தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-42
அக்காலத்தில்
மறைநூல்அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, “போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்” என்றனர்.
அதற்கு அவர் கூறியது: “இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!
தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மத்தேயு 12: 38-42
நீங்கள் கண்ணால் கண்டால்தான் எதையும் நம்புகிறவர்களா?
நிகழ்வு
தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைக் கப்பலில் பயணம் செய்வதிலேயே செலவிட்ட ஒரு கப்பல் தளபதி, ஒருநாள் தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு துறைமுகத்தில் வந்து இறங்கினார். அவர் துறைமுகத்தில் வந்து இறங்கிய நாளில், தற்செயலாக அருள்பணியாளர் ஒருவரைச் சந்தித்தார். அவர் அந்தக் கப்பல் தளபதியிடம், இயேசுவின் தியாக அன்பை எடுத்துக்கூறி, காணாமல் அவரை நம்புவோர் பேறுபெற்றோர் என்றார். இதற்கு அந்தக் கப்பல் தளபதி, “நான் கண்ணால் காணாத எதையும் நம்பமாட்டேன்” என்று சொல்லி, அருள்பணியாளருடனான பேச்சைத் துண்டித்தார்.
பின்னர் அருள்பணியாளர் அவருடைய வழியில் சென்றுவிட, கப்பல் தளபதி கப்பலில் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார். அன்றைய நாளில் அவர் பயணம் செய்த கப்பல் எதிர்பாராத விதமாக ஒரு பனிப்பாறையில் மோத, அதில் பெரியை சேதம் ஏற்பட்டது. அந்நேரத்தில் அந்த வழியாக இன்னொரு கப்பல் வர, அந்தக் கப்பலில் இருந்தவர்கள் பனிப்பாறையில் மோதிச் சேதமான கப்பலில் இருந்த கப்பல்தளபதி உட்பட காயமடைந்த ஒருசிலருக்குச் சிகிச்சை அளிக்க, எல்லாரும் விரைவில் நலமடைந்தார்கள்.
இந்த நிகழ்விற்குப் பிறகு எதையும் கண்ணால் கண்டால்தான் நம்புவேன் என்று சொல்லிக்கொண்டிருந்த கப்பல் தளபதி தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தார். ‘கண்ணுக்குத் தெரியாமல் கடலுக்குள் இருக்கும் பனிப்பாறைவே இவ்வளவு வல்லமையானதாக இருக்கும்பொழுது, கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் கடவுள் எவ்வளவு வல்லமயானவராக இருப்பார்…! இந்த உண்மையை உணராமல், இத்தனை ஆண்டுகளும் நான் வாழ்ந்துவிட்டேனே…!’ என்று சொல்லி வேதனைப்பட்டார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற கப்பல் தளபதியைப் போன்றுதான் பலரும் எதையும் கண்ணால் கண்டால்தான் நம்புவேன் என்றும், அருமடையாளத்தைக் கண்டால் நம்புவேன் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற மறைநூல் அறிஞரும், பரிசேயர்களும், (நீர் மெசியா என்றால்) அடையாளம் ஒன்றைக் காட்டவேண்டும் என்று விரும்புகிறோம் என்கிறார்கள். இதற்கு இயேசுவின் பதில் என்னவாக இருக்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவை மெசியா என்று நம்ப மறுத்த பரிசேயர்கள்
மக்கள் நடுவில் இறையாட்சிப் பணியைச் செய்தத் தொடங்கிய இயேசு, இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு வல்லசெயல்களையும் அருமடையாளங்களையும் அவர்கள் நடுவில் செய்துவந்தார். இவற்றையெல்லாம் பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் கண்கூடாகக் கண்டார்கள். ஆனாலும், அவர்கள் இயேசுவே மெசியா என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். மேலும் அவரை எப்படியாவது ஒழித்துக்கட்ட முடிவுசெய்தார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவர்கள் இயேசுவிடம் வந்து, “அடையாளம் ஒன்று காட்டவேண்டும் என விரும்புகிறோம்” என்கிறார்கள்.
பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்ட அடையாளம் சாதாராண ஒன்று அல்ல. யோர்தானை இரண்டாகப் பிளப்பது, வானத்திலிருந்து விண்மீனைக் கீழே விழச் செய்வது போன்ற அடையாளம். பரிசேயர்கள் இதுமாதிரியான அடையாளத்தைக் கேட்டதும், இயேசு அதைச் செய்யவில்லை. ஏனெனில், இதற்கு முன்பாக இயேசு செய்த அருமடையாளங்களை நம்பி, அவரை மெசியா என்று ஏற்றுக்கொள்ளவில்லை. தான் இனிமேலும் அருமடையாளங்களைச் செய்தாலும் இவர்கள் நம்ப மாட்டார்கள் என்பதாலேயே இயேசு அவர்களிடம் அடையாளம் ஒன்றைக் காட்டவில்லை; ஆனால், வேறு ஓர் அடையாளத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். அது என்ன என்று இப்பொழுது பார்ப்போம்.
இயேசு யோனாவை விட, சாலமோன் மன்னரை விடப் பெரியவர்
தன்னிடம் அடையாளம் கேட்ட பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞரிடம் இயேசு யோனாவை அடையாளமாகத் தருகின்றார். மேலும் யோனா அறிவித்த நற்செய்தியைக் கேட்டு நினிவே நகர மக்கள் மனம்மாறினார்கள்; ஆனால், தான் யோனாவைவிடப் பெரியவர் என்பதால், அவர்கள் தீர்ப்பு நாளில் இந்தத் தலைமுறையினருக்கு எதிராக எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள் என்கிறார். அதேபோன்று சாலமோனின் ஞானத்தைக் கேட்க, தென்னாட்டு அரசி, உலகின் கடைகோடியிலிருந்து வந்தார் (1அர 10: 1-10). தான் சாலமோனைவிடப் பெரியவர் என்பதால், தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து, அவர்களைக் கண்டனம் செய்வார் என்கிறார் இயேசு.
ஆம், இயேசு இறைவாக்கினர் யோனாவை விட, சாலமோன் மன்னரை விடப் பெரியவர். அப்படியிருந்தும் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவரை நம்ப மறுத்தார்கள். இயேசுவின்மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லாததினாலேயே அவர்கள அதற்கான தண்டனையைப் பெற்றார்கள். எனவே, நாம் இயேசுவை மெசியா என்று நம்பி, அவர் வழியில் நடந்து, அவருக்கு உகந்தவர்கள் ஆவோம்.
சிந்தனை
‘இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கின்றார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கின்றார்’ (1யோவா 4: 15) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவே மெசியா என்றும் இறைமகன் என்றும் ஏற்க மறுத்த பரிசேயர்களைப் போன்று இல்லாமல், அவரை இறைமகன் என ஏற்று, அறிக்கையிடுவோம். அறிக்கையிட்டதை நம்பி, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed