மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45
அக்காலத்தில்
இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், “நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்” என்றார்.
அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
லூக்கா 9: 43b-45
“துன்பங்கள் நம்மைக் கடவுளுக்கு மிக நெருக்கமாகக் கொண்டுசெல்லும்”
நிகழ்வு
சிறுவன் ஒருவன் இருந்தான். இவனுடைய வீடு ஒரு குளத்தின் கரையருகே இருந்தது. அதனால் இவன் ஆசை ஆசையாய் ஒரு படகு செய்து, அதை குளத்தில் விட்டு, கரையில் அமர்ந்துகொண்டு அதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். கரையின் அருகிலேயே இருந்த அந்தச் சிறிய படகு, ஒரு பெரிய காற்று வீசியதும், குளத்திற்கு உள்ளே அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இவன் சத்தமாக அழத் தொடங்கினான்.
அப்பொழுது அந்த வழியாக வந்த இளைஞன் ஒருவன் சிறுவன் அழுதுகொண்டிருப்பதைக் கண்டு, “தம்பி! உனக்குக் என்ன ஆயிற்று…? நீ ஏன் இப்படி அழுதுகொண்டிருக்கின்றாய்…?” என்று கேட்க, சிறுவன், நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் அந்த இளைஞனிடம் எடுத்துச் சொன்னான். உடனே இளைஞன் குளக்கரையில் கிடந்த கூழாங்கற்களை எடுத்து, அவற்றை ஒவ்வொன்றாகச் சிறுவனின் சிறு படகை நோக்கி எறியத் தொடங்கினான்.
சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “நாம் இவரிடம் படகை அருகில் கொண்டுவரத்தானே சொன்னோம்; ஆனால், இவர் கற்களைப் படகின்மீது எறிந்து அதை தண்ணீருக்குள் மூழ்கடிக்க அல்லவா முயற்சி செய்கின்றார்’ என்று ஒன்றும் புரியாமல் விழித்தான். சிறிதுநேரம் சிறுவன் அந்த இளைஞனின் செயலை உற்றுக் கவனித்தபொழுதான் தெரிந்தது, அந்த இளைஞன் தன்னுடைய படகின்மீது கூழாங்கற்களை எறியவில்லை; படகுக்கு அப்பால்தான் கூழாங்கற்களை எறிகின்றார் என்று.
அந்த இளைஞன், சிறுவனுடைய படகுக்கு அப்பால் கூழாங்கற்களைத் தொடர்ந்து எறிந்ததால், சிறு சிறு அலைகள் உண்டாயின. அந்த அலைகள் சிறுவனுடைய படகை அவனுக்கு மிக அருகில் கொண்டு வந்து சேர்த்தன. இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்த சிறுவன், “அண்ணா! முதலில் நீங்கள் என்னுடைய படகை நோக்கி கூழாங்கற்களை எறிந்ததபொழுது, அதை நான் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டேன். பின்னர்தான் நீங்கள் ஏன் அப்படிச் செய்தீர்கள் என்ற உண்மை புரிந்தது. என்னுடைய படகை என்னிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு மிக்க நன்றி” என்றான். இளைஞனும் அந்தச் சிறுவனின் நன்றியை ஏற்றுக்கொண்டவனாய், அவனிடமிருந்து விடைபெற்றான்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவனின் படகை நோக்கி எறியப்பட்ட கூழாங்கற்களைப் போன்று, நம்முடைய வாழ்க்கையிலும் பல துன்பங்கள் வரலாம். உண்மையில், அவையெல்லாம் துன்பங்கள் அல்ல; சிறுவனின் படகை அவனிடம் கொண்டு சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட கூழாங்கற்கள் போன்று, நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்கள் நம்மை இறைவனுக்கு நெருக்கமாகக் கொண்டுசேர்க்கும் கருவிகள். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய பாடுகளை இரண்டாம் முறையாகத் தம் சீடர்களிடம் அறிக்கையிடுகின்றார். இயேசுவின் பாடுகள் நம்மை இறைவனுக்கு நெருக்கமாக இட்டுச் செல்லக்கூடியவை. ஆனால், இயேசுவின் சீடர்கள் இந்த உண்மையை உணராதவர்களாகவே இருந்தார்கள். இதைக் குறித்து எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைப் பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவை அரசியல் மெசியாவாக நினைத்த சீடர்கள்
நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம் தம் பாடுகளைக் குறித்து இரண்டாம் முறையாக அறிக்கையிடுவதைப் பற்றி வாசிக்கின்றோம். இயேசு தம் பாடுகளை சீடர்களிடம் அறிக்கையிட்டது அவர்களுக்குப் புரியவில்லை; ஆனாலும், அவர்கள் அதைக் குறித்து இயேசுவிடம் விளக்கம் கேட்க அஞ்சுகின்றார்கள். காரணம், இயேசுவின் சீடர்கள் இயேசுவை ஓர் அரசியல் மெசியாவாகப் பார்த்ததால்தான். அவர்கள் இயேசுவை அரசியல் மெசியாவாகப் பார்த்ததால், இயேசு எதற்குப் பாடுகள் படவேண்டும் என்று புரியாமல் இருந்தார்கள். மேலும் முன்பு ஒருமுறை பேதுரு, இந்தப் பாடுகள் உமக்கு வேண்டாம் என்று இயேசுவிடம் சொன்னதால், அவர் அவரைக் கடிந்துகொண்டதன் பொருட்டு (மத் 16: 22-23), சீடர்கள் இயேசுவின் பாடுகளைக் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சுகின்றார்கள்.
கோதுமைமணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்
மெசியாவாம் இயேசு ஏன் பாடுகள் படவேண்டும் என்பது சீடர்களுக்குப் புரியாத புதிராக இருந்திருக்கலாம்; உண்மையில் இயேசுவின் பாடுகள் நமக்கு மீட்பளிப்பவை, மேலும் அவை இறைவனோடு நம்மை மிக நெருக்கமாக, அவருடைய அன்பு மக்களாக மாற்றக்கூடியவை. யோவான் நற்செய்தியில் இயேசு இவ்வாறு கூறுகின்றார்: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவா 12: 24). அப்படியானால், இயேசுவின் பாடுகளே நமக்கு மீட்பையும் எல்லாவிதமான ஆசிகளையும் தரும் என்பது உறுதி.
நாம் இயேசுவினுடைய பாடுகளின் உட்பொருளை உணர்ந்து, அவருடைய வழியில் நடக்கத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்’ (மத் 16: 25) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவினுடைய பாடுகளின் உட்பொருளை உணர்ந்தவர்களாய், அவர் சென்ற துன்பங்கள் நிறைந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed