இறைவனிடமிருந்து இவ்வுலக மக்களைப் பிரிக்கவும், மக்களிடையே பிரிவுகளை உருவாக்கவும் முயன்றுவரும் தீயோனிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இந்த அக்டோபர் மாதத்தில் ஒவ்வொரு நாளும், விசுவாசிகள், செபமாலையை செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பான விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருஅவைக்காக செபமாலை செபியுங்கள் என்று திருத்தந்தை விடுத்துள்ள விண்ணப்பத்துடன், இவ்வெள்ளியன்று ஒரு சிற்றறிக்கையை, திருப்பீட செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது.
செபமாலை அன்னை மரியாவின் மாதமான அக்டோபரில், ஒறுத்தல் முயற்சிகளோடு, ஒன்றிணைந்து செபமாலை செபிப்பதோடு, திருஅவையைப் பாதுகாக்க, தலைமைத் தூதரான மிக்கேலின் உதவியையும் நாடுவோம் என்று, திருத்தந்தை விண்ணப்பித்துள்ளதாக இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பால்டிக் நாடுகளில் தன் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாகவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த விண்ணப்பத்தை விடுத்தார் என்று கூறும் திருப்பீட தகவல் துறை, தீயோனை வெல்வதற்கு செபம் ஒன்றே சிறந்த வழி என்பதை, திருத்தந்தை மீண்டும் வலியுறுத்துள்ளதாக கூறுகிறது.