நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு நல்ல நடைமுறைகள் தேவைப்படுகின்றன, கிறிஸ்து உரைத்த நற்பேறுகளே, கிறிஸ்தவ வாழ்விற்கான உண்மை வழி என இத்திங்களன்று காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘புதிய மது, புதிய தோற்பைகளுக்கே உகந்தது’ என்று இந்நாளின் நற்செய்தியில் கூறப்படும் வார்த்தைகளை மேற்கோள்காட்டி மறையுரையாற்றிய திருத்தந்தை, நமக்கு வழங்கப்பட்டுள்ள புதிய மது எனும் இறைவார்த்தையை, நம் புது நடவடிக்கைகளால் காக்கவேண்டும் என்று கூறினார்.
நம் புதிய வாழ்வு நடைமுறை என்பது, இயேசு எடுத்துரைத்த பேறுகள் சுட்டிக்காட்டும் வாழ்வாக இருக்கவேண்டும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் மேலும் கூறினார்.
மற்றவர்களைக் குறை கூறுவது, கிறிஸ்தவ வாழ்வு முறையாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குறைகூறி வாழும் முறை, உலகு சார்ந்த வாழ்வு முறை, தன்னல வாழ்வு முறை என்ற மூன்று வகை வாழ்வு முறைகளைச் சுட்டிக்காட்டினார்.
தன் மீதுள்ள குறைகளைக் காணத்தவறி, பிறர் மீது மட்டுமே குறை கண்டுபிடித்து வாழ்வதும், உலகுச் சார்ந்தவற்றையே நம்பி, அத்தகைய வாழ்வை அமைத்துக் கொள்வதும், தாழ்ச்சி உணர்வின்றியும், பிறர் மட்டில் அக்கறையின்றியும் நடந்துகொள்வது கிறிஸ்தவ வாழ்வாகாது என தன் மறையுரையில் மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்
Source: New feed