நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15
அக்காலத்தில்
பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இவ்வாறு சொன்னபின், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று உரக்கக் கூறினார்.
இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர். அதற்கு இயேசு கூறியது: “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே ‘அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்லை.’
இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது. பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்: சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள். முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.
நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
“கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்”
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘Quote’ என்ற சஞ்சிகையில் வந்த நிகழ்வு இது. ஒரு நகரில் கட்டடக் கலைஞர் ஒருவர் இருந்தார். இவர் பெரிய பெரிய கட்டடங்களையெல்லாம் கட்டியவர்; மக்கள் நடுவில் நல்ல பெயரோடும் இருந்தவர். ஒருநாள் இவருக்கு ‘நம்முடைய திறமையை நமக்குள் மட்டும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு பயன்படும் வகையில் அதைச் சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே!’ என்றோர் எண்ணம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இவர் ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட ஒரு சிற்றூரைத் தேர்ந்தெடுத்து, அந்தச் சிற்றூரில் கருத்தமர்வு நடத்தப் புறப்பட்டுச் சென்றார். அந்த ஊரை அடைந்ததும், கருத்தமர்வு பற்றிய துண்டுப் பிரசுரங்களை அவ்வூரில் இருந்த சிறுவர்கள், இளைஞர்கள் ஆகியோரிடம் கொடுத்து, மக்களிடம் கொடுக்கச் சொல்லி, கருத்தமர்வு ஊரில் உள்ள மண்டபத்தில் நடக்கும் என்றார்.
இவர் கொடுத்தனுப்பிய துண்டுப் பிரசுரங்களைப் பார்த்துவிட்டு ஊரில் இருந்த பலர் மண்டபதற்கு முன்பாகக் கூடினார்கள். இவரோ துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நேரம் வந்ததும், கருத்தமர்வைத் தொடங்கினார். இவர் கருத்தமர்வைத் தொடங்கினாலும்கூட, மக்கள் யாரும் மண்டபத்திற்குள் வரவே இல்லை; எல்லாரும் வெளியேதான் நின்றுகொண்டிருந்தார். இது இவருக்கு வியப்பைத் தந்தது, ‘இந்தக் கருத்தமர்வில் கலந்துகொள்வதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படும் போல என்று நினைத்துத்தான் மக்கள் மண்டபத்திற்கு உள்ளே வராமல், வெளியே இருக்கின்றார்களோ’ என்று எண்ணிக்கொண்டு இவர், மண்டபத்திற்கு வெளியே சென்று, “இந்தக் கருத்தமர்வில் கலந்துகொள்வதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது; இலவசம்தான்” என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு, இவர் மீண்டுமாக மண்டபத்திற்குள் வந்து, கருத்தமர்வை நடத்தத் தொடங்கினார். அப்பொழுதும் மக்கள் மண்டபத்திற்கு உள்ளே வராமல், வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். இவருக்குக் காரணம் புரியவில்லை. அதனால் இவர் மண்டபத்தை விட்டு வெளியே வந்து, அங்கிருந்தவர்களில் கொஞ்சம் படித்தவர் போன்று இருந்தவரிடம், “கருத்தமர்வில் கலந்துகொள்வதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது; இலவசம்தான் என்று சொல்லிவிட்டேனே! பிறகு எதற்கு நீங்கள் உள்ளே வராமல் இருக்கின்றீர்கள்?” என்றார்.
அதற்கு அந்த மனிதர், “அது வேறொன்றுமில்லை! கருத்தமர்வில் கலந்துகொண்டால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றார்கள். அதனால்தான் யாரும் உள்ளே வராமல், வெளியே இருக்கின்றார்கள்” என்றார். இதைக் கேட்டு, அதிர்ந்துபோன கட்டடக் கலைஞர், “என்ன! கருத்தமர்வை நடத்தும் நான், கருத்தமர்வில் கலந்துகொள்பவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டுமா…? வேடிக்கையாக இருக்கின்றது!” என்றார். உடனே அந்த மனிதர், “இதில் என்ன வேடிக்கை இருக்கின்றது! கருத்தமர்வை அல்லது உரையை யார் வேண்டுமானால் நிகழ்த்தலாம். அதைக் கேட்பதுதான் கடினமான செயல். அதனால்தான் மக்கள் கருத்தமர்வில் கலந்துகொள்வதற்கு நீங்கள் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கேட்கின்றார்கள்” என்றார்.
வேடிக்கையான நிகழ்வாக இருந்தாலும், உரையை நிகழ்த்துபவருக்குப் பணம் கொடுக்கின்ற காலம் போய், உரையைக் கேட்பவருக்குப் பணம் கொடுக்கவேண்டிய காலம் வந்தாலும் வரலாம் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்கூறுகின்றது. இயேசுவின் காலத்தில் பணம் கொடுத்து உரையைக் கேட்கசெய்த நிலை இல்லை; ஆனாலும் அவர் இன்றைய நற்செய்தியில், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்: என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கேட்கச் செவி இல்லாதவர்
நற்செய்தியில் இயேசு, விதைப்பவர் உவமையை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். இந்த உவமையைச் சொல்லிவிட்டு இயேசு, “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை. இவ்வுலகில் பிறந்த எல்லாருக்கும் செவிகள் இருந்தாலும், எல்லாரும் நல்லவற்றைக் கருத்தூன்றிக் கேட்பதில்லை. இயேசுவின் காலத்தில் இருந்த பரிசேயர்களுக்குச் செவிகள் இருந்தன. ஆனால், அவர்கள் இயேசு கூறியவற்றைக் கேட்கவில்லை; அவரிடம் குற்றம் காண்பதிலேயே குறியாய் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் காதிருந்தும் செவிடர்களாய், வழியோர நிலம் போல் இருந்தார்கள்.
கேட்கச் செவி உள்ளோர்!
செவிகள் இருப்பவரெல்லாம் கேட்பதில்லை என்று மேலே பார்த்தோம். அப்படியானால் ஒருவருக்குச் செவிகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்த, அவர் நல்லவற்றைக் கேட்டு, அதனைத் தன்னுடைய வாழ்வில் வாழ்ந்து காட்டவேண்டும்! அதுவே சிறந்த வழி. அந்த வகையில் ஒருவர் இயேசுவின் போதனையைக் கேட்டு, அதனைத் தன்னுடைய வாழ்வில் வாழ்ந்து காட்டினால்தான், அவர் தனக்குச் செவி உள்ளது என்பதை நிரூபிக்க முடியும். ஏனெனில், செவி சாய்த்தல் என்பது வெறுமனே கேட்டல் மட்டும் கிடையாது. கேட்டதன்படி வாழ்வது. அதுதான் செவி சாய்த்தால் என்பதற்கான அர்த்தமாகமாகும்.
ஆகையால், நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இரண்டு செவிகளைக் கொண்டு இறைவார்த்தையைக் கேட்போம். கேட்டதை வாழ்வாக்கி நல்ல நிலமாகி நூறுமடங்கு பலன் தருவோம்.
சிந்தனை
‘எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைப் பின்பற்றுவோர் நற்பேறு பெற்றோர்’ (நீமொ 8: 32) என்கிறது நீதிமொழிகள் நூல். ஆகையால், நாம் ஆண்டவருக்குச் செவிசாய்த்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed