2019ம் ஆண்டு, பிப்ரவரி 9ம் தேதி முதல், 11ம் தேதி முடிய, கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும், 27வது உலக நோயாளர் தினத்திற்கு, தனது பிரதிநிதியாக, பங்களாதேஷ் நாட்டின், டாக்கா பேராயர், கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ அவர்களை, இச்செவ்வாயன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில் உலக நோயாளர் நாள், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால், 1992ம் ஆண்டு, மே 13, போர்த்துக்கல் நாட்டு, பாத்திமாவில், அன்னை மரியா முதல் முறையாக காட்சியளித்த நினைவு நாளன்று உருவாக்கப்பட்டது. 1993ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 11, லூர்து அன்னை விழாவன்று, இந்த உலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது.
மேலும், குவாதலூப்பே அன்னை மரியா விழாவான டிசம்பர் 12, இப்புதன் மாலை 6 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.
1531ம் ஆண்டு டிசம்பர் 9ம் நாளன்று, மெக்சிகோ நாட்டின் குவாதலூப்பே எனுமிடத்தில், புனித ஹூவான் தியேகோ என்பவருக்கு, அன்னை மரியா முதல்முறையாக காட்சியளித்தார். இவ்வன்னை அமெரிக்காவின் பாதுகாவலர்.
திருப்பீட தலைமையக சீர்திருத்தத்தில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும், C-9 கர்தினால்கள் அவையின் 27வது கூட்டம், இரண்டாவது நாளாக, இச்செவ்வாயன்று, திருத்தந்தையின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், இப்புதனன்று நிறைவடையும்.
Source: New feed