மெசியாவைக் கண்டோம்.
+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42
அக்காலத்தில் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் பெத்தானியாவில் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் செம்மறி!” என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.
இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்.
அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். `ரபி’ என்னும் எபிரேயச் சொல்லுக்குப் `போதகர்’ என்பது பொருள்.
அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.
அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். `மெசியா’ என்றால் `அருள்பொழிவு பெற்றவர்’ என்பது பொருள்.
பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி `கேபா’ எனப்படுவாய்” என்றார். `கேபா’ என்றால் `பாறை’ என்பது பொருள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
Source: New feed