திரு இருதயம் நசரேத்து வாழ்வில் நமக்கு முன்மாதிரிகை.
மோட்சத்தில் வாழும் பரிசுத்த தமத்திருத்துவ கடவுளின் வாழ்வை நசரேத்தூரில் வாழ்ந்த சேசுவின் திரு இருதயமானது நல்ல விதமாய்ப் பின்பற்றி நடந்தது. அங்கே பிதா, சுதன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரும் நித்திய அன்பால் ஐக்கியமாகி பேரின்ப பாக்கியத்தில் குடிகொண்டிருக்கிறார்கள். கடவுள் மனிதர் பேரில் தாம் வைத்த அளவற்ற பெருக்கத்தால் அவர்களைச் சுபாவத்துக்கு மேலான நிலைக்கு உயர்த்தி தமது தத்துப் பிள்ளையாக மாற்றி தமது தெய்வீக குடும்பத்தின் அங்கத்தினராகச் செய்திருக்கிறார்.
திவ்விய சேசு இவ்வுலகத்துக்கு வந்து முப்பத்து மூன்று ஆண்டு நசரேத்தூரில் தமது திருத் தாயோடும், அர்ச். சூசையப்பரோடும் வாழ்ந்து அர்ச். சூசையப்பருக்கும், குடும்பத்துக்கடுத்த வேலையில் பரிசுத்த கன்னி மாதாவுக்கும் உதவி புரிந்து வந்ததற்குக் காரணம், அவர்களை அன்புச் செய்து அவர்களுக்குப் பணிந்து ஊழியம் செய்யவேண்டுமென்பது மட்டுமல்ல; நம்மைத் தமது சுவீகார சகோதரர்களாக்கி தேவ திருக்குடும்பத்தின் மேலான வாழ்வில் பழக்கி, அக்குடும்பத்தின் புண்ணியங்களையும் பரிசுத்ததனத்தையும் இவ்வுலகத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழியைக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே அவருடைய கருத்து. நமது சாதாரண செயல்களைப் புனிதப்படுத்தும் விதத்தை திவ்விய சேசு நாசரேத்தூரில் தமது திவ்விய மாதிரிகையால் நமக்கு அறிவித்திருக்கிறார்.
தாழ்மையும் கஷ்டமுமுள்ள கைத்தொழிலால் தமது பரமதந்தைக்கு பூரிப்பு வருவித்து அவரை மகிமைப்படுத்த தமது வாழ்நாளின் பெரும்பாகமாகிய முப்பது வருடத்தை செலவழித்தார். புனிதத்தன்மை எல்லாராலும் அடையக் கூடுமென்றும், வீண் பெருமையால் தீங்கு விளையக்கூடிய பெரிய காரியங்களிலும், பிரபல்யமான செயல்களிலும் அது அடங்கினதல்லவென்றும் கற்பிக்கச் சித்தமானார். நாம் தினந்தோறும் செய்கிற சாதாரண அலுவல்களை உத்தமமாய்ச் செய்து முடிப்பதிலும், வேதாகமம் திவ்விய சேசுவைப்பற்றி அவர் எல்லாம் நன்றாய்ச் செய்தார் என்று உச்சரிக்கும் வாக்கியம் நம்மில் பூரணமாய் நிறைவேறும்படி செய்வதிலுந்தான் புனிதத்தன்மை அடங்கியிருக்கிறது. ஆதலால் நம்முடைய செபமும், வார்த்தையும், செய்கையும் எவ்வளவு உத்தமமாயிருக்கவேண்டுமென்றால் சேசுவின் திரு இருதயமானது எப்படி செபம் பண்ணினதோ, எப்படி வேலை செய்ததோ, அப்படியே நாமும் செய்கிறோமென்றும், அவர் நசரேத்தூரில் வாழ்ந்த வாழ்வுதான் நாமும் வாழுகிறோமென்றும் எதார்த்தமாய்ச் சொல்லவேண்டும். சாதாரணக் காரியங்களைச் சுபாவத்துக்கு மேலான உத்தமமாய்ச் செய்வதில்தான் பரிசுத்த தன்மை அடங்கியிருக்கிறது என்று அர்ச். பொனவெந்தூர் சொல்லியிருக்கிறார்.
செபம் பண்ண நேரமில்லையென்று சாக்குப்போக்கு சொல்லுகிற கிறிஸ்தவர்கள் தான் ஒவ்வொரு நாளிலும் எத்தனை மணி நேரங்களை வீண் பேச்சிலும், உபயோகமில்லாத வேலைகளிலும் செலவழித்து, வீண் காலம் போக்குவார்கள்! அவர்கள் செபம்பண்ணத் தடையாயிருக்கிறது நேரத்தின் குறைவல்ல, நல்ல மனதின் குறைவுதான். உறுதியான மனதும், உண்மையான பக்தியும் அவர்களிடத்தில் கிடையாது. நம்முடைய இருதயத்தை சேசுகிறிஸ்துவின்பால் எழுப்பி, நம்முடைய அன்றாட அலுவல்களை அவருக்கு ஒப்புக்கொடுக்க அதிக நேரம் தேவையில்லை. நசரேத்தூரில் காலையில் எழுந்திருந்ததும் திவ்விய சேசுவின் முதல் நினைவும் செயலும் ஏதென்றால், தமது பிதாவுக்கு முன்பாக தமது மாதாவோடும், தம்மை வளர்த்த தந்தையான அர்ச். சூசையப்பரோடும், சாஷ்டாங்க தெண்டனிட்டு அவர் தங்களுக்குச் செய்த சகல உபகாரங்களுக்கும் நன்றி செலுத்தி, தங்களுடைய செயல்களையெல்லாம் உலக மீட்புக்காக ஒப்புக்கொடுப்பதேயாகும். நாமும் அவருடைய திவ்விய மாதிரிகையைப் பின்பற்றி நடப்போமாக.
நல்ல கிறிஸ்தவன் விவிலியக்கோட்பாடுகளை கடைப்பிடிக்க எப்படி நடக்கவேண்டும் என்று சேசுக்கிறிஸ்துநாதர் தாமே நமக்கு அறிவித்திருக்கிறார். நீங்கள் தர்மம் செய்யும் போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாதிருக்கட்டும் (மத்தேயு 6:3) என்று திருவுளம் பற்றுகிறார். இதற்கு அர்த்தம் ஏதென்றால், நீ ஒரு நற்செயல் செய்யும்போது உன் வீண்மகிமைக்காகவும், மனிதர்கள் உன்னைப் புகழ்ந்து கொண்டாடும்படியிருக்கவும் செய்யாமல், கடவுளுடைய மகிமைக்காகவும் பிறருடைய ஆத்தும் மீட்புக்காகவும் செய், மோட்சத்தில் உனக்கு பலன் கிடைக்கும் என்கிறார். நாம் செய்கிற நற்செயல்கள் நித்தியத்தின் விதையென்று அர்ச். பெர்நர்து சொல்லுகிறார். விதை விதைக்கிற குடியானவன், தான் விதைக்கிற சிறு விதையானது மிகவிரைவில் ஏராளமான பலன் கொடுக்குமென்று அறிந்திருக்கிறான். கிறிஸ்தவர்கள் நித்திய மகிமைக்காக விதை விதைக்கிறவர்கள். திரு இருதய அன்புக்காக செய்கிற நமது நற்செயல்கள் நாம் மோட்சத்தில் அநுபவிக்கப் போகிற விலையேறப்பெற்ற பலன்களை நமக்கு விளைவிக்கும்.
ஆதலால் சேசுவின் திரு இருதயத்திற்கு உன் செயல்களையும், களைப்பு தவிப்பையும் ஒப்புக்கொடுத்து, அதன் அன்புக்காக சகலத்தையும் செய்வாயேயாகில் நீ கூலிக்காரனானாலும் சரி அல்லது அரசு அலுவலனானாலும் சரி, நீ மாணவனானாலும் சரி, நித்திய மோட்சபாக்கியத்தை அடையலாம்.
நசரேத்தூரில் சேசுவின் திரு இருதயமானது நாம் நமது செயல்களை புனிதப்படுத்தும் விதத்தைக் கற்றுக் கொடுக்கிறதுமல்லாமல், தாழ்ச்சி, கீழ்ப்படிதல், பிறரன்பு, தரித்திர அன்பு, இவ்வுலக காரியங்களின்மேல் பற்றுதலில்லாமை, ஆண்டவருடைய ஊழியத்தில் உறுதியான பிரமாணிக்கம், கடவுளுடைய தோத்திரத்தின் பேரிலும், ஆத்தும் மீட்பின் பேரிலும் மிகுந்த பற்றுதல் முதலிய புண்ணியங்களையும் படிப்பிக்கிறது.
Source: New feed