
கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51
அக்காலத்தில்
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.
அதற்கு இயேசு, “உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
செப்டம்பர் 29 – தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் – அதிதூதர்கள் விழா
மறையுரைச் சிந்தனை
“Angels” என்ற புத்தகத்தில் சொல்லப்படக்கூடிய நிகழ்ச்சி இது. 1998 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்துவந்த ஜெஸ்சி, சாரா மற்றும் மரியா என்ற மூன்று இளம்பெண்களும் விடுமுறைதினம் ஒன்றில் தங்களுக்கு முன்பு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஒருவரைச் சந்திக்க வாகனத்தில் அதிகாலையிலே புறப்பட்டனர்.
போகிற வழியில் கல்லறை ஒன்று இருந்தது. அதிலே சில தினங்களுக்கு முன்புதான் ஜெஸ்சியின் சகோதரன் இறந்து அடக்கம் செய்யப்பட்டிருந்தான். மற்ற இருவரையும் காரிலே இருக்கச் சொல்லிவிட்டு, ஜெஸ்சி மட்டும் கல்லறைக்குச் சென்று, தன் சகோதரன் கல்லறை முன்பாக நின்று ஜெபித்துவிட்டுத் திரும்பினாள். அவள் காரில் ஏறியதும் மீண்டும் அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஆனால் பயணம் தொடங்கிய சிறிது நேரத்திற்குள் கார் ஒரு சிறுகுழியில் இறங்கிவிட்டது. வண்டியை எவ்வளவோ முன்னும், பின்னும் தள்ளிப்பார்த்தும், அவர்களால் வண்டியை வெளியே கொண்டுவர முடியவில்லை. அடர்ந்த காடுவேறு அது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். மூன்று பேருமே, “யாராவது இங்கே இருந்தால் எங்களுக்கு உதவுங்கள்” என்று சத்தமாகக் கத்திப் பார்த்தார்கள்.
அப்போது ஒரு மனிதர் வெண்ணிற ஆடையில் அங்கு வந்தார். அவரிடத்தில் தங்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்ல அவர் ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று சொல்லிவிட்டு, கார் சாவியை வாங்கிகொண்டு, உள்ளே ஏறி, வண்டியை ஒரு அழுத்து அழுத்தினார். அடுத்த நொடியில் வாகனம் வெளியே வந்தது. அவர்களுக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. எவ்வளவு நேரம் முயன்றும் முடியாததை, இவர் ஒரே நொடியில் செய்துவிட்டாரே என்று அவருக்கு நன்றி சொன்னார்கள். அவரும் பதிலுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து மாயமாய் மறைந்துபோனார். அவர் எந்த வழியில் போனார் என்ற காலடித் தடம்கூட இல்லாதது கண்டு, அவர்கள் இன்னும் மலைத்துபோய், வானதூதர் ஒருவர் தான் நம்மைக் காப்பாற்றி இருக்குகிறார் என்று நம்பி, தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
இன்று திருச்சபையானது விண்ணக அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல், ரஃபேல் ஆகியோரின் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. தூதர்கள் நமக்கு எப்போதும் இறைவனின் திருமுன் நின்றுகொண்டு நமக்காக பரிந்துபேசுபவர்கள்; நமக்கு என்றும் துணையாய் இருப்பவர்கள்; துன்பத்திலிருந்து காப்பவர்கள். மேலும் கடவுள் படைத்தவைகளில் சிறந்தவை எனப் போற்றப்படுவோர் வானதூதரும், மனிதரும் மட்டும்தான்.
விவிலியத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை வானதூதர்களின் பணிகளை பல இடங்களில் நாம் காணலாம். இன்றைய நாளில் சிறப்பாக இறைவன் திருமுன் நின்று பணிபுரியும் ஏழு வானதூதர்களில் முதன்மையான மூன்று தூதர்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக மிக்கேல் அதிதூதர்: மிக்கேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு “கடவுளுக்கு நிகர் யார்?” என்பது பொருள். இறைவனுக்கு எதிராக சிந்தித்த லூசிபரையும், அவன் தோழர்களையும் அதிதூதர் மிக்கேல் நல்லதூதர்களை தன்னோடு இணைத்துக்கொண்டு அவர்களை நரகத்தில் வீழ்த்தினார். அதனால் அவர் தலைமை தூதர் ஆனார். இவரைக் குறித்து தானியேல் நூலிலும், திருவெளிப்பாடு நூலிலும் படிக்கின்றோம். இவரே நம் திருத்தந்தையின் (போப்பாண்டவர்) காவல் தூதரும், நற்கருணையின் பாதுகாவலரும் ஆவார்.
இரண்டாவதாக கபிரியேல் அதிதூதர்: கபிரியேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு “கடவுளின் ஆற்றல்” என்பது பொருள். ஆறுதல் தரும் செய்திகளை விண்ணிலிருந்து மண்ணகத்திற்கு கொண்டுவருபவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை சக்கரியாவுக்கும், இறைமகன் இயேசுவின் பிறப்பை அன்னை மரியாளுக்கும் அறிவித்தவர். அதனால் இவர் நற்செய்தியின் தூதர் எனவும் அழைக்கப்படுகிறார்.
மூன்றாவதாக ரஃபேல் அதிதூதர்: ரஃபேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு “கடவுள் குணமளிக்கிறார்” என்பது பொருள். இவரே நோயாளிகளுக்கும், பயணிகளுக்குமான பாதுகாவலராக இருக்கிறார். இவரைக் குறித்து தோபித்து நூல் முழுமைக்கும் வாசிக்கின்றோம். பெரிய தோபித்துவுக்கு பார்வை கிடைக்கவும், அவருடைய மகனுக்கு வழித்துணையாக இருந்து நல்ல மனைவி கிடைக்கக் காரணமாக இருந்தவர் இவரே.
ஆதலால் இறைவனின் திருமுன் நின்று அவருக்குப் பணிபுரிந்தும், நமக்கும் தீமையை வெல்வதற்கான ஆற்றலையும், ஆறுதல் செய்தியையும், குணத்தையும் தரும் இத்தூதர்களைப் போன்று நாமும் இறைவனுக்கு மட்டுமே பணிபுரிந்து வாழ்வோம். இறையருள் பெறுவோம்.
“நீர் செல்லும் இடமெல்லாம் உன்னைக் காக்கும்படி அவர் தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார். (திபா 91:11).
Source: New feed