும் எடுத்துரைத்ததனால் தன்னுடைய இன்னுயிரையே பலியாகத் தந்தார்.
ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் நமக்குப் பல்வேறு துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும், நாம் தொடர்ந்து நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பதையே இவருடைய வாழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.
இந்த நேரத்தில் அன்னைத் தெரசா வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வை இங்கு இணைத்துச் சிந்தித்து பார்ப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
ஒருமுறை அன்னைத் தெரசா கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி எல்லாருக்கும் அறிவித்து, மக்களை மதம் மாற்றுகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அன்னையிடம், “அன்னையே! உங்கள் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாற்று எல்லாம் உண்மையா? என்று கேட்டார்.
அதற்கு அவர், “நான் தெருவோரங்களிலும், குப்பை மேட்டிலும் தூக்கி வீசப்படும் குழந்தைகளை அள்ளி எடுக்கிறபோது, அது எந்த மதம், என்ன மொழி பேசும் என்றெல்லாம் பார்ப்பதில்லை. மாறாக என்னுடைய அன்பையும், பாசத்தையும், இரக்கத்தையும் அக்குழந்தைக்கு வாரி வழங்குவேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என்னிடம் இருக்கும் மிகச் சிறந்த கொடையான கிறிஸ்துவின் மீது நான் கொண்ட விசுவாசத்தை எடுத்துரைப்பேன். அந்த கிறிஸ்துவ விசுவாசத்தை எடுத்துரைப்பதில் ஏதாவது தவறு இருக்கிறதா சொல்லுங்கள்?” என்று கேட்டார்.
நீதிபதி எதுவும் பேசாது இருந்தார். பின்னர் அந்த வழக்கு செல்லுபடியாகாது என்று சொல்லி, தள்ளுபடி செய்தார்.
அன்னைத் தெரசா தன்னுடைய வாழ்வில் எத்தனை இடர் வரினும், தான் கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை. அதுபோன்றுதான் யாக்கோபும் தான் கிறிஸ்துவின் மீதுகொண்ட விசுவாசத்தை ஒருபோதும் கைவிடாமல், அதற்காகத் தன்னுடைய உயிரையும் தந்தார்.
தூய யாக்கோபு ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று, அங்கே மறைபோதகப் பணியைச் செய்தார் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. யாக்கோபின் – சந்தியாகப்பரின் – நினைவாக “San Tiago” என்று அதன் தலைநகர் இன்றளவும் அழைக்கப்பட்டு வருவது நம்முடைய சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.
தூய யாக்கோபு நமக்கு ‘யாக்கோபு திருமுகத்தை’யும் வழங்கியிருப்பதை நாம் மறக்கமுடியாது. அத்திருமுகத்தில் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிச் சொல்லப்படுகிறது. நாவடக்கம் பற்றியும், நோயில் பூசுதல் பற்றியும் அதில் சொல்லப்படுகின்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஏழைகளை, அனாதைகளை மதிப்பது பற்றியும் சொல்லப்படுகின்றது. (யாக் 1:27). உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது வழிபாட்டோடு நின்றுவிடக்கூடிய ஒன்றல்ல, மாறாக அது வாழ்வோடு தொடர்புடையதாக இருக்கின்றது என்பதை இந்தத் திருமுகம் நமக்கு அழுத்தம் திருத்தமாக எடுத்துக்கூறுகிறது.
ஆகவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் நமது வாழ்வை இறை இரக்கச் செயல்கள் நிறைந்ததாக மாற்றியமைத்துக்கொள்வோம்.
ஜப்பானை ஆண்டு வந்த டெட்சுகன் (Tetsugan) என்ற மன்னன் புத்த மதத்தின் வேதநூலை தன்னுடைய நாட்டிலிருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அச்சிட்டுத் தரமுயன்றான். ஆனால் அவனிடத்தில் போதுமான பணமில்லை. எனவே, தனக்குத் தெரிந்த நண்பர்கள், அன்பர்களிடமிருந்து அதற்காக பணம் சேகரிக்கத் தொடங்கினான். ஏறக்குறைய தான் தொடங்கிய பணியை முடிப்பதற்குப் போதுமான பணத்தை சேகரிப்பதற்கு அவனுக்குப் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டது.
அவன் தன்னிடமிருந்த, தனக்குக் கிடைத்த பணத்தை எல்லாம் வைத்துக்கொண்டு, வேதநூலை அச்சடிக்கத் தொடங்கியபோது நாட்டில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான குடிசைகள் அழிந்துபோயின. மக்கள் எல்லாரும் தங்குவதற்கு இடமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இதைப் பார்த்த அரசன் தான் வேதநூலை அச்சிட வைத்திருந்த பணத்தையெல்லாம் மக்களுக்காகவே செலவழித்தான்.
சில ஆண்டுகள் கழித்து, அவன் மீண்டுமாக பணம் சேகரித்து, தான் மேற்கொண்ட பணியைத் தொடங்கியபோது நாட்டில் பூகம்பம் ஏற்பட்டு, ஏராளமான மக்கள் இறந்துபோனார்கள். அப்போதும் அவன் தான் வைத்திருந்த பணத்தை எல்லாம் மக்களுக்காகவே செலவழித்தான்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு நபர்களிடமிருந்து பணம் திரட்டி, தான் மேற்கொண்ட பணியை வெற்றிகரமகாச் செய்துமுடித்தான். அவன் அச்சடித்து வெளியிட்ட புத்தமதத்தின் வேதநூல்கள் கொயோடோ என்ற இடத்தில் உள்ள ஒபாகு மடத்தில் இன்றைக்கும் மக்களுக்குக் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று ஜப்பானியர்கள் தங்களுடைய குழந்தைகளிடம், “டெட்சுகன் மன்னன் இப்போது இருக்கும் வேதநூலின் முதல் இரண்டு பதிப்புகளை ஏற்கனவே பதிப்பித்துவிட்டான் என்றும் அந்த பதிப்புகள் இப்போது இருப்பதைவிடவும் மிகவும் சிறந்தது” என்றும் சொல்லி வருகிறார்கள்.
இறைத்தொண்டும், மக்கள்தொண்டும் வேறுவேறு அல்ல என்பது டெட்சுகன் என்ற அந்த மன்னன் நமக்கு எடுத்துரைக்கும் பாடமாக இருக்கின்றது. அவன் அப்படி வாழ்ந்ததனால்தான் இன்றும் மக்களால் நினைவுகூறப்படுகிறான்.
ஆகவே, தூய யாக்கோபின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாமும் கிறிஸ்தவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். எத்தகைய இடர் வரினும் தொடர்ந்து இறைவழியில் நடப்போம். இன்றைய நாள் இரண்டாம் வாசகத்தில் படிப்பது போல, “நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்து போவதில்லை” என்ற பவுலடியார் கொண்டிருந்த மனநிலையோடு வாழ்வோம்.
அதைவிட மேலாக வழிபாடும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்பதை உணர்ந்து, நம்மோடு இருக்கும் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் உதவிகளைச் செய்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
Source: New feed