உரோம் நகரின் ஆயர் என்ற முறையில் இஞ்ஞாயிறன்று உரோம் புறநகர்ப் பகுதியிலுள்ள விதெர்போவின் சான் கிறிஸ்பினோ என்ற பங்குதளத்திற்கு திருப்பலி நிறைவேற்றச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று துவங்கும் தவக்காலத்தை, நாம் மற்றவர்களை எவ்விதம் நடத்துகிறோம் என்பது குறித்து ஆழ்ந்து சிந்திக்கும் காலமாகப் பயன்படுத்தவேண்டும் என தன் மறையுரையில் விண்ணப்பித்தார்.
நம் இதயம் மற்றவர்களின் முன் எவ்விதம் செயலாற்றுகின்றது என்பதைக் குறித்து நாம் நம்மையே ஆய்வுசெய்ய வேண்டிய காலமிது என்று கூறியத் திருத்தந்தை, மற்றவர் முன் சிரித்த முகத்துடன் பழகிவிட்டு, அவர்களுக்குப் பின்னே சென்று, அவர்களைக் குறைகூறி, நம் நாவால் அழிவை உருவாக்குகிறோமா என்பதைச் சிந்திப்போம் என அழைப்பு விடுத்தார்.
மற்றவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தி புறங்கூறும் பழக்கத்தைக் கைவிட முயல்வோர், முதலில், இக்குணத்தை, தங்களிடமிருந்து அகற்றுமாறு இறைவனை நோக்கிச் செபிப்பதுடன், மௌனம் காக்கவும் பழகிக்கொள்ள வேண்டும், இரண்டாவதாக, மற்றவர்களைப் பற்றி தவறாக பேசுவதற்கு சோதனை வரும்போதெல்லாம் நாக்கை பலமாக கடித்து வார்த்தைகளை அடக்கிக் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மற்றவர்களைப்பற்றி பேசாமல் மௌனம் காக்கவேண்டும் என்ற அழைப்பு, அவர்கள் தவறு செய்யும்போது வாயை மூடி மௌனியாக இருக்க வேண்டும் என்பதற்கான அழைப்பல்ல, மாறாக, சொல்லவேண்டியதை முகத்திற்கு நேராக சொல்லப் பழகவும், முதுகுக்குப் பின்னால பேசுவதை தவிர்க்கவுமே என்று கூறினார் திருத்தந்தை.
சான் கிரிஸ்பினோ பங்குதளத்தில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு முன்னர், சிறார்களையும் இளையோரையும், திருமுழுக்குப் பெறவிருக்கும் குழந்தைகளின் பெற்றோரையும் தனித்தனி குழுக்களாக சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரின் சில கேள்விகளுக்கு பதிலளித்து, சிறார்களின் பாடலுக்கு செவிமடுத்ததுடன், அப்பகுதியின் அருள்பணியாளர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரையும் ஆசீர்வதித்து, அப்பங்குத்தளத்தின் ஐந்து விசுவாசிகளுக்கு ஒப்புரவு அருளடையாளத்தையும் நிறைவேற்றினார்
Source: New feed