
ஆயர்களே, அருள்பணியாளர்களே, திருத்தொண்டர்களே, துறவியரே, மற்றும், அருள்பணித்துவ மாணவர்களே, உங்களைச் சந்திப்பதற்காக நான் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கிறேன், இந்தச் சந்தர்ப்பத்திற்காக நான் இறைவனுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நேற்றைய எனது உரையில் நைல்நதி பற்றி கூறினேன். இன்று அதன் தொடர்ச்சியாக என் சிந்தனைகளை உங்களோடுப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புது பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார் (தீத் 3:5) என்ற இறைவார்த்தைகளின் அடிப்படையில், நைல்நதியின் இன்னொரு பரிமாணத்தைப் பார்ப்போம். இது திருமுழுக்கின் அடையாளமாக அமைகிறது. நைல் நதி மோசேயின் கதையை நமக்கு நினைவுபடுத்துகிறது. மேலும் விடுதலை மற்றும் மீட்பைப் பற்றியும் அது பேசுகின்றது.
மோசேயின் வாழ்வை நினைவில் கொண்டவர்களாய், இந்தத் தேசத்து மக்களுக்கு நாம் எவ்வாறு பணியாற்ற முடியும் என்பது குறித்துச் சிந்திப்போம். இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக மோசேயின் இரண்டு பண்புகள் குறித்த கண்ணோட்டங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.
மோசேயின் மனத்தாழ்மை
முதலாவதாக, மோசேயின் மனத்தாழ்மையும், கடவுளின் முயற்சிக்கு அவர் அளிக்கும் பணிவான பதிலுமே நம்மை வெகுவாக ஈர்க்கின்றன. முதலில் அவர் தன்னை மையமாக வைத்து, தனது பலத்தை மட்டுமே நம்பி செயல்பட்டார். அதன் காரணமாக அவர் தோல்வியைத் தழுவினார். பின்னர் எரியும் முட்புதரின் வழியே கடவுளுடன் உரையாடியபோது அவரது வாழ்வு முற்றிலும் மாறியது. அதாவது கடவுளின் தனிப்பெரும் வியக்கத்தக்க உதவியுடன் அவர் பார்வோனின் அடிமைத்தளையிலிருந்து இஸ்ரயேல் மீட்டுக்கொண்டு வந்தார்.
ஆம் அன்பர்களே, நாமும் மோசேயைப் போன்று நம்மை மட்டுமே மையப்படுத்தி செயல்படுகிறோம். நமது சொந்த திறமைகளையும் திறன்களையும் மட்டுமே பயன்படுத்தி பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்று நினைக்கின்றோம் அல்லது ஒரு திருஅவையாக, பணம், புத்திசாலித்தனம் அல்லது அதிகாரம் போன்ற மனித வளங்கள் வழியாக மக்களின் துன்பங்களுக்கும் தேவைகளுக்கும் விடை காண முடியும் என்று நாம் கருதுகின்றோம். ஆனால், நாம் நிறைவேற்றும் அனைத்து செயல்களும் கடவுளிடமிருந்தே வருகின்றன. அவர் நம் இறைவன், நாம் அவருடைய கரங்களில் பணிவான கருவிகளாக இருக்க அழைக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம்.
“ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்” என்று கூறி அவரை மனத்தாழ்மையுடன் அணுகிச் செல்கின்றார் மோசே. முட்புதரிலிருந்து கடவுள் மோசேயை அழைத்தபோது, ‘இதோ நான்’ என்று பதில்மொழி தருகின்றார். மேலும் “இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில், நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” என்று கடவுள் கூறியபோது, தனது மிதியடிகளை அகற்றிவிட்டு பணிவுடன் அவரது வார்த்தைக்குச் செவிமடுக்கின்றார் (காண்க விப 3:3-5) இங்குதான் மோசேயின் மனத்தாழ்மை வெளிப்படுவதைக் காண்கின்றோம்.
இதுவே நமது பணிவாழ்வில் நமக்கு இருக்கவேண்டிய மனத்தாழ்மை. மோசேயைப் போன்று வியப்புடனும் பணிவுடனும் கடவுளை அணுகுவதற்கும், அவரிடம் ஈர்க்கப்படுவதற்கும், அவரால் வழிநடத்தப்படுவதற்கும், அவரே நமது வாழ்வின் மையம் என்பதை உணர்ந்து கொள்வதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். மனத்தாழ்மையுடன் நாம் கடவுளால் உருவாக்கப்படுவதற்கு நம்மையே அனுமதிப்பதன் வழியாக நமது பணியில் புதுப்பித்தலை அனுபவிக்கின்றோம் என்பதை அறிந்துகொள்வோம்.
Source: New feed