திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களான சுவிஸ் கார்ட்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டதன் 513ம் ஆண்டு நிறைவையொட்டி, பாப்பிறையின் சுவிஸ் கார்ட்ஸ் அமைப்பு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
1506ம் ஆண்டு சனவரி 22ம் தேதி, சுவிஸ் மெய்க்காப்பாளர் அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும், இந்த நாளைச் சிறப்பிக்கும் விதமாக, இச்செவ்வாயன்று நடைபெற்ற திருப்பலியில் வத்திக்கான் மருந்தகத்தில் பணியாற்றும் “Fatebenefratelli” சபையினர் மற்றும் வத்திக்கான் மருத்துவப் பணியாளர்கள் கலந்துகொண்டனர் என அந்த அறிக்கை கூறுகிறது.
“மதிப்புமிக்க பணி“ என்ற கருப்பொருளில், “1506 – பாப்பிறை மெய்க்காப்பாளர்கள் விளக்குகின்றனர்” என்ற தலைப்பில், இணையதளத்தில் செய்திகள் பரிமாறப்படும் எனவும், அந்த அறிக்கை கூறுகிறது.
சுவிஸ் கார்ட்ஸ்
திருத்தந்தையர் மற்றும் வத்திக்கான் நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும், திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்கள் அமைப்பு, 1506 ஆண்டில் திருத்தந்தை 2ம் ஜூலியஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது. 19க்கும், 30 வயதுக்கும் உட்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டு கத்தோலிக்க இளையோர், ஒவ்வோர் ஆண்டும் மே 06ம் நாளன்று, இந்த அமைப்பில் சேர்க்கப்படுகின்றனர். இவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டு இராணுவத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
1527ம் ஆண்டில் உரோம் சூறையாடப்படபோது, திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்களைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்ட சுவிஸ் வீரர்களில் 147 பேர், மே 6ம் நாள் கொல்லப்பட்டனர். அதன் நினைவாக, வத்திக்கானில், மே 6ம் தேதி சுவிஸ் கார்ட்ஸ் விழா சிறப்பிக்கப்படுகிறது. திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்களைப் பாதுகாப்பாக Castel Sant’Angelo என்ற இடத்திற்குக் கொண்டு சேர்த்தனர் சுவிஸ் வீரர்கள்.
Source: New feed