எல்லாருக்குமான இறைவன்
நிகழ்வு
டோனி டி மெல்லோவின் கதை இது. ஓர் ஊரில் இறையடியார் ஒருவர் இருந்தார். அவர் இறைவனைத் தொழாத நாளில்லை. அப்படிப்பட்டவர் ஒருநாள் இறைவனிடம் மிக உருக்கமாக வேண்டிக்கொண்டிருக்கும்போது, இறைவன் அவருக்கு முன்பாகத் தோன்றினார். இறைவனின் தரிசனத்தை சிறிதும் எதிர்பார்த்திராத இறையடியார், அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
பின்னர் அவர் இறைவனைப் பார்த்து, “இறைவா! உன் கருணையோ கருணை. எளியவன் என்னைப் பார்க்க வந்திருக்கின்றாயே… சொல்லும் உமக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்கிறேன்” என்றார். உடனே இறைவன் அவரைப் பார்த்து, “எனக்கு ஃபுட்பால் ஆட்டம் பார்க்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. பக்கத்தில் எங்காவது ஃபுட்பால் ஆட்டம் நடந்துகொண்டிருந்தால் என்னை அங்கு கூட்டிக்கொண்டு போவாயா?” என்று கேட்டார். “இதோ உடனே கூட்டிக்கொண்டு போகிறேன் சாமி” என்று இறையடியார் இறைவனை ஃபுட்பால் ஆட்டம் நடைபெற இருந்த ஒரு மைதானத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.
அவர்கள் மைதானத்திற்குள் சென்ற சிறிது நேரத்தில் போட்டி ஆரம்பமானது. அன்றைய நாளில் போட்டியானது கிறிஸ்தவர்கள் அணிக்கும் சீக்கியர்கள் அணிக்கும் இடையே நடைபெற்றது. போட்டி தொடங்கிய சிறுதுநேரத்திலே கிறிஸ்தவர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் முதல் கோலைப் போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன் மிகவும் உற்சாகமாகக் கத்தினார். தன்னுடைய தலையில் அணிந்திருந்த தொப்பியை மேலும் கீழும் தூக்கிப் போட்டுப் பிடித்தார். இதைப் பார்த்த இறையடியாருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ‘இறைவன் ஃபுட்பால் ஆட்டத்தை நன்றாக இரசிக்கிறார் போலும், இரசிக்கட்டும்’ என்று நினைத்துவிட்டு, எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தார்.
நேரம் ஆக ஆக, போட்டி இன்னும் சூடுபிடித்தது. யாரும் எதிர்பாராத தருணத்தில் சீக்கியர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் ஒரு கோலைப் போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன் முன்புபோல் உற்சாகத்தில் கத்தினார், தன்னுடைய தொப்பியைக் கழற்றி மேலும் கீழும் தூக்கப் போட்டுப் பிடித்தார். இது இறையடியாருக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தந்தது. உடனே அவர் இறைவனை அழைத்து, “இறைவா! நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்? கிறிஸ்தவ மதமா? சீக்கிய மதமா?” என்று கேட்டார். அதற்கு இறைவன், “நான் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதைவிட எல்லாருக்கும் சொந்தமானவன், எல்லாரும் என்னுடைய மக்கள். அதனால்தான் நான் இரு தரப்பினரும் கோல்போட்ட போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்” என்றார்.
இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர். அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குலத்திற்கோ மட்டும் சொந்தமாக்குவது அர்த்தமற்ற செயல்.
குழந்தை இயேசுவைத் தேடிவந்த ஞானிகள்
இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையினை உணர்த்தும் திருக்காட்சி பெருவிழாவை அல்லது மூன்று ஞானிகளுடைய பெருவிழாவை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். வானவியல் அறிஞர்களான இந்த மூன்று பேருமே வானத்தில் தோன்றிய விண்மீனைப் பார்த்துவிட்டு, யூதர்களின் அரசர் தோன்றியிருக்கின்றார் என்று உறுதிசெய்துகொண்டு, அவரைப் பார்க்க காணிக்கைப் பொருட்களோடு எருசலேமை நோக்கி வருகிறார்கள். வந்து குழந்தை இயேசுவைச் தரிசிகிறார்கள். பின்னர் தங்களுடைய இல்லத்திற்கு மாற்றுப் பாதையில் திரும்பிச் செல்கிறார்கள்.
இன்று இம்மூன்று ஞானிகளின் விழாவைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில், இவ்விழா நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
1. இறைவன் வாக்கு மாறாதவர்
விண்மீன் வழிகாட்டுதலின் பேரில் எருசலேமிற்கு வந்த மூன்று ஞானிகளும், அங்கிருந்த ஏரோது மன்னனிடம் சென்று, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரை வணங்க வந்திருக்கிறோம்?” என்கிறார்கள். இதைக் கேட்டு ஏரோது கலங்கினாலும் தலைமைக் குருக்களையும் மறைநூல்கள் அறிஞர்களையும் கூப்பிட்டு, “மெசியா எங்கே பிறப்பார்?” என்று கேட்க, அவர்கள் பெத்லகேம் என்று சொல்கிறார்கள். இங்கேதான் நாம் ஒன்றை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மெசியா பெத்லகேமில்தான் பிறப்பார் என்ற செய்தி மறைநூல் அறிஞர்களுக்கும் தலைமைக்குருக்களும் தெரிந்தபோதும், அவர்கள் மூன்று ஞானிகள் சொன்னதைக் கேட்டு இயேசுவை/மெசியாவைப் பார்க்கச் செல்லவில்லை. மாறாக மூன்று ஞானிகள்தான் இறைவார்த்தையை நம்பி, இயேசுவைக் காணச் செல்கின்றார்கள். கடைசியில் கண்டுகொள்ளவும் செய்கிறார்கள்.
இறைவன் சொன்ன சொல் மாறாதவர் (13:8), அப்படிப்பட்டவருடைய வார்த்தைகளை நம்பிச் செயல்பட்ட மூன்று ஞானிகளைப் போன்று நாமும் செயல்பட்டால், இறைவனின் ஆசிரைப் பெறுவது உறுதி.
2. இயேசு – இறைவன் – எல்லாருக்கும் பொதுவானவர்
இயேசுவைக் காணவந்த மூன்று ஞானிகளுமே யூதர்கள் அல்ல, அவர்கள் புறவினத்தார். அப்படியிருந்தபோதும் ‘யூதர்களின் அரசர்’ (?) என்று அறியப்பட்ட இயேசு, அவர்களுக்கும் தன்னை வெளிப்படுத்துகின்றார். இது ஆண்டவராகிய இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர் என்றால், இறைவன் என் குலத்திற்கு, என் இனத்திற்கு மட்டும்தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்? அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஒன்று.
இறைவன் எல்லாருக்கும் பொது என்றால், யாவரும் ஓரினம், ஒரு தாயின் மக்கள் என்பதுதான் நிஜம்
3. நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுவோர், அவரைக் கண்டுகொள்வர்
திருக்காட்சிப் பெருவிழா நமக்குக் கொடுக்கும் மிக முக்கியமான செய்தி, நாம் நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடினோம் என்றால், அவரை நிச்சயமாக கண்டுகொள்வோம் என்பதாகும். மூன்று ஞானிகளும் இயேசுவை முழு மனதாக, அதே நேரத்தில் நேர்மையான உள்ளத்தோடு தேடினார்கள். இடையில் அவர்கள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்திருக்கக்கூடும். அவற்றைக் கண்டெல்லாம் அவர்கள் மனந்தளராமல் ஆண்டவரைத் தேடினார்கள். இறுதியில் கண்டுகொள்ளவும் செய்தார்கள். நாமும் அவர்களைப் போன்று ஆண்டவரைத் தேடினால், நிச்சயம் கண்டுகொள்வோம் என்பது உறுதி.
சிந்தனை
இன்றைக்கு கடவுளின் பெயராலே பிளவுபட்டுக் கிடக்கின்றோம். இந்தக் கோவில் எங்களுக்குத்தான் சொந்தம், அவர்கள் இதில் வழிபட உரிமை இல்லை என்று வேற்றுமை பாராட்டுகின்றோம். ஆனால், இறைவன் ஒருவர்தான், அவர் எல்லாருக்கும் பொதுவானவர். அப்படிப்பட்டவரை நாம் நம்மிடம் இருக்கின்ற வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமை உணர்வோடு வழிபடுவோம். அவரை முழு உள்ளத்தோடு தேடி, அவருக்கு உகந்த மக்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed