கிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி

வருகிற திங்களன்று, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் பிறந்த நாளின் நூறாம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படுவதையொட்டி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், போலந்து நாட்டு ஆயர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களுக்குச் செயலராகப் பணியாற்றிய கர்தினால் Stanislaw Dziwisz அவர்களுக்கு, ஜெர்மன் மொழியில் மடல் எழுதி அனுப்பியுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனக்கு முந்தைய மாபெரும் திருத்தந்தை பற்றிய பசுமையான நினைவுகள் மற்றும், அவர் தன் வாழ்வில் ஏற்படுத்திய நல்தாக்கங்கள் பற்றி எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், தனக்கு அன்புக்குரிய நண்பராகவும், இரக்கம் மிகுந்தவராகவும் விளங்கினார் என்றும், திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல், கிறிஸ்து மீதும், திருஅவை மீதும் புதியதோர் ஆர்வத்தைத் தூண்டினார் என்றும் அம்மடலில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

“அஞ்சாதீர்கள், திறங்கள், கிறிஸ்துவுக்குக் கதவுகளை அகலத் திறங்கள்” என்று, திருத்தந்தையாகப் பணியேற்ற திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் அத்திருத்தந்தை கூறினார் என்றும், இவ்வாறு அவர் கூறியது, அவரின் தலைமைப்பணி முழுவதையும் உள்ளடக்குவதாக இருந்தது என்றும், அம்மடலில் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், 104 திருத்தூதுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார், அவர் சென்றவிடமெல்லாம், நற்செய்தியை, மகிழ்வின் செய்தியாக அறிவித்தார் என்று கூறியுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இவ்வாறு, கிறிஸ்துவுக்கு எது நல்லது என்பதை வலியுறுத்தும் அவரது கடமையை ஆற்றினார் என்று குறிப்பிட்டுள்ளார்.