கடவுளின் அன்பு மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் அன்பைக் கண்டு வியப்படையைக் கற்றுக்கொள்வோம். இந்த வியப்பையும் மகிழ்ச்சியையும், வீட்டிற்கு வீடும், பங்கிற்குப் பங்கும், நகரத்திற்கு நகரமும், மற்றும் நாட்டிற்கு நாடும் பரப்புவோம் என்றும், அவ்வாறு செய்வதன் வழியாக, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், ஆறுதலையும் தருகிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 20, வெள்ளி இன்று, கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி ACR அமைப்பின் இளையோரை திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, தேவையில் இருப்போருடன் எப்போதும் இணைந்திருங்கள் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
“ஆழத்திற்குச் செல்லுங்கள்” என்பதை இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இது முதல் சீடரின் அழைத்தலை நினைவுபடுத்துகிறது என்றும், மீனவர்களான அவர்களை இயேசு அழைத்து மக்களைப் பிடிப்பவர்களாக ஆக்கினார் (காண். லூக்கா 5:1-11) என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மீன்பிடித்தல் மற்றும் வியப்பு குறித்த இரண்டு படங்களைப் பற்றி அவர்களுடன் இணைந்து சிந்திக்க விழைவதாகக் கூறினார்.