ஓயாத அலைகளாய்
ஓங்கி அடித்துக் கரைதேடி
உறங்காத விழிகளோடு
ஒவ்வொரு கணமும் உறவாடி
உரிமைகளை வென்றெடுக்க
உத்வேகமுடன் தினம் ஓடி
உள்ளத்தில் மாபெரும்
உறுதி கொண்டு களமாடி
உயிரிதழைக் காற்றிலூதி
உயரிய இலட்சியத்தீயில்
விழிமுடிப் போன எங்கள்
விடுதலைத் தீபங்களே !
உமக்கென ஒரு சுடரேற்றுகிறோம் – எம்
இதயக்கோவிலிலே
ஒரு முறை தரிசனம் தரவேண்டும் – எம்
உதய வேளையிலே.
சுவாசத்தில் சூழலும் காற்றில் – உங்கள்
மூச்சினை உணர்கின்றோம்.
வாசம் வீசும் பூக்களில் – நீங்கள்
வண்ணங்களாய் மிளிர்வதைக் காண்கின்றோம்
வானத்து வெள்ளிகளில் – நீங்கள்
புன்னகைப்பதைப் புரிந்துகொள்கிறோம்
மாவீரரே…
எங்கும் எதிலும் பொலியும்
உங்கள் முகம் காணத் துடிக்கும் எங்களுக்காய்
ஒரு முறை வரமாட்டீரோ?
காவலரண்களில் காவல்தெய்வங்களாய் – எதிரிகள்
கதை முடித்த களப்புலிகள் நீங்களெங்கே ?
எறிகணை மழை பொழிய
சுடுகலச் சன்னங்கள் சீறும்
பெருயுத்தக் களம் மீதில்
எரிதணலாய்ப் பொருதி
எமனையும் மலைக்க வைத்த
இமயங்களே!
உங்களுக்காக ஒரு மனப்பட்டுக் காத்திருக்கிறோம்
உள்ளத்தால் உருகி நிற்கிறோம்.
ஒருமுறை கண்திறப்பீரோ?
Source: New feed