நம் அன்றாட வாழ்வுப் பயணத்தில், மற்றவர் பேசுவதற்குச் செவிமடுத்து வாழ்வதால் ஏற்படும் பலனை, தன் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“செவிமடுத்தலும், நாம் பேசுவதற்கு முன்னர், உற்றுக்கேட்டலும், நம் விசுவாசப் பயணத்தில் வளருவதற்கு முதல்படி” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மேலும், 2019ம் ஆண்டு சனவரி முதல் நாளன்று சிறப்பிக்கப்படும், 52வது உலக அமைதி நாளுக்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி, டிசம்பர் 18, வருகிற செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“அமைதிக்காகப் பணியாற்றுவதே நல்லதோர் அரசியல்” என்பது, 52வது உலக அமைதி நாளுக்குத் தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 18, வருகிற செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், ஏழைகளுக்கு கிறிஸ்மஸ் விருந்தை வழங்கவுள்ளதாக திருப்பீட தர்மச்செயல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது.
Fiamme Gialle எனப்படும் விளையாட்டு குழு, Castelporzianoவிலுள்ள விளையாட்டு மையத்தில் இந்த கிறிஸ்மஸ் விருந்தை வழங்கவுள்ளது. இவ்விளையாட்டு வீரர்களே இவ்வுணவைத் தயாரித்து, ஏழைகளுக்குப் பரிமாறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையில் இருப்போருடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து, கிறிஸ்மஸ் பெருவிழாவை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்புக்கிணங்கி, வத்திக்கான் விளையாட்டு குழு, ஏழைகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து வழங்கும் நடவடிக்கையை முதலில் ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது
Source: New feed